வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘Dubukku’ பகுப்புக்கான தொகுப்பு

தீவாளி!

பதிந்தவர் vavaasangam மேல் அக்டோபர் 21, 2006

ஒரு மாதத்துக்கு முன்னாலேயே கவுண்ட் டவுண் தொடங்கிவிடும். சனி ஞாயிறை ஒட்டி வந்தால் திங்கள்கிழமை வயத்துவலி வந்து பள்ளிக்கு லீவு போட திட்டம் ரெடியாக இருக்கும். முந்தின வியாழக் கிழமையே எனக்கு அடுத்த வாரம் வயத்துவலி வரும், லீவு வேண்டும் என்று லெட்டரைக் கொடுக்க கை பரபரக்கும். ஜிகிடி அறியாப் பருவத்தில் ட்ரஸில் அவ்வளவு மோகம் இருந்ததில்லை. ஒருதரம் பெண்களின் பாவடை துணி டிசைன் பிடித்து விட அதில் தான் ட்ராயர் வேண்டும் என்று அடம் பிடித்து தைத்துப் போட்டுக்கொண்டது கூட நினைவில் இருக்கிறது. நான் விட்ட உதாரில் என்னைப் பார்த்து இன்னும் நாலு வானரங்கள் வீட்டில் அடம் பிடித்து சூடு போட்டுக்கொள்ள அந்த தீபாவளிக்கு நாங்கள் பாவாடை சாமியார்களாக உலா வந்ததைப் பார்த்து ஊரில் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். இதையே அப்புறம் ஒரு பத்து வருஷம் கழித்து பிரிண்டட் ஷர்ட்ஸ் என்று மெட்ராஸில் பேஷனாக்கிவிட்டார்கள். (நாங்க யாரு தீர்க்க தரிசி பரம்பரைல்ல..) ட்ரஸ்ஸை விட அதன் கூட வரும் துக்கடாவில் தான் கவனம் இருக்கும். ஜிகு ஜிகு பெல்ட், ஊதா கூலிங் கிளாஸ், தொப்பி, செருப்பு என்று சுரேஷ், சீனி, வாசு, மணி என்று எல்லோரோடும் ரவுண்டு வரும் போது பந்தாவா இருக்கும்ல. ஊதா கூலிங் கிளாஸைப் போட்டுக்கொண்டு காலை நாலு மணிக்கு லெட்சுமி வெடியை பத்த வைக்கிறேன்னு வெடி அல்ரெடி பற்றியது தெரியாமல் குத்த வைத்துக் கொண்டு பத்தியை வைத்துக் கொண்டு தடவு தடவுன்னு தடவியதில், வெடி வெடித்து அடுத்த தீவாளியிலிருந்து கூலிங் க்ளாஸுக்கு வேட்டு வைக்கப்பட்டது. நல்லவேளை அந்த தரம் எனக்கு எதுவும் சேதாரம் இல்லை.

தீபாவளியை ஒட்டி சினிமா ரிலீஸ் தவிர எங்கள் வட்டத்தில் பேசப்படும் இன்னொரு முக்கியமான டாபிக் யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்கிறார்கள் என்பது. நூறு ரூபாய்க்கு வெடி வாங்குபவர்கள் எல்லாரும் வி.ஐ.பி ஸ்டேடஸ். என்ன தான் அண்டப் புளுகு புளுகினாலும் வீட்டு வாசலில் வெடிக் குப்பை இருந்தால் தான் நம்பப்படும். “நல்ல நாள் அதுவுமா ஏண்டா தெருவெல்லாம் பெருக்கற?” அம்மா எவ்வளவு புலம்பினாலும் யாரும் பார்க்காத போது அடுத்த வீட்டுக் குப்பையையெல்லாம் பெருக்கி நம்வீட்டில் போட்டால் தான் பந்தா விடுவதற்கு நிம்மதியாக இருக்கும். அணுகுண்டையெல்லாம் நான் ஒத்தக் கையாலயே பத்த வைத்து போடுவேன் தெரியுமான்னு பத்தவைத்து எங்கயாவது போட்டு “வானரம் அவதாரம் எடுத்து அப்படியே வந்திருக்கு”ன்னு நாலு பேர் புகழும் போது எவ்வளவு ஆனந்தம். இந்த மாதிரி வயத்தெரிச்சல் சில சமயம் அதிகமாகி லெட்சுமி வெடி கையிலேயே வெடித்து, இதெல்ல்லாம் அண்ணனுக்கு தூசு என்று உதார் விட்டு ஒருத்தரும் பார்க்காத போது ஓரமாய் போய் தண்ணீரில் கைவிட்டு “அவ்வ்வ்வ்வ்வ்” என்று அரற்றி, அடிக்கடி வாயில் விரலை வைத்து சூப்பி பக்கோடா காதர் மாதிரி முழித்த அனுபவமும் உண்டு. ராக்கெட்டைப் படுக்கவைத்து தான் விடுவோம்ன்னு தெருவில் வானர மாநாட்டில் ஒரு கும்பலாக தீர்மானம் எடுத்து விட்டு அது ரோட்டில் போவோர் வருவோரை துரத்த…அடுத்த கட்டமாக அவர்கள் எங்களைத் துரத்த..இதெல்லாம் இல்லாத தீபாவளி தீபாவளியா என்று இருக்கிறது.

மாடு விரட்டி கணேசா…எங்க வீட்டுல இந்த தரம் ஐந்நூறு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்குன்னு கடை பரப்பி பந்தா விட்டுக்கொண்டிருக்க..”எங்க ஒரு தரைச் சக்கிரத்தைப் பத்த வைத்துக் காட்டு பார்ப்போம்”ன்னு ஒரு வானரம் உசுப்பேத்திவிட…அவனும் அங்கேயே பத்த வைத்து அது சுத்தி சுத்தி எல்லாவெடியையும் பத்த வைத்து விட, அவர்கள் வீடு வாசலறையில் இரண்டு நாள் முன்னாடியே தீபாவளி வந்து விட – அது என்னம்மோ அவ அப்பாவுக்கு ரொம்ப பிடிக்காமல் அவன் முதுகிலேயே தீபாவளி கொண்டாடிவிட்டார்.

காலை இரண்டு மணிக்கு இந்தப்பக்கம் ஒரு அனுகுண்டை வைத்து தெருவில் எல்லாரையும் எழுப்பினால் அந்தப் பக்கம் இன்னொரு வானரம் பதில் அனுகுண்டைவைத்து சங்கேத மொழி பேசும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு போல இருக்கு. ஒரு மணி நேரம் வெடி போட்டுவிட்டு டி.வி. பொட்டி முன்னால் மஙக்ள இசை, நடிகர்கள் வாழ்த்து, நடிகைகள் பேட்டி, புதுப்பாடல், பட்டிமன்றம், உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப் படும் படம் என்று தீபாவளி கொண்டாடும் முறையே மாறிவிட்டது.

குறையாகச் சொல்லவில்லை…மாற்றுங்களைய்யா…டீ.வி. பொட்டியிலிருந்து வெளி வந்து சந்தோஷமாக இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்…குடும்பத்தோடு தெருவிற்கு வாங்கள்..(தீபாவளிக்கு கொண்டாடுவதற்குச் சொன்னேன்பா) மக்களோடு மக்களாக சந்தோஷமாக கொண்டாடுவோம். சாலமன் பாப்பையாவும், நமீதாவும் எங்கேயும் போய்விட மாட்டார்கள்.. நாம் வெளியில் வந்து கொண்டாடினால் இன்னும் நாலு பேர் வருவார்கள்…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!

.... இங்கே பதியப்பட்டது Dubukku | 15 மறுமொழிகள் »

சையன்ஸ் பிக்க்ஷன் மாதிரி..

பதிந்தவர் vavaasangam மேல் அக்டோபர் 15, 2006

“உட்காருங்கள்..இன்னும் பத்து நிமிஷத்தில் பிரசாத் உங்களை அழைப்பார்” – எல்லா ஆஸ்பத்திகளிலும் வழக்கமாய் சொல்லுவது போல் டாக்டர் என்று சொல்லாமல் பிரசாத் என்று அந்த அழகுப் பதுமை சொன்ன போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஒருவேளை டாக்டருக்கும் ரிசப்ஷனிஸ்டுக்கும் ஒரு இது இருக்குமோ?” அவன் மனம் நதிமூலம் ஆராய முற்பட்ட போது ஒரு அதட்டு போட்டு மனதை அடக்கிக் கொண்டான். அவள் இவன் நினைப்பதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஐஸ்குச்சி மாதிரி எதையோ வைத்துக் கொண்டு நளினமாய் நகத்தை ராவிக் கொண்டிருந்தாள்.

ஒரு கடி கடிச்சு இழுத்து துப்பி எறியாமல் ஏன் இந்த இழவ இப்படி சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. நல்லவேளை அவன் பொறுமையை இழப்பதற்கு முன்னால் பிரசாத் உள்ளே அழைத்துவிட்டார்.

“ஹலோ டாக்டர்…ஐ ஆம் சந்திரா”

“சந்திரா நீங்க என்னை பிரசாத்னே கூப்பிடலாம்..டாக்டர் எல்லாம் அவசியம் இல்லை”

“ஏன் நீங்க இன்னும் டாக்டர் பரீட்சை பாஸ் பண்ணவில்லையா?”

“ஹா ஹா குட் ஒன். சொல்லுங்க…ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?”

“மிஸ்டர் பிரசாத் எனக்கு கொஞ்ச நாளா ஒரு பிரச்சனை. சாரி இது பிரச்சனையான்னே எனக்குத் தெரியாது…எதுக்கும் ஒரு ஒபினியன் கேட்கலாம்னு தான் வந்திருக்கேன்” – சொல்லிக் கொண்டே கொண்டுவந்திருந்த பையிலிருந்து அந்த அழகான கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் பந்து வடிவத்திலிருந்த அந்த டிஜிட்டல் கடிகாரம் பேக்லிட்டில் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.

“வாவ் அழகா இருக்கே..கண்டிப்பா நம்மூர்ல செஞ்சது இல்லை போலிருக்கே…அமெரிக்காவா ஐரோப்பாவா இல்லை சைனாவா?”

“எனக்குத் தெரியாது மிஸ்டர் பிரசாத். இது என்னோட நண்பன் கிட்டேர்ந்து என்னிடம் வந்தது. பிரச்சனையைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என் நண்பன் ராகவ் இதை மூன்று மாதங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான்…அவனுக்கு கிஃப்டாக வந்ததாம் இந்த கடிகாரம்” அவன் சொல்லிக் கொண்டே அடிக்கடி அந்தக் கடிகாரத்தை பத்து நொடிக்கொருமுறை பார்த்துக் கொண்டான்.

“மிஸ்டர் சந்திரா இந்தக் கடிகாரம் உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது என்று நினைக்கிறேன். இதை சொல்லி முடிக்கும் வரையில் நாம் தவிர்க்கலாமே” பிரசாத் தனது கைக்குட்டையினால் அந்தக் கடிகாரத்தை மூடினான்.

“யெஸ் பிரசாத் யூ ஆர் ரைட். கொஞ்ச நாளாக நான் இந்த கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு விநோதமான பிரச்சனை. நான் பார்க்கும் போதெல்லாம் நேரம் யுனீக்காக இருக்கிறது. 12:12, 10:10, 07:07, 12:34 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..”

“ம்ம்..அது உங்கள் மனதை உறுத்துகிறது ரைட்?”

“எக்ஸாட்லி”

“இதில் சலனப்படுவதற்கு ஒன்றும் இல்லை சந்திரா..இது ரொம்ப நார்மல்..ஜஸ்ட் கோ இன்ஸிடென்ஸ்…இந்தக் கடிகாரத்தின் அழகு உங்களை கவர்ந்திருக்கலாம்..அதனால் நீங்கள் இதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கலாம்…நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த நேரங்கள் அந்த வித்தியாசமான நொடிகளாய் இருந்திருக்கலாம்…இந்த விபரங்களை ஒரு முதுகலை கணித மாணவனிடம் கொடுத்தால்..கணக்கு போட்டு உங்களுக்கு இது நிகழக் கூடிய ப்ராபபலிட்டியை சொல்லிவிடுவார்கள். ரொம்ப சிம்பிள் உங்களை மாதிரி நானும் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கும் நிகழக் கூடியது தான் இது”

“எனக்குப் புரிகிறது டாக்டர். என் நண்பன் இதைக் கொடுத்தான் என்று சொன்னேன் அல்லவா…அவனுக்கு இதே பிரச்சனை என்று சொல்லி தான் என்னிடம் வந்தான். நானும் நீங்கள் சொன்ன மாதிரியான விளகத்தைச் சொல்லி தான் இந்தக் கடிகாரத்தை வாங்கிக் கொண்டேன் “

“ஹூம்…வெல்டன் அப்புறம் என்ன…”

“என் நண்பன் கூடுதலாக ஒரு விபரம் சொன்னான். நான் முன்பு சொன்ன நேரங்கள் தவிர்த்து அவனுக்கு 99:99 என்ற நேரமும் அடிக்கடி தெரிவதாக சொன்னான். அது தான் கொஞ்சம் இடித்தது. நானும் கடிகாரத்தில் கோளாறு இருக்கலாம் என்று அவனிடமிருந்து வாங்கி வைத்தேன். இதுவரை நான்கு கடைகளில் கொடுத்து செக்கப் செய்தாயிற்று. கடிகாரத்தில் பிரச்சனையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவன் சொன்னதை சரிபார்ப்பதற்காக நானும் அடிக்கடி கடிகாரத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நார்மலாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கும் அடிக்கடி 99:99 தெரியா ஆரம்பித்து இருக்கிறது..அதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்”

“இன்ட்ரெஸ்டிங்…ம்ம்ம்….ஹாலூசினேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“கேள்விப் பட்டிருக்கிறேன்…”

“மாயை..சில சமயம் நமது மனம் மூளை இவை விசித்திரமாக செயல்படும். நமது மூளை இருக்கிறதே..அதன் அமைப்பு அவ்வளவு விந்தையானது, சிறப்பானது. மருத்துவ உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஒன்று மனித மூளையின் செயல்பாடுகளை புரிந்து செயல் படுத்த முயன்று கொண்டிருக்கும் ஆராய்ச்சி. எந்த அளவில் என்று தெரியுமா? லட்சத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இதில் ஒரு பகுதியையாவது கிழித்துவிடுவோம் என்று ஐ.பி.எம்மும் ஸிவிஸ் விஞ்ஞானிகளும் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த ஹாலுசினேஷன் என்பது மூளையின் பில்லியன் கணக்கான ந்யூரான்களில் ஏற்படும் ஒரு கெமிக்கல் எஃபெக்ட். சில பேருக்கு குரல்கள் கேட்கலாம்..சில பேருக்கு உருவங்கள் தெரியலாம். அந்த மாதிரியாக உங்கள் நண்பர் சொன்னதிலிருந்து நீங்கள் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பத்னால் வந்த விளைவு தான் இது. கவலையே படாதீர்கள்…நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். குணப்படுத்திவிடலாம். ஆனால் அதற்கு முன்னால் உங்களை இன்னும் தரோவாக செக்கப் செய்யவேண்டும்

“எனக்கு என்னமோ இது அது மாதிரி தெரியவில்லை டாக்டர்”

“சந்திரா நான் சொன்ன மாதிரி நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று நான் சந்தேகம் தான் படுகிறேன். நான் சில டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து விட்டால் அதுவும் தெரிந்துவிடும்…என்ன சொல்லுகிறீகள்”

“செலவு..”

“நிறைய ஆகாது வெறும் டெஸ்டுகள் தான்…நீங்கள் நாளை காலை வாருங்கள்..அதற்கு முன்னால் இந்த கடிகாரத்தையும் எனக்குத் தெரிந்த இடத்தில் கொடுத்து சோதித்து பார்த்துவிடுவோம்..கடிகாரம் தான் பிரச்சனை என்றால்…ரிப்பேர் சார்ஜ் மட்டும் கொடுங்கள் போதும் என்ன..ஹா ஹா”

சந்திரா அந்த ஜோக்கை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவன் கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பிச் சென்றதிலேயே தெரிந்தது.

“பிரசாத் இன்று நீங்கள் மிஸ்டர் ரெட்டியை சந்திப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்” ரிசப்ஷன் பதுமை பதவிசாக வந்து நியாபகப் படுத்தியபோது பிரசாத் அந்த மெடிகல் ஜார்னலில் ஆழ்ந்திருந்தான்.

“ஓ மை காட் மறந்தே போய்விட்டேன்…இதோ கிளம்புகிறேன்…இன்றைக்கு வந்த ஆள் நாளை மீண்டும் வருவான்…அவனுக்கு இனிஷியல் டெஸ்ட் ஒன்று செய்ய ஏற்பாடு செய்துவிடு..ஆரம்ப கட்டமாய் தான் தோன்றுகிறான்..பார்ப்போம்”

டாக்டர் பிரசாத் பக்கத்திலிருந்த பாத்ரூமில் முகம் கழுவிப் புறப்பட்டான். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கண் அநிச்சையாய் சந்திராவின் கடிகாரத்தில் மணி பார்த்தது…துல்லியமாக 99:99 என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டியது.

பி.கு- இந்தக் கதைக்கும் வேறொருவரின் வலைப்பதிவுக்கும், எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விபரங்கள் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்.

பி.கு2 - இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்…போதும் நிறுத்திகிரலாம் :)

.... இங்கே பதியப்பட்டது Dubukku | 17 மறுமொழிகள் »

ஞாபகம் வருதே…

பதிந்தவர் vavaasangam மேல் அக்டோபர் 8, 2006

தமிழ் திரைப்படங்கள் கேன்ஸரை விட்டு விட்டு செல்க்டிவ் அம்னிஷியாவை கையிலெடுப்பதற்கு முன்னரே எனக்கு சின்ன வயதிலேர்ந்து இந்த வியாதி உண்டு. “ஜிஞ்ஜினக்கு ஜனக்கு சொல்லித் தரேன் கணக்கு”- பாட்டெல்லாம் கரெக்டாக நல்லா நியாபகம் இருக்கும் ஆனால் ஒன்பதும் பன்னிரெண்டும் எவ்வளவுடா என்றால் திருதிருதரேஷ்வரா தான். இதில் தெரிந்த குடும்ப வட்டத்தில் ஒரு மாமா மனக்கணக்கு போட்டால் தான் புத்திசாலிப் பட்டம் வழங்குவார். தெருவில் கல்யாணம், சீமந்தம் எல்லாத்திலும் என்னைப் போன்ற வாண்டுகளைப் பிடித்து வைத்துக் கொண்டு “ஐந்து மாம்பழத்தை நான்கு பேர்களுக்கு சமமாய் பங்கு போட்டுக் குடுக்கனும்னா எத்தனை துண்டங்கள் போடவேண்டும்” என்று அமிதாப்பச்சன் மாதிரி கேள்வியெல்லாம் கேட்பார். “நறுக்க வேண்டாம் அப்படியே காக்கா கடி கடிச்சுக்கலாம்”னு சொன்னா ஒத்துக் கொள்ள மாட்டார். “ஒருத்தன் பத்து எருமைகளை குளிப்பாட்ட போன போது இரண்டு எருமைகள் ஆத்தோடு போச்சு, ஒரு எருமை தானா வீடு வந்து விட்டது..அப்போ அவன் திரும்ப வரும் போது எத்தனை எருமைகளை ஓட்டிவருவான்”- வித விதமாய் கணக்கு கேட்பார். பேப்பர் பேனாலாம் கிடையாது. விரலை மடக்க கூடாது எல்லாம் மனக் கணக்கு தான்.அவரப் பார்த்தாலே நான் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொள்வேன். உள்ளே விரலை மடக்கி கூட்டிக் கழித்து விடையைச் சொன்னால் “தப்பு…இதுக்குத் தான் வெண்டைக்காய் நிறைய சாப்பிடனும்..அப்போ தான் நியாபக சக்தி நிறைய வரும் ” என்பார். மாம்பழம் பங்கு போடறதுக்கும், எருமை மாட்டைக் குளிப்பாட்றதுக்கும் போய் எவனாவது கொழ கொழ வெண்டைக்காயை சாப்பிடுவானா என்று புத்திசாலித்தனமாய் இருந்ததில், சின்ன வயதிலிருந்தே சயன்ஸில் வீக், அத்தோடு இந்த செலக்டிவ் அமினிஷியா வியாதியும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்க தாத்தாவைப் பொறுத்த வரை மனக்கணக்கு அவிழ்த்து விட்ட குதிரை மாதிரி ஓடவேண்டும் என்பார். எங்க…எனக்கு கணக்கு பேச்சு எடுத்தாலே நம்மள அவிழ்த்து விட்டா ஓடிவிடலாம் என்று தான் தோன்றும். கணக்கு மட்டும் இல்லை மற்ற பாடங்களும் பரீட்சை வரை தான் நியாபகம் இருக்கும் அப்புறம் நாமா இதைப் படிச்சு எழுதினோம்ன்னு இருக்கும். அப்புறம் தான் இது படிப்பு பிரச்சனை இல்லை நியாபகமறதிப் பிரச்சனை என்று தெளிவாச்சு. கல்யாண நாளை கேட்டால் டக்கென்று சொல்லிவிடுவேன் ஆனால் வருஷத்தை கேட்டால் சில சமயம் கஜினி மொட்டை சூர்யா மாதிரி மண்டைய அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டி பத்து விநாடி ஆகும் விடை வருவதற்கு. முதலில் வீட்டுக்காரியின் பிறந்தநாளும் இப்படித் தான் இருந்தது அப்புறம் வேப்பிலையடித்ததில் சரியாகிவிட்டது. வீட்டில் இந்த விஷயத்தில் கொஞ்சம் கெட்டி. பேப்பர் பேனா கிடைக்காவிட்டால் இந்த நமபரை கொஞ்சம் நியாபகம் வைச்சுக்கோ என்று சொல்லி விட்டு அப்புறம் கேட்டால் டாண் என்று வரும். ஆனால் அதான் எனக்குப் பிரச்சனையே. “கல்யாணப் பரிசு” தங்கவேலு மாதிரி அடிக்கடி மாட்டிக்கொள்வேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மாதிரி இப்பவும் பயப்படுவது ஒரு விஷயத்துக்கு என்றால் அது கோயிலில் அர்சனைக்குத் தான்.(ஹூம் கோயிலுக்குப் போறதே ரொம்ப அபூர்வமாகி விட்டது இப்பவெல்லாம்). குடும்ப சகிதமாய் போய் தான் அர்சனை வைப்போம் என்பதால் வசமாய் மாட்டிக்கொள்வேன். அர்சகர் அர்சனை சீட்டைக் குடுத்தால் பூஜை செய்வார் என்ற பாடு கிடையாது. பெயர் நட்சத்திரம் கேட்க ஆரம்பித்துவிடுவார். நமக்கு அங்கே தான் உதறலே..தங்கமணி குஷியாய் பின்னால் இருந்து நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார். 99 சதவீதம் பெயர் மட்டும் தான் கரெக்டாக இருக்கும் நட்சத்திரத்தை குழப்படி செய்துவிடுவேன். அப்புறம் தங்கமணி புகுந்து கரெக்ட் செய்து அம்மனுக்கு சாதா அர்ச்சனையும் எனக்கு தங்கமணியின் கடைக்கண் ஸ்பெஷல் அர்சனையும் நடக்கும். “நான் தடுமாறும் போது உனக்கு ஒரு அல்ப சந்தோஷம் பாரு…அதுக்காகததான் இதெல்லாம்…உங்கண்ணன்கிட்ட உன்ன சந்தோஷமா வைச்சிகிறேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்…அதுக்குத் தான் இந்தமாதிரியெல்லாம்” ஹூம்…என்ன சமாளித்தாலும் எடுபடாது கோயிலில் துப்ப முடியாது என்பதால் “க்ர்ர்ர்ர்ர்…” என்று பி.ஜி.எம்முடன் நிப்பாட்டிக் கொள்வார்.

பெரும்பாலான கல்யாணமான பெண்களிடன் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கல்யாணமான புதிதில் நடந்த ஸ்டாடிஸ்டிக்ஸில் எல்லாம் நோண்டி நொங்கெடுப்பார்கள். இந்த ஹோட்டல் நியாபகம் இருக்கா? …இந்த புடவை நியாபகம் இருக்கா?.. எங்க எனக்கு இனிமே நடக்கப் போறதே நியாபகம் இருக்காது இதுல எப்பவோ நடந்ததெல்லாம் கேட்கவே வேண்டாம். ஆனா வாயக் குடுத்து மாட்டிகிறது கூட பொறந்த குணம். “சலங்கை ஒலி ஜெயப்பிரதா இதே கலரில் புடவை உடுத்திக் கொண்டு வருவாரே” என்று ஒரு தரம் சொல்லி அன்னிக்கெல்லாம் ஏக மரியாதை தான்.

சரி இந்தப் பிரச்சனையை இதுக்கு மேலும் வளரவிடக் கூடாது என்று இப்பவெல்லாம் வெண்டைக்காய் நிறைய சாப்பிடறேன்…ஆனா சலங்கை ஒலி ஜெயப்பிரதா மாதிரியான ஸ்டாஸ்டிக்ஸ் மட்டும் தான் நியாபத்துல நிக்குது. இந்த செலெக்டிவ் அமினீஷியாவிற்கு என்னிக்கு விடிவு காலம் பொறக்குமோ தெரியல. “சலங்கை ஒலி” ஜெயப்பிரதா தான் நல்ல வழி காட்டனும் !!

.... இங்கே பதியப்பட்டது Dubukku | 30 மறுமொழிகள் »

அன்புள்ள விநாயகம்,

பதிந்தவர் vavaasangam மேல் அக்டோபர் 2, 2006

அன்புள்ள விநாயகம்
நலம் நலமறிய அவல். என்னாடா டுபுக்கு அதிசயமா நமக்கு லெட்டர்லாம் எழுதறானேன்னு நினைக்காத, உன்னை மாதிரி ஆத்தங்கரையோரமா உட்கார்ந்துகிட்டு குளிக்கப் போகிற பிகர்களை லுக்குவிட்டுக்கிட்டு கொழுக்கட்டைய தின்னுக்கிட்டு ஒய்யாராமா உட்கார்ந்திருக்கிற பொழப்பில்ல என்னுது. நாயாப் பேயா ஓடியாடற பொழப்பு. ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளாக்குல ஐம்பதாவது எட்டிப்பார்த்து “:))))))”- ஸ்மைலியோ, “சூப்பர் கலக்குறீங்க”ன்னோ, “எதார்த்தமான நடை..நல்லாருக்கு”ன்னோ, “இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்”ன்னோ கமெண்டு போட்டாத்…தேன்…நம்ம கல்லாவுல இருபத்து சொச்சம் கமெண்டாவது தேறும். இதெல்லாம் இல்லாம “இன்னிக்கு இன்னிக்கு மூடே சரியில்ல…”ன்னு ஒத்த வரில போடற மொக்கை போஸ்டுக்கெல்லாம் “ப்ளீஸ் கம் பேக் சூன்”…”டேக் கேர்”…”நல்ல பாட்டு கேளு”..”காலாற நடந்து வாகிங் போயிட்டுவா”..”உனக்குமா??..எனக்கும் :) “, “வில் மிஸ் யூ”…ன்னு நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன…தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?

ஏதோ நாணுன்டு என் இருபது சொச்ச கமெண்டுண்டுன்னு இருந்தா, சும்மா கிடக்கிற சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டின்னு சங்கத்துல இழுத்துவிட்டுடாரு கைப்ஸ். சரி ஏதோ சங்கதுல கூப்பிட்டு “அட்லாஸ்”ன்னு மரியாதை செய்யப்போறாங்கன்னு இங்க வந்து பார்த்தா…ஆளாளுக்கு தர்ம அடிக்கு சவுண்டு விட்டுக்கின்னு இருக்காங்க. அப்பனே விநாயகம்…எனக்கு பயமாயிருக்கு காப்பாத்தைய்யா.

அப்பனே விநாயகம் உன்னை எனக்கும் உனக்கும் இன்றைக்கு நேற்றைக்கா பழக்கம்? உனக்கு நினைவிருக்கிறதா…97ல் நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் நடந்து போய்கொண்டிருக்கும் போது ஒரே கூட்டம். என்னடா கூட்டம் என்று வந்து கொண்டிருந்த மார்வாரியைக் கேட்க..”விநாயம் பால் குடிக்கிறான்..” என்று ஏதோ சேட்டு விட்டு பிள்ளை பால் குடிப்பது போல் சொல்லிவிட்டு போக…(அழகாய் இருக்கும்)மிஸ்.ரீனாவின் யுனிக்ஸ் ஷெல் ஸ்கிரிப்டிங் க்ளாஸ் போனால் போகிறது என்று கூட்டத்தை..நெருக்கியடித்துக்கொண்டு முன்னால் வந்து நீ பால் குடிக்கும் அழகைப் பார்த்து பக்தியுடன் தலையிலடித்துக் கொண்டவனல்லவா நான். ஆமாம் விநாயகம்…நீ பால் குடிக்கும் பருவத்திலிருந்தே உன்னை எனக்குத் தெரியும்.

ஏதோ பால் குடிச்ச..அத்தோடு நிப்பாட்டிக்கோ…இல்லைன்னா..உன் பெயரச் சொல்லி எங்க வீட்டுலல்லாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கொழுக்கைட்டையை அடுத்த வருஷத்திலிருந்து ஆஞ்சநேயருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிவிடுவார்கள் என்று எவ்வளவு உரிமையோடு உனக்கு அறிவுரை சொல்லியிருப்பேன்? ஊரார் சிரிக்கச் சொல்லுவார் உற்றார் உரைக்கச் சொல்லுவார் நீ புரிந்து கொண்டிருப்பாய்.

“நான் சின்னப் பையன், சங்கத்தில் இருக்கும் பிள்ளைகள் அளவுக்கு இன்னும் வாலிப வயது வரவில்லை” என்று கைப்பிள்ளையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்…கேட்டால் தானே. இங்கு வந்து பார்த்தால் ஒரு பெரிய கூட்டமே எனக்கு ஆப்பு வைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது…ரொம்ப பயமாய் இருக்கிறதப்பா…தயவு செய்து அவர்களை காப்பாத்து…உன்னை ரொம்ப வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

பி.கு – அன்பார்ந்த சங்கத்து சிங்கங்களே…இந்த மாதம் முழுக்க நானும் உங்களில் ஒருவன். ஆதலால் நமக்கு நாமே திட்டதைக் கைவிட்டு வேறு யாருக்காவது செல்லமாக மனதை புண்படுத்தாமல் ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி இந்த ஆப்பு ஐடியாவிற்கு நன்றி

வலையுலக மக்களே – சும்மா எத்தனை நாள் தான் கொசுவத்தியை சுத்த விட்டு மலரும் நினைவுகளை சொல்லுவது? நானும் தர்ம அடி வாங்க வேண்டாமா? அதனால் உங்களில் வாரம் ஒரு அதிர்ஷடசாலியை கிறுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்ல ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆப்பு கண்டிப்பாக பலமாகவோ மனதை புண்படுத்துமாகவோ இருக்காது. எங்க ஊர் மரியக்கா நர்ஸ் ஊசி போடுவது மாதிரி சிலசமயம் ஆப்பு உங்களுக்குத் தான் என்பதே தெரியாமல் போகலாம். சும்மா அறிவுஜீவித்தனமாக (??!!) காட்டிக்கொள்வதற்காக உங்கள் பெயரே இருக்காது…சின்ன க்ளூ மட்டும் தான் பதிவுகளில் இருக்கும். அடியேனின் கன்னி முயற்சிக்கு ஆப்பு வைச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ் !!
ஓ.கே தர்ம அடி …ரெடி ஸ்டார்ட் :) ஸ்டார்ட் மீசிக்

.... இங்கே பதியப்பட்டது Dubukku | 45 மறுமொழிகள் »