
பாஸ்டன் பாலாஜி
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்திற்கு நூறாவது பதிவு. ‘காதலன்’ படத்தில் வடிவேலுவின் டிக்கி லோட் செய்வது போல் சிறப்பாக வெளிப்பட, ஸ்மைலி நிறையப் போட்டுத் தள்ளுவதாலோ என்னவோ, என்னை அழைத்திருக்கிறார்கள். ஏகோபித்த வரவேற்பையும் அன்றாட வாடிக்கையாளர்களையும் கொண்ட வ.வா.ச.வில் எழுத அழைத்ததற்கு நன்றி.
இவ்வளவு நாள், நீங்கள் ஆழ்துயிலில் அமிழ்ந்திருக்கா விட்டால் ‘கைப்புள்ள லொள்ளு சபா’வாம் வவாச-வை மிஸ் செய்திருக்க முடியாது. அப்படி உறக்கத்தில் இருந்து விழித்தவர்களுக்காக அட்டெண்டன்ஸ் ரெகார்ட்.
வம்சாவளி:
யூத்தாக இருக்கவேண்டும் என்றால் சிலர் தலைக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் உபயோகிப்பார்கள். நான் சட்டையை, பேண்ட்டுக்குள் திணித்து, ஜீன்ஸ், டி-சர்ட், அரைக்கால் சட்டை என்று ஒப்பேத்துவேன். பெயரிலேயே இளமையை கொண்டிருக்கும் இளாவை ‘வாலிபமே வா வா’விற்கு அடையாளமாக வைத்திருக்கிறார்கள்.
தலைவர் கூட ‘தேவுடா… தேவுடா’ என்றழைப்பார். இந்தியாவில் கிரிக்கெட் ஜுரத்தை ஏற்றி, வாலிப வயோதிக அன்பர்களிடம் நாட்டுப்பற்றைக் கிளறிவிட்ட 1983 உலகக் கோப்பை பெற்றதும் தேவ். இங்கே வ.வா.ச.விற்கு வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று உசுப்பும் தேவ் இருக்கிறார்.
நாலைந்து பெரிய ஹீரோயின்கள் படத்தில் நடித்திருந்தால் ‘தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று டைட்டில் போட்டு இட்டுக் கட்டுவார்கள். ‘நயன் தாரா பெயரை முதலில் சொன்னார்களா? ரீமா சென் பெயர் முதலில் வந்ததா?’ என்னும் தலைப்பு பட்டியலை தவிர்க்க ஹீரோ கைப்புள்ள, சிங்க சங்கத்தில் தப்பிப் பிறந்த புலி நாகை சிவா, போன்ற வாஞ்சையான வாலிபர்களை வாஸ்து சாஸ்திர முறைப்படி இடம்பெற்றிருக்கும் சோத்தாங்கைப் பக்கம் டாப்பில் பார்க்கலாம்.
கல்வெட்டு:
தான் பட்ட கஷ்டத்தை அடுத்தவனிடம் சொல்வது நகைச்சுவை. அடுத்தவன் பட்ட கஷ்டத்தை அவனிடமே, அவன் மனம் கோணாமல் சொல்வது அதனினும் பெரிய நகைச்சுவை.
திரைப்படத்திலோ, ஸ்டாண்ட்-அப் காமெடியிலோ, முக சேஷ்டை செய்யலாம்; வெள்ளித்திரையிலோ கைப்புள்ள என்னும் அந்தஸ்து; விவேக் வந்துட்டான்யா என்னும் எதிர்பார்ப்பு; கேலியான துள்ளல் பின்னணி இசை, என்று ஆயிரம் விதத்தில் சரியான சூழலை அமைத்துவிடலாம். வசனம் சிரிக்க வைக்காவிட்டாலும், ஏனோ சிரித்து விடுவோம்.
நகைச்சுவை எழுத உட்கார்ந்து, அடுத்தவனை அழ வைப்பதுதான், பலருக்கு கை வந்த கலை.
அந்த மாதிரி ‘வேணாம்… விட்டுடு’ என்று அலற வைக்காமல், குண்டக்க மண்டக்க பயணத்தை கலக்கிப் போட்டிருக்கும் வவாச-வின் பெருமை எவ்வாறு நிலைக்கும் என்றால்:
- மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு நாயகிகள் இறக்குமதியாகும் வரை நீடுழி நிற்கும்.
- காபி, பேஸ்ட் செய்து இலக்கியம் படைக்கும் வலைஞர்கள் உள்ள வரை – வெட்டி, ஒட்டி, மின்னஞ்சல் பயணங்களை மேற்கொள்ளும்.
- செயப்பாட்டுவினை தெரியாதவர்கள் காதல் கவிதை எழுதித் தள்ளும்வரை – காமெடிக் காவியத்தின் புகழ் வாழும்.
- நயாகராவுக்கு சென்று படேல் வால்யூ காணும் இந்தியர்கள் இருக்கும்வரை – இனிப்பான நகைச்சுவை மகாத்மியம் பேசப்படும்.
இவ்வாறு சரித்திரத்தை சுருக்கமாக சொல்லலாம்.
வாழ்த்துகள்:
இணையத்தில் சண்டை, சச்சரவு இல்லாவிட்டால் பதிவு புகழ் பெறாது. அந்த மாதிரி சுழலில் எல்லாம் சிக்காமல் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
அரசியல் கலக்காமல் எனக்கு நகைச்சுவை வராது. துளி பொடி, உள்குத்து, எதுவும் வைக்காத க்ளீன் காமெடி கொடுக்கிறார்கள்.
வலையில் குழு ஆரம்பிப்பது யாவருக்கும் எளிது. ஒருவரே இரு கதாபத்திரம் எடுத்துக் கொண்டால் கூட, ‘நானே எனக்கு நண்பனில்லையே’ என்று தன்னுடனே பிணக்கு கொண்டு, முறிந்து செல்லும் வலையின் நிர்ப்பந்தங்களில் இத்தனை பதிவுகளை ஒருங்கிணைப்புடனும், மங்காத ஊக்கத்துடனும் இட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
பெயரில் மட்டும் ‘வருத்தப்படாத’ என்று வைத்துக் கொண்டு, கொண்ட கொள்கையில் நீர்த்துப் போய் சேரிய பதிவுகள் இட்டு, மேற்கொண்ட பயணத்தில் இருந்து வழுவாமல் நிலைத்து நிற்கிறார்கள்.
‘வலைப்பதிவா… ஒரே போர். அக்கப்போர் அல்லது உப்பு, புளி சமாச்சாரம்’ என்னும் அண்டை வீட்டாருக்கு மறுத்து மொழிய, மெல்லிய இதயங்களின் அணிவகுப்பாக்கி இருக்கிறார்கள்.
மனசு லேசாகணுமா? படிக்க சுகமா இருக்கணுமா? சாதாரணனுக்கு பரிந்துரைக்கணுமா? சஜஸ்ட் செய்யக்கூடிய பதிவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.
பிடித்தவை:
ஆபீசில் ‘ஆப்பர்ச்சுனிட்டீஸ் ஃபார் இம்ப்ரூவ்மெண்ட்‘ என்று ஜல்லியடிப்பாங்களே… அந்த மேட்டர்:
சங்கத்தின் புகழ் திக்கெட்டும் பரப்புபவர்களில் சிலரை டெக்நொரட்டி துணையுடன் வலைவீசிப் பிடித்தேன்:
முழுதும் அறிய: Technorati Search: vavaasangam.blogspot.com
வாய்ப்புக்கு நன்றி. வெல்க சிரிப்பு சங்கம்.
))

