நூறாவது பதிவில் அண்ணன் கைப்புவின் புகழைப் பறை சாற்றிப் பெருமை சேர்த்த கழகப் போர்வாள் கச்சேரி தேவ் தம் வலையுலகப் பயணத்தில் நூறு என்னும் மைல்கல்லை அடைந்ததைப் பாராட்டி அண்ணன் கைப்பு சொந்த சமையல் செய்து விருந்து வைப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அண்ணன் இதுவரை சமையற்கட்டுப் பக்கம் வந்ததே தன் தாயாரிடமிருந்து தீய்ந்த தோசையை வாங்க மட்டுமே என்பதால் சமையலறையில் உதவிக்காக சங்கக் கண்மணிகள் கை கொடுக்க வருகிறார்கள்.
கைப்பு டீக்காக ஏப்ரான் எல்லாம் அணிந்து தொப்பியுடன் சமையலுக்குத் தயாராக வருகிறார்.
கைப்பு: ஓகே.. சங்க மெம்பர்ஸ், எல்லாரும் ரெடியா? சமையலை ஆரம்பிப்போமா?
பாண்டி: எல்லாம் ரெடி தல.. நீ சொன்னதும் ஆரம்பிக்க வேண்டியது தான்..
கைப்பு: ஆமாம், சங்கத்து மக்கள் எல்லாரும் இருக்காங்க சரி, அதோ அந்தாண்ட நிக்குதே ஒரு பொண்ணு, அது யாரு பாண்டி?
பாண்டி: ஹி ஹி.. தல, என்ன தல அப்படிக் கேட்டுப்புட்டீங்க.. அதான் நம்ம சிந்து.. ஹி ஹி..
பார்த்தி: சிந்துவா? அந்த கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டர்?என்னாது இது.. பெரிய ஊழலா இருக்கும் போலிருக்கு… கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டருக்கு இங்க என்ன வேலைன்னு கேக்கறேன்?.. விசாரிக்கறேன். விசாரணை கமிஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.. இது ஒண்ணும் சரியில்லை..
சிபி: பார்த்தி, கொஞ்சம் சும்மா இரு.. பாண்டி, ஹி ஹி.. சிந்துவுக்கு சமையல் தெரியும்னு கூட மாட ஒத்தாசையா கூட்டிகிட்டு வந்த தானே?
பாண்டி: இல்ல சிபியண்ணே.. நம்ம சமையல் செய்ய என்ன வேணும்?
பொன்ஸ்: என்ன வேணும்? மைக்ரோவேவ் ஒவன் வேணும்.. அதுல பவர் பட்டனைப் பார்த்து..
இளா: ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. விட்டா சோறு வடிச்சி, கொழம்பு வச்சி, வெண்பாவும் வடிச்சிட்டுத் தான் மூடுவாங்க.. அக்கா.. பொன்ஸக்கா.. கொஞ்சம் சும்மா இருங்கக்கா.. பாண்டி சொல்லட்டும்…
பாண்டி: சமையல் செய்ய, முதல்ல ரெசிபி வேணாமா? அதான், என்னென்ன ரெசிபி வேணும்னு சொல்றீங்களோ, அதையெல்லாம் கம்ப்யூட்டர்ல தேடிக் குடுக்க எனக்கு உதவியாத் தான் சிந்து வந்திருக்கு.. சிந்து, கமான் யா.. கொஞ்சம் டீ போடுவது எப்படின்னு தேடு பார்க்கலாம்..
பொன்ஸ்: டீ போட எல்லாம் எதுக்கு கம்ப்யூட்டர்.. என் கிட்ட விடுங்க தல.. என்னோட அடுத்த பதிவே.. மைக்ரோவேவில் டீ போடுவது எப்படி?ங்கிறது தான்
பெருசு: ஐயோ ஐயோ.. இந்த டீ போடுவது மாதிரி சின்ன மேட்டரை எல்லாம் விடுங்கப்பா.. என்னா இது.. சின்ன பிள்ளத் தனமா. அப்படியே முன்னேறி ஹைடெக்கா உப்புமா சாப்பிடுவீங்களா.. டீப் போடறாங்களாம் டீ..
கைப்பு ( பெருசுவை அதிசயமாகப் பார்க்கிறார், தனக்குள்): நம்ம சங்கத்துல உப்புமா எல்லாம் செய்யத் தெரிஞ்ச ஆளா?!!! பெரிய ஸ்டார் குக்கா இருப்பார் போலிருக்கே.. இவரை விடக் கூடாது.. (வெளியில்) அட பெருசு, வெவரமான ஆளாத் தான் இருக்கீரு.. உப்புமாவே செஞ்சுடுவோம்.. உப்புமா உங்க டிபார்ட்மென்ட் ஆமாம், சொல்லிட்டேன்.. பாண்டி, இவருக்கு உப்புமா செய்ய என்ன வேணும், ஏது வேணும்னு கேட்டு லிஸ்டுவாங்கிக்க..
பாண்டி (மனசுக்குள்): தலைக்கு புத்தி போவுது பாரு.. போயும் போயும் விருந்துக்கு உப்புமா எவனாவது செய்வானா?!! ஒரு பிரியாணி, ஒரு சிக்கன் 65ன்னு போட்டா சொகமா சாப்டுட்டு சொகமாத் தூங்கலாம்..ம்ஹும்.. நேரம், (சத்தமாக) பெருசு, முத ஐட்டம் உன் ஐட்டம் தான்யா.. என்ன வேணும் உப்புமா செய்ய? சேமியா உப்புமாவா, இல்லை ரவா உப்புமாவா?
பெருசு: இல்லை இல்லை.. இதெல்லாம் இல்லை.. உப்புமா செய்யணும்னா, எனக்கு இட்லி வேணும்..
பொன்ஸ்: என்னது இட்லியா?
இளா: இட்லி யெல்லாம் யாருக்கு செய்யத் தெரியும்? இட்லி வடைன்னு ஒருத்தர் இருக்காரு.. அவரை வேணா கூட்டிட்டு வரலாம்..
பெருசு: எனக்கு இட்லி இருந்தாத் தான் உப்புமா செய்ய வரும்.. கரெக்டா சொல்லுங்க, இட்லி எப்போ வாங்கியாருவீங்க? எனக்கு அஞ்சுமணிக்கு வெண்பா க்ளாஸ் இருக்கு.. கொத்தனார் வரச் சொல்லி இருக்காரு.. போகணும்..
கைப்பு: ஏய்யா? !! இட்லி எல்லாம் செஞ்சா அத விட்டுட்டு எவனாவது உப்புமா செஞ்சி சாப்டுவானாய்யா? இட்லி செய்யும் அளவுக்கு சமைக்கத் தெரிஞ்சா நாங்க இப்படிப் பேசிகிட்டு இருப்போமா? ம்ஹும்.. இது தேறாத கேஸு.. சரி சரி பாண்டி, நம்ம தான் மெனு முடிவு பண்ணணும் போலிருக்கு.. யாருக்கு என்னென்ன சமைக்கத் தெரியும்னு சொல்லுங்க..
பொன்ஸ்: எனக்கு சாதம் வடிக்க நல்லா தெரியும்ணே.. அதாவது… மைக்ரோவேவ்ல,,
கார்த்திக்: ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.. நீங்க சாதம் வடிச்ச கதை தான் அமெரிக்காலேர்ந்து நியூசிவரைக்கும் எல்லாருக்கும் தெரியுமே.. கொஞ்சம் எங்களையும் பேச விட்டா நல்லா இருக்கும்..
அப்போது கீதா வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு ஆக்ரோஷமாக உள்ளே வருகிறார்
பொன்ஸ் (முணுமுணுப்பாக) வந்துட்டாங்க.. தலைவலி
கீதா : என்ன தலைவரே.. நிரந்தரத் தலைவலியான என்னை விட்டுவிட்டு எல்லாரும் எங்கே போய்விட்டீர்கள்? “சிபி ஏன் குமார காவியம் எழுத வில்லை” என்று திடீர் என்று நினைவு வந்ததால், பாதி சாப்பாட்டில் எழுந்து அவருக்கு போன் செய்த காரணத்தால் நீங்கள் இங்கே இருப்பது தெரிந்தது.. இல்லைன்னா என்னை விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் என்ன சதி செய்கிறீர்கள் என்றே தெரியாமல் போயிருக்கும்.
பாண்டி: கீதாக்கா, அமைதி அமைதி..சதி இல்லைக்கா, சமையல் தான் செய்யறோம். எதுக்கு இத்தனைக் கோபப் படுறீங்க.. நம்ம தேவ் நூறாவது கச்சேரி போட்டுட்டாப்ல.. அதுக்குத்தேன் எல்லாரும் சேர்ந்து விருந்து சமைக்கப் போறோம்.. இப்போ பொன்ஸக்கா சாதம் வடிக்கப் போறாங்க.. (பொன்ஸ் ஏதோ பேச ஆரம்பிக்கிறார்..)
அக்கா.. இருங்கக்கா.. எப்படி வடிக்கிறதுன்னு கேட்கலை.. இருங்க இருங்க.. பேராசிரியர் கார்த்திக் தோசை சுடுவதில் எக்ஸ்பர்ட்.. அவரு தோசை செஞ்சிடுவாரு.. நீங்க என்னக்கா செய்வீங்க?
கீதா: நான் சாம்பார் நல்லா வைப்பேன்.. நானே சாம்பார் வைக்கிறேன்..
பொன்ஸ்: ஆனா அதுல உப்பு மட்டும் போட மறந்துருவாங்க!!
கீதா திரும்பி பொன்ஸை முறைக்கிறார்.
கீதா: சிலப்பதிகாரத்துல சாம்பாரைப் பத்தி என்ன சொல்லி இருக்குன்னா,..
சிபி: இருங்க இருங்க.. இதெல்லாம் வேண்டாம்… சரி, பாண்டி, எனக்கென்ன வேலை.. நான் என்ன செய்யணும்? கமான்.. டெல் மீ.. கமான்… கை பர பரங்குது..
கார்த்திக்: ஆமா, என்னவோ விருந்துங்கறீங்க ஒரே வெஜிடேரியனா இருக்கு.. மருந்தாகிடப் போகுது.. பார்த்து…
மகேஸ்: ஆமாம்.. எல்லாம் மருந்து ஐட்டமாவே இருக்கு.. ஒரு கிடா வெட்டி பிரியாணி போட்டோம்னு வைங்க..
பொன்ஸ்: ஆடெல்லாம் வெட்டக் கூடாது.. ஆடு பாவம்.. மல்லிச் செடி கூட பாவம்…. இருங்க நான் போய் மேனகா காந்தி கிட்ட சொல்லப் போறேன்..
கைப்பு : ஆகா.. இந்தப் பொண்ணை வச்சிகிட்டு ஒண்ணுமே செய்ய முடியாது போலிருக்கே.. பூனையை மடியில கட்டி சகுனம் பார்த்த மாதிரி..
பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்கும்.. யானையும் பிடிக்கும்.. யானை இருக்கு பாருங்க..எத்தனை பெரீசு..
பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..
கீதா: ஆமாம்..இந்த ஆடு கோழி எல்லாம் பேசாதீங்க.. பேசாம, போளி செய்யலாம்…
பெருசு: ஆகா, போலியா.. எனக்கு வெண்பா க்ளாசுக்கு நேரமாச்சு..
கைப்பு: இருங்கம்மா.. இந்த மகளிர் அணியைச் சும்மா இருக்க வைக்கிறதுக்குள்ள மனுசனுக்கு உயிர் போய் உயிர் வருது.. ரெண்டு பேர் இருக்கும் போதே இப்படின்னா, இன்னும் புதுசா கெக்கே பிக்கேன்னு எல்லாத்தையும் போய் கூட்டிட்டு வருது இந்த பொன்ஸு.. கொஞ்சம் அடக்கி வைக்கணும் எல்லாத்தையும்.. சரி சரி.. விவசாயி இளா.. உங்க பண்ணையிலேர்ந்து ஒரு பத்து ஆடு, இருபது கோழி, அஞ்சு கிலோ கோஸ், பத்து கிலோ வெங்காயம் எல்லாம் எடுத்துட்டு வாங்க.. சமையலை ஆரம்பிக்கலாம்..
இளா: (தனக்குள்) அடடா.. என்னது இது.. தின்னே அழிச்சிடுவாங்க போலிருக்கே.. கட்சி நிதி வேற காலியா இருக்கு.. அப்டியே எஸ்கேப் ஆக வேண்டியது தான்.. (சத்தமாக) அண்ணே.. அதெல்லாம் இந்த முறை வெளில வாங்கிக்குங்க.. எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு.. கதார் வேற போகணும்.. இப்போ தான் நேரம் பார்த்தேன்.. வரேண்ணே…
கைப்பு: தம்பி.. இளா.. இளா.. (கூப்பிடக் கூப்பிட திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.. )
(இதற்குள் கட்ட துரை பெருசு, சிபி காதில் ஏதோ சொல்கிறார்)
சிபி: இருங்க தல.. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..
கைப்பு: அட நீ வேறயா? என்ன உண்மை?
சிபி: நானும் சங்கத்துல தானே இருக்கேன். நானும் இப்போ தானே ஒரு நூறாவது பதிவைப் போட்டேன்.. எனக்கு மட்டும் எந்த ட்ரீட்டும் வைக்கலை.. இப்போ கச்சேரில நூறாவது பதிவுன்ன உடனே பிரியாணி என்ன, ஜிகிர்தண்டா என்னன்னு ஒரே பெரிய ஸ்பெசல் விருந்தே தயார் பண்றீங்க.. அதை வேற என்னை வச்சே வேலை செய்ய வைக்கிறீங்க?? என்ன நடக்குது?
பொன்ஸ்: தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது..
கைப்பு: ஐயோ, ஐயோ பேச ஆரம்பிச்சிட்டாளே.. டேய் பாண்டி.. அவளைக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூட்டிப் போடா…
சிபி: அப்டீன்னா? என்ன சொல்ல வர்றீங்க?
பொன்ஸ்: இப்போ, தேவோட நூறாவது பதிவைப் பாருங்க.. நம்ம சூப்பர் ஸ்டாரு, கைப்புன்னு போட்டு அசத்திட்டாரு.. நீங்களும் போட்டீங்களே ஒரு நூறாவது பதிவு.. ப்ரோபேசன் பதிவாம்ல..
நூறாவது பதிவிலயே நீங்க ப்ரோபேஷன் லெவல் தான் நினைவிருக்கட்டும்..
இதைக் கேட்டதும் தளபதி சிபிக்குக் கோபம் வந்து விடுகிறது, அவரது காது மற்றும் கண் தெரியாமல் போய் விட்டது.(refer to Sibi’s profile). இத்துடன் சங்க உறுப்பினர்களும் பயந்து போய் ஒவ்வொருவராக எஸ்கேப் ஆக, சிபி கோபத்தோடு கைப்புவின் எறும்பை எடுத்து பொன்ஸின் யானை மீது போட்டுவிட்டு “அவன அமுக்கிக் கொல்லுடா மாப்ள…” என்று கத்தத் துவங்க.. கைப்புவும் எஸ்கேப்..