வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘தருமி’ பகுப்புக்கான தொகுப்பு

இது ஒரு நகைச்சுவை நாள்

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 29, 2006

*

தப்பு செய்றது எப்பவுமே தப்புதான்.

யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.

தப்புங்கறது சில சமயம் தப்பு இல்லைன்னு நினச்சு நாம செய்ற சில காரியங்களால தப்பா போயிடும். எதுக்கு இத இப்போ சொல்றேன்னா..

வ.வா.ச. அப்டிங்கிற பேர்ல உள்ள ‘வா’வ இன்னைக்கி ஒரு நாளைக்கு மட்டும் கடாசிடறது அப்டின்ற முடிவை வாலிபர்களெல்லாம் எடுத்துட்டாங்களாம். அது தப்பில்ல…

அவங்க சங்கம்; அவங்க பேரு. அதனால அது தப்பில்ல…

அதோடு, அந்தக் காலத்து ஆள் ஒருத்தரைப் பத்தி எழுதணும்னா,இன்னொரு அந்த காலத்து ஆள்தான் வேணும்னு அவங்க நினைச்சிருக்காங்க; அதுவும் தப்பில்லைதான்.

ஆனால் இப்படி தப்பே செய்யாத அவங்க பண்ணுன ஒரே தப்பு என்னன்னா,
என்னை இங்க ஒரு நாள் டேரா அடிக்கச் சொல்றதுதான்.

‘ஆனாலும் இந்த ஆண்டவன் இந்தச் சின்னூண்டு நெத்தியில எவ்வளவு எழுதியிருக்கான்,பாத்தீங்களா?” (காதலிக்க நேரமில்லை)
என் தலைவிதி எனக்குத் தொடர்பில்லாத ஒரு சங்கத்தில, அதுவும் நகைச்சுவைக்கு முதலிடம் – இல்ல..இல்ல – முழு இடமே கொடுக்கும் வ.வா.ச. ஆட்கள் என்ன இப்படி பிடிச்சி மாட்டுவாங்களா? உங்க தலைவிதி அவங்க செஞ்ச தப்புனால இப்போ பாருங்க நீங்க இத வாசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. (எங்க கடைசிவரை வாசிக்கப் போறீங்க? எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியே வாசிச்சிங்கன்னா, அது உங்க தப்பு! )

இன்னைக்கி எழுத நினச்சதை ஒரு வாரத்துக்கு முந்தியே எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும். இன்னைக்கி நம்ம கலைவாணர் பிறந்த நாள். இதப் பத்தி ஒரு வாரத்துக்கு முந்தியே நினச்சி, இந்த நாளை ஒரு ‘நகைச்சுவை நாள்’ அப்டின்னு நாம பதிவர்கள் எல்லோரும் ஒரு விழாவா கொண்டாடியிருக்கலாம். இன்றைய பதிவுகள் எல்லாமே நகைச்சுவையை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதி இந்த நாளைக் கொண்டாடியிருக்கலாம். அடுத்த வருஷமாவது இந்த நாளை அப்படி கொண்டாடலாம் – தமிழ்மணத்தில் மட்டுமாவது. இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல விஷயமாவது செய்யலாம்ல..? காதலுக்கு நாளிருக்கு;நன்றி சொல்ல நாளிருக்கு.எல்லோருமா சேர்ந்து சிரிக்கிறதுக்கு ஒரு நகைச்சுவை நாளுன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்ல..அடுத்த வருஷம் பதிவர்கள் சேர்ந்து திட்டமிடுங்க.. வருத்தப்படாதவங்களுக்கு இதில ஒரு முக்கிய ரோல் இருக்கு; பாத்து செய்யுங்க. சரியா?

எல்லா நகைச்சுவை நடிகர்களின் நடிப்பிலும் நான் ஒரு விஷயம் பார்த்திருக்கிறேன். அவங்க காமெடி செஞ்சு முடிச்சதும் ஆடியன்ஸ் ரீயாக்ஷனுக்காக ஒரு சின்ன இடைவெளி தெரியும். ஒரு சில நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள்ல தான் இந்த gap இல்லாதமாதிரி தெரியும். பேசும்போது ஆற்றொழுக்கு நடை அப்டின்னு சொல்லுவாங்களே அதே மாதிரி இவங்க நடிப்பும் ஒரே சீராகச் செல்லும். நம்ம ஊர் ஆள்களில் கலைவாணர், எம்.ஆர்.ராதா இந்த இருவரின் நடிப்பில் இதைக் கண்டதுண்டு. அதனாலே அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கும்.

கலைவாணர் வில்லுப்பாட்டில் ஆரம்பித்து, நாடகங்களில் வளர்ந்து சினிமாவுக்குள் வந்தவர். இப்படி வருபவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத் தனமும் ஒட்டிக் கொண்டு விடும். ஆனா எப்படின்னே தெரியவில்லை. கலைவாணருக்கிருந்த body language அந்த செயற்கைத்தனம் இல்லாமல் இருந்தது – அதுவும் சினிமாக்களின் ஆரம்ப காலத்திலேயே அவர் அதைப் புரிந்து நடித்தது – உண்மையில் ஒரு பெரிய விஷயம்தான்.

இப்போ வர்ர படங்களில் நம்ம இயக்குனர்கள் “கோனார் நோட்ஸ்” போடுவார்கள் தெரியுமா? அதாவது ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒன்று செய்யும் முன் அதைப்பற்றி அந்த பாத்திரமே ஒரு soliloquy-ல் அது எதற்கு ஏன் என்று ஒரு detailed lecture கொடுக்கும்; அதாவது படம் பார்ப்பவர்கள் மடையர்கள்; அவர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இது போல் விளக்கம் கொடுத்தால் தான் அவர்களுக்குப் புரியும் என்று நம் இயக்குனர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான நினைப்பு. இப்படி இல்லாத தமிழ்ப்படம் கொஞ்சம் அரிது. கடைசியில் கதாநாயகனுக்குப் பைத்தியம் தெளிந்தும் அவன் பைத்தியங்களோடு போனானா; இல்லை பைத்தியமாகவே திரும்பி போனானா என்று ஒரு கேள்வியோடு படம் பார்த்தவர்களைத் தியேட்டரைவிட்டு வெளியே அனுப்பியதே ‘சேது’படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக எனக்குத் தெரியும். இப்படி ஒரு கேள்விக்குறியோடு ஒரு படத்தையே முடித்த பாலாவுக்கு நல்ல தைரியம்தான்.ஆனால் மற்ற படங்களைப் பாருங்கள்; சீனுக்கு சீன் விளக்கவுரை இருக்கும்.

ரொம்ப பழைய படம் (அப்புறம் கலைவாணர் நடித்திருந்தா புதுப்படமாகவா இருக்கும்; வந்திட்டாய்ங்க கத சொல்றதுக்கு) – பணம்னு நினைக்கிறேன். சிவாஜி – பத்மினி..? வரதட்சணைப் பிரச்சனையால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு விரட்டியிருப்பார்கள். கலைவாணர் மாப்பிள்ளை பையனின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பார். மாப்பிள்ளைப் பையனுக்கு மறைமுகமாக புத்தி சொல்ல நினைப்பார். கையில் ஒரு புறாவுடன் இன்னொரு வேலைக்காரனைத் திட்டிக் கொண்டிருப்பார். கதாநாயகனிடம் நியாயம் கேட்பார்.’பாருங்க, ஒருத்தர் இவனுக்கு இந்த அழகான மணிப்புறாவை இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவரிடம் நன்றியோடு இருப்பதைவிட்டு அதை வளர்க்கவும் காசு கேட்கிறான்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். பத்த வைக்கிறதுதான். நல்லா பத்திக்கும். ஆனா இந்த இடத்தில் புறாவையும் புதுப்பெண்ணையும் ஒப்பிட்டோ அல்லது வேறு மாதிரி கதாநாயகனுக்கு அறிவுரை சொல்றது மாதிரி வசனங்கள் ஏதுமிருக்காது. அதாவது நோட்ஸ் ஏதும் கிடையாது.

சிரிப்பைப் பத்தியே ஒரு பாட்டு – எந்தப் படமென்று நினைவில்லை. அந்தப் பாட்டைக் கேட்டுட்டு ஒரு சின்ன புன்முறுவலாவது வரலைன்னா அவங்கள் என்ன மனுசங்களோன்னுதான் சொல்லணும். பலவகை மனிதர்களின் விநோதச் சிரிப்பை பாட்டாகப் பாடி, சிரித்துக் காண்பிப்பார். நடிப்புக்கு நடிப்பு; சிரிப்புக்கு சிரிப்பு.

நடிகர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தாங்கள் நடிக்கும்போது சொல்பவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. பெரியார் படத்திற்கு ராஜா இசை அமைக்க மறுத்ததாக வந்த செய்தியை வைத்து நாம் எல்லோரும் அலசினோமே அதுவும் இதைச் சார்ந்த கேள்விதான். இரண்டுக்கும் தொடர்பு தேவை என்பது கட்டாயம் இல்லை. ஆனாலும் இரண்டும் ஒரே கோட்டில் சென்றால் அதன் மவுசே தனிதான். அந்த வகையில் கலைவாணர் ஒரு நல்ல முன்னோடி.அவர் படத்தில் பொதுவுடமைக் கருத்துக்கள், சமூக நல கருத்துக்கள், அப்போதைய தி,க.வின் கருத்துக்கள், சமய எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளின் மேல் சாடல் – இப்படிப் பல சேதிகளைச் சொல்லுவதாக வரும். அவைகளை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மனிதனும், நடிகனும் ஒன்றிணைந்த இந்த பிணைப்பு அவர் புகழுக்கு அச்சாணி.

புரட்சிக் கருத்துக்களைப் படங்களில் பேசிவிட்டு, ‘அது நடிப்பு; நடிப்பு வேறு; வாழ்க்கை வேறு’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது ஒரு நடிகனுக்குப் பெரிய சறுக்குதான் என்பதை இந்த நாளில் பார்த்தோமே. சொல்லப்போனால் நாம நடிகரா திரையுலகில் பார்த்த நிழல் மனிதரை விடவும் அந்த நிஜ மனிதரின் குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வேண்டி பார்க்கப் போனவருக்கு, கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில் அருகில் இருந்த அவரது வெள்ளிக் கூஜாவைக் கொடுத்தனுப்பினார் என்று வாசித்த நினைவு அந்த மனிதரின் மேல் ஒரு பெரும் மரியாதையை அளிக்கிறது.

நம்ம தமிழ் மக்கள்ட்ட ஒரு “நல்ல” குணம் உண்டு. செத்துட்டா எல்லோரையும் ஓஹோன்னுருவோம். அதனாலேயே ‘அவர் ஒரு சகாப்தம்’ அப்டின்றதில எனக்கு மரியாதை இல்லாம போச்சு. நமக்குப் பிடிச்சிட்டா செத்தவங்களை சகாப்தமாக்கிடுவோம் – அரசியல்வாதிகள் இன்னொரு அரசியல்வாதி இறந்ததும் ‘யாராலும் நிரப்பப்பட முடியாத வெற்றிடம் ஏற்பட்டுரிச்சி’ அப்டின்னு சொல்ற ஒரு வார்த்தை ஜாலம் மாதிரி. அதனால கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகாப்தம்னு சொல்லி அவரை சீப் ஆக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகில் அவரது பெயர் எப்பவுமே மறையாது.

அவர் பிறந்த இந்த நாளில் அவரைப் பற்றிய ஒரு பதிவின் மூலம் அவரை நினைவுகூற நினைத்த வ.வா.ச. வாலிப, வயோதிக – (இன்னைக்கு மட்டும் நானும் இதிலே இருக்கேனே; அதுக்காக வயோதிக அப்டின்னு சேர்த்திருக்கேன்) உறுப்பினர்களுக்கு என் வாழ்த்து.

என்னை இப்படி இழுத்துவிட்ட தப்பை செய்தவர்களுக்கு நன்றி சொன்னாலும் அது தப்புதானே!?

பதிவர்களே, இப்படி என்னை இழுத்துவிட்டவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்தத் தப்பைச் செய்துவிட்டார்கள். அவர்களை மன்னியுங்கள்.

*

.... இங்கே பதியப்பட்டது தருமி | 54 மறுமொழிகள் »