வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘டி.பி.ஆர்.ஜோசஃப்’ பகுப்புக்கான தொகுப்பு

இம்மாத அட்லாஸ் வாலிபரின் நிறைவுப் பதிவு..

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 28, 2007

நம்ம ஆஸ்தான நகைச்சுவை நாயகன் வடிவு (வடிவேலுவோட செல்ல பேர்) ஹோட்டல்லருந்து வெளிய வறார். வெத்தல போட்டதுல உதடு செவந்துருக்கான்னு பாத்துக்கிட்டே வறார்.

வடி: அடடா.. அய்யர் கபேன்னாலே ஒரு அலாதி டேஸ்ட்தாம்ப்பா.. அந்த சாம்பாரும்.. ரசமும், மோரும்.. சேத்து ஊத்தி சாதத்த கொளச்சி அடிக்கற சுகம் இருக்கே.. (புளிச்சென்று வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு வானத்தைப் பார்க்கிறார்) எய்யா ச்சாமி.. இன்னைக்கி ஒன் மொகத்துலதானய்யா முளிச்சிட்டு எறங்குனேன்.. அதான் இம்புட்டு திருப்தியா ஒரு சாப்பாட்ட குடுத்துருக்கே.. ரொம்ப தாங்ஸ்ய்யா.. ஏஏஏஏஏவ்…

பின்னாலிருந்து ஒரு குரல்: டேய் நில்றா..

(வடிவு திரும்பிப் பார்க்காமல் போகிறார்)

குரல்: டேய் ஒன்னெத்தாண்டா.. நில்றாங்கறேன் போய்க்கிட்டேருக்கே.. ஒங் காதென்ன செவிடா?

வடி: (திடுக்கிட்டு நிற்கிறார்) இது எங்கனயோ கேட்ட கொரலாட்டம்ல இருக்கு.. இது அவனாருக்குமோ.. ச்சீச்சீ இருக்காது. நாம ஊர்லருந்து ரொம்பத் தூரம்லே வந்துருக்கோம்.. அது இவனாயிருக்காது.. இது வேற யாரோ.. (முன்னே நடக்கிறார். அடுத்த நொடியே தோளில் ஒரு கை விழுகிறது. அவரையுமறியாமல் மந்தரித்து விட்ட கோழி மாதிரி திரும்புகிறார். அடுத்த நொடியே முகம் களையிழந்து போகிறது.)

பார்: என்ன சொன்னே அது இவனாயிருக்காதா? இப்ப பார். இது அவனேதான். அது இவனேதான்.

வடி: ச்சரிய்யா.. நீ அவனே தான்.. அவன் நீயே தான்.. இப்ப என்ன அதுக்கு.. எதுக்கு என்னெ புடிச்சி நிறுத்தி வம்பு பண்றே.. சிவனேன்னு நாம்பாட்டுக்கு போய்கிட்டுதான இருந்தேன்..

பார்: டேய் நீ சிவனேன்னு போய்ட்டுருந்தா நா ஏண்டா ஒன்னெ புடிச்சி இளுக்கேன்.. என்னெ நீ சிவப்பாக்கிட்டில்லடா போனே..

வடி: என்னது நா ஒன்னே சிவனாக்கிட்டேன்னா.. என்னய்யா சொல்றே?

பார்: (தன் ஜிப்பாவைக் காட்டுகிறார்) இதென்ன?

வடி (தனக்குள்) அடடா.. இவன் மேலயே போய் துப்பிட்டம் போலருக்கே.. வேலியில போற ஓணானப் புடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டேன் போலருக்கே.. ச்சும்மாவே கொடஞ்சி எடுத்துருவானே.. இப்பம் என்னென்னல்லாம் செய்வானோ தெரியலையே..(வானத்தைப் பார்க்கிறார்) எய்யா.. இப்பத்தானய்யா ஒங்கிட்ட தாங்ஸ் சொன்னேன்.. அதுக்குள்ள இப்படியா? இது நல்லால்லையா.. நல்லால்ல..

பார்: டேய்.. மேல பாத்து பேசிட்டா விட்டுருவமா.. ச்சாமி மொகத்துல முளிச்சிட்டு பொறப்பட்டா என்ன வேணும்னாலும் செஞ்சிருவியா? களட்றா..

வடி: (முறைக்கிறார்) என்னது களட்றதா? எத?

பார்: (கேலியுடன்) ஊம்.. வாயை மட்டும் அசைக்கிறார் (சென்சார் பண்ணிட்டாங்க போலருக்கு).

வடி: யோவ் வேணாம்.. கொளப்பாத.. நீ ஒளுங்கா பேசினாலே ஒரு எளவும் புரியாது.. இதுல வாய மட்டும் தொறந்து மூடுறே?

பார்: டேய்.. நீ என்ன செவிடா? (சாலையில் போய்க்கொண்டிருக்கும் ஒருவரைப் பிடித்து நிறுத்துகிறார்) அண்ணே நா சொல்றது ஒங்களுக்கு கேக்குதா பாருங்க (வாயை மட்டும் அசைத்து காட்டுகிறார்)

(அவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. இருந்தாலும் பார்த்தியையும் வடிவையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால் நமக்கேன் வம்பு என்று நினைத்து) என்ன தம்பி நீங்க.. பக்கத்துலயே நிக்கேன். இப்படி செவிடங்கிட்ட பேசற மாதிரி கத்தறீங்க.. காது கொய்ய்யுங்குது..

பார்: தாங்ஸ்ணே நீங்க போங்க.. பார்த்தியாடா.. அவர் நா கத்தறேங்கறார்.. நீ கேக்கலேங்கறே.. இப்பவாவது கேக்குதா பாரு (மீண்டும் பிரசுரிக்க முடியாத வார்த்தையொன்றை சப்தம் வராமல் உச்சரிக்கிறார்)

வடி: (தனக்குள்) என்னடா இது ரோதனையா போச்சி.. அதெப்படி இவன் பேசறது மட்டும் நமக்கு கேக்க மாட்டேங்குது.. பஸ்சு சத்தம் கேக்குது.. தோ.. அந்த பளக்காரன் அங்கனருந்து கூவுறது கூட தெளிவா கேக்குதே.. இந்த பயதான் என்னமோ ஃப்ராடு பண்றான்னு நினைச்சா அந்தாள் வேற கேக்குதுங்கறானே…

பார்: டேய் என்ன ஒனக்குள்ளயே பேசிக்கறே.. களட்டு..

வடி: (அழுதுகொண்டே தன்னுடைய மேல் சட்டையைக் கழற்றுகிறார்) யோவ் ஒனக்கு இதே வேலையா போச்சுய்யா.. இந்தா புடி..

பார் (அருவறுப்புடன் வாங்கி சாலையில் வீசிவிட்டு மீண்டும் வடிவைப் பார்க்கிறார்) டேய், இதைய்யா கழட்டச் சொன்னேன்..

வடி: பின்னே..வேட்டியையும் கழட்டுனுமாக்கும்.. சொன்னாத்தானய்யா தெரியும் (வேட்டியையும் கழற்றிக் கொடுக்கிறார்)

பார்: (அதையும் வாங்கி வீசிவிட்டு முறைக்கிறார்) டேய்.. கடுப்படிக்காத.. நா சொன்னத கழட்டு..

வடி: (தனக்குள்) வெறுமனே வாய மூடி, மூடி தொறக்கான்.. காத்துதான் வருது.. இவன் என்னத்த கழட்டச் சொல்றானேன்னே தெரியலையேய்யா..

பார்: மொனகாத.. கழட்டு..

வடி: மேலருக்கறதையும் குடுத்தாச்சி.. கீழருக்கறதையும் குடுத்தாச்சி.. இன்னும் என்னத்தையா கேக்கே.. இதுக்குக் கீழ ———–தாய்யா இருக்கு..

பார்: ஆங்.. அதத்தான் அப்பத்துலருந்து கழட்டிக் குடுறாங்கறேன்.. கழட்டு..

வடி: (குதித்து பின்வாங்குகிறார்) என்னது?

பார்: ஊம்? நொன்னது.. கழட்றான்னா..

வடி: போய்யாங்கொய்யா.. (கழற்றிப் போட்ட வேட்டி சட்டையையும் மறந்து நாலு காய்ச்சலில் ஓடுகிறார்)

சாலையோரத்தில் அமர்ந்திருந்த பிச்சை சாலையில் கிடக்கும் வேட்டி சட்டையையும் பார்த்திபனையும் மாறி மாறி நோட்டம் விடுகிறார்)

பார்: என்னங்க பாக்கிறீங்க.. எடுத்துக்கிட்டு போங்க.. இன்னைக்கி நரி மொகத்துலதான் முளிச்சிருக்கீங்க..

(பிச்சை பாய்ந்து வந்து எடுத்துக்கொண்டு தூரத்தில் ஒளிந்துக்கொண்டு நின்ற வடிவேலுவைப் பார்க்கிறார். வடிவேலும் நாக்கை மடித்து கொன்னுருவேன் என்று சைகைக் காட்டுகிறார். பிச்சை சாலையோரத்தில் வைத்திருந்த அலுமினிய பாத்திரத்தையும் மறந்து நாலு கால் பாய்ச்சலில் எதிர் திசையில் ஓட வடிவேலு தன்னுடைய ட்ரேட் மார்க் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று அழ.. பார்த்தி ‘மவனே.. என் சட்டையிலயா துப்பறே.. இப்ப ஊருக்கு எப்படி போய் சேர்றேன்னு பாக்கேன்..’ என்றவாறு சாலையோரக் கடையில் சென்று அமர்கிறார்)

********

இம்மாதம் முழுவதும் ஏதோ என்னால் ஆன வகையில் கிச்சு, கிச்சு மூட்ட முயற்சி செஞ்சேன்.. சிரிப்பு வந்ததோ இல்லையோ மாசம் முடிஞ்சிருச்சி..

என்னையும் வாலிபனா நெனச்சி என்னெ இங்க வரவழைச்ச சிபிக்கும் அவ்வப்போது தனி மயிலில் என்னை ஊக்குவித்த நண்பர் தேவுக்கும்.. நானும் எழுதியதை வேலை மெனக்கெட்டு படித்து வேலைமெனக்கெட்டு பின்னூட்டம் இட்ட வாலிப சிங்கங்களுக்கும் நன்றியோட சேர்ந்த சலாமுங்கோ..

நன்றி வணக்கம்..

அன்புடன்,
ஜோசஃப்

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 7 மறுமொழிகள் »

வடிவுக்கு போறாத காலம்:(

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 27, 2007

(சாலையின் வலப்புறத்திலிருந்து நம்ம வடிவு வந்துகொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறார்)

வ.வே: யப்பா சாமி, நா இன்னைக்கி போற காரியத்த நீதாம்பா நல்லபடியா முடிச்சித்தரணும். முடிச்சி தந்தேன்னா, திரப்பி வரப்ப ஒன்னோ ரெண்டோ, என்னால முடிஞ்சத உங்கோயில் உண்டியல்ல போடறேம்பா..

(எதிரில் வரும் நபர் அவரை கடந்து செல்ல, வடிவேலு அவர் காலரைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவருடைய கன்னத்தில் அறைகிறார்.)

வழியில் சென்றவர்: (கோபத்துடன்) யோவ். உனக்கென்ன பைத்தியமா? ஏன்யா சும்மா போறவன பிடிச்சி அடிக்கறே?

வ.வே: டேய் நா யாரு?

வ.செ: யாருன்னா?

வ.வே: நான் யார்றா? (தன் நெஞ்சில் கைவைத்து) நானு, நானு.

வ.செ: யோவ் சுத்த இவனா இருக்கியே.. பேசாம ரோட்ல போயிட்ருக்கவன இழுத்து பிடிச்சி கன்னத்துல அறஞ்சிட்டு.. நா யாரு, நா யாருன்னு கேக்கற?

வ.வே: (கன்னத்தில் அறைகிறார்) சரியா பாத்து சொல்லு.. நா யாருன்னு தெரியல?

வ.செ: (அழுகிறான்) யோவ் தெரியலையா.. நீதான் யார்னு சொல்லித் தொலையேன்.

வ.வே: உண்மையிலயே நா யாருன்னு தெரியலை?

வ.செ: தெரியலைய்யா..

வ.வே: சரி நீ போ..

வ.செ: (தனக்குள்) யார்றா இவன்? ரோட்ல போய்க்கிட்டிருந்தவன நிறுத்தி கன்னத்துல அடிக்கிறான். ஏன்டா அடிச்சேன்னு கேட்டா நான் யார்ராங்கறான். தெரியலன்னு சொன்னா சரி போடாங்கறான். சுத்த பைத்தியக்காரனாயிருப்பான் போலருக்கே.. இவன்கிட்ட நின்னு பேசினதே தப்பு.. போயிருவம்.. (திரும்பி திரும்பி பார்த்தவாறே அடிபட்ட கன்னத்தை தடவிக்கொண்டு செல்கிறான்)

வ.வே: (தனக்குள்) அப்பாடா. இந்த ஊர்ல நம்மளை தெரிஞ்சவன் யாருமில்ல போலருக்குது. தைரியமா நடமாடலாம்.

(காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார். அலட்சியமாக சாலையில் போவோர் வருவோரை பார்க்கிறார். கால்களை அகல வைத்து தெனாவட்டாக சாலையின் நடுவில் நடக்கிறார். ஏற்கனவே அவர் ஒருவனை அடித்ததை பார்த்தவர்கள் அவரை விட்டு சற்று தள்ளியே செல்கின்றனர். அதைப் பார்த்த வடிவேலு ‘அது.. அந்த பயம் இருக்கணும்..’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். திடீரென்று பின்னாலிருந்து சைக்கிளில் வந்த பார்த்திபன் அவர்மேல் இடிக்க முகம் குப்புற விழுகிறார். அவர் அணிந்திருந்த வெள்ளை சட்டை, வெள்ளை முழுவதுமாக அழுக்கடைகிறது. கீழே விழுந்தவர் கோபத்துடன் எழுந்து தன்னை இடித்துவிட்டு நிற்பவனை ஓரக்கண்ணால் பார்க்கிறார். அடுத்த நொடியில் அவர் முகம் இருளடைகிறது. தனக்குள் பேசிக்கொள்கிறார்) ஐயோ, இவனா? நம்ம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்திர்றானடா சாமி. இன்னைக்கி என்னல்லாம் குன்டக்க மன்டக்கன்னு பேசப் போறானோ தெரியலையே. திறக்கப்படாது.. அவன் என்ன பேசுனாலும் நம்ம வாயவே தெறக்கப்படாது..

பார்த்திபன்: (சைக்கிளில் அமர்ந்தவாறே) டேய்.. என்ன, ரோடு உனக்காகத் தான் போட்ருக்குன்னு நெனப்பா உனக்கு? நடு ரோட்ல பெரிய இவன் மாதிரி.. யார்றா நீ?

வ.வே: (அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறான்) அட ஒன்னுமில்லப்பா.. நான் ஊருக்கு புதுசு.. நீ போ.. (அந்த இடத்தைவிட்டு வேகமாக செல்ல முயல்கிறார்)

பார்த்தி: டேய் நில்றா! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே?

வ.வே: (அப்படியே நிற்கிறார். திரும்பாமலே பதில் சொல்கிறார்) நீ என்ன கேட்டே, நான் யாருன்னுதானே? அதான் நான் ஊருக்கு புதுசுன்னு சொல்லிட்டேன்லயா.. பிறவென்ன? (தனக்குள்) விடமாட்டான் போலருக்குதே சாமி..

பார்த்தி: ஏன், முகத்த பாத்து பேசமாட்டீங்களோ?

வ.வே: என் முகத்த பாத்து என்னய்யா பண்ணப் போறே?

பார்த்தி: அத நான் பாத்துக்கறேன். நீ முதல்ல திரும்பி என்ன பாத்து பேசுடா.

வ.வே: (திரும்பி முழுவதுமாக சுற்றிக்கொண்டு மீண்டும் முதுகையே காண்பிக்கிறான்) போதுமா? பாத்துட்டேல்ல? நான் போட்டா? அர்ஜண்டா ஒரு சோலிக்கி போயிட்டிருக்கேன்யா? என்ன உட்டுடேன் (அழுகிறான்).

பார்த்தி: டேய்.. முகத்த காட்றான்னா மறுபடியும் முதுகையே காட்றே? என்ன நக்கலா? அதுவும் ஏன்கிட்டயே?

வ.வே: இப்ப என்னய்யா பண்ணணும்கற?

பார்த்தி: ஸ்லோ மோஷன்ல திரும்பு.

(வ.வே ஸ்லோ மோஷன்ல மீண்டும் முழு வட்டமடித்து திரும்ப முயல.. பார்த்திபன் அவருடைய தோளைப் பிடித்து நிறுத்துகிறான். வடிவேலு தன் இரு கண்களையும் ஒன்றரை கண்ணுள்ளவன்போல் மாற்றிக்கொண்டு நிற்கிறார்.)

பார்த்தி: (ஆச்சரியத்துடன்) டேய் நீயா?

வ.வே: நீயான்னா? நீ நெனக்கற ஆள் நானில்லையா? என்ன உட்டுறு.

பார்த்தி: டேய்.. நான் நீ யாருன்னு நெனச்சேன்னு உனக்கெப்படி தெரியும்? நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தான் நீ?

வ.வே: (தனக்குள்) மறுபடியும் ஆரம்பிச்சிட்டன்யா. இப்படி குண்டக்க மண்டக்கன்னு பேசி எத்தனை நாளைக்கித்தான் இவன் என் கழுத்த அறுக்க போறான்னே தெரியலையே (பார்த்திபனைப் பார்க்கிறான்) என்னய்யா சொல்ற? ஒரெழவும் விளங்க மாட்டேங்குதே..

பார்த்தி: சரி மெதுவா உன் மர மண்டைக்கு விளங்கமாதிரி சொல்றேன். நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தானே நீ?

வ.வே: நீ.. நீன்னு.. எளவு வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு.. வேணாம். என்ன விட்டுறு..

பார்த்தி: என்ன வேணாம்?

வ.வே: என்ன வேணாம்னா?

பார்த்தி: இல்ல.. இப்ப ஏதோ வேணாம்னியே?

வ.வே: நானா? எப்ப?

பார்த்தி: டேய்.. என்ன விளையாடறியா? இப்ப நீதானடா வேணாம் என்ன விட்டுருன்னே? அதான் கேக்கறேன். சொல்லு, என்ன வேணாம்?

வ.வே: (அழுகிறான்) யோவ், ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா?

பார்த்தி: பேச்சுக்கா? அதென்ன பேச்சுக்கு? நாங்க மட்டும் பேசாமயா சொல்றோம்? சொல்றா?

வ.வே: (தனக்குள்) என்னடா இவன்.. முன்னால போன முட்டுறான்.. பின்னால போன ஒதைக்கிறான்.. இன்னைக்கி விடிஞ்சாப்பலதான்.. இப்ப என்ன கேக்க வறாங்கறத மறந்து போயிருச்சே..

பார்த்தி: (வடிவேலுவின் தலையில் தட்டுகிறார்) டேய் என்ன சத்தத்தையே காணோம். சரி, அத விடு.. நீ நான் நெனச்ச ஆளா இல்லையா அத சொல்லு..

வ.வே: (முறைக்கிறார்)முதல்ல நான் யாருன்னு நீ நினச்சு பேசிக்கிட்டிருக்க.. அதச் சொல்லு..

பார்த்தி: டேய், என்னையே மடக்கறியா? மவனே.. அப்ப எதுக்கு நீ நெனச்ச ஆள் நான் இல்லன்னு சொன்னே?

வ.வே: நான் ஒரு குத்து மதிப்பா கேக்கறியாக்கும்னு சொன்னேன்.

பார்த்தி: குத்து மதிப்பா? அதென்ன குத்து, மதிப்பு..

வ.வே: யோவ் ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா..

பார்த்தி: டேய் சொன்ன டையலாக்கையே சொன்னே.. கொன்னுருவேன். சரி அதையும் விடு.. நான் சொல்றேன். நீ அந்த துபாய் கக்கூஸ் பார்ட்டிதானே..

வ.வே: (தனக்குள்) ஹா.. மாட்டிக்கிட்டம்யா.. எமகாதகானாயிருப்பான் போலருக்குதே.. (பார்த்திபனைப் பார்க்கிறார்) துபாயா? கக்கூசா? நீ என்னய்யா சொல்றே? நான் மெட்றாசே பாத்ததுல்ல.. இதுல துபாயில போயி.. நீ நெனக்கற ஆளு நான் இல்லையா.. உலகத்துல ஒருத்தன மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு நீ கேட்டதில்ல அதுல ஒருத்தன் நான்னு வச்சிக்கயேன்..

பார்த்தி: சரி வச்சிக்கறேன்.. அதுக்குன்னு அவன் மேல அடிச்ச அதே கக்கூஸ் நாத்தமுமா ஏழுபேர் மேலயும் அடிக்கும்?

வ.வே: (தன் மேல் முகர்ந்து பார்க்கிறான். எனக்கு அடிக்காத நாத்தம் இவனுக்கு மட்டும் எப்படி அடிக்குதுன்னே தெரியலையே)

பார்த்தி: என்ன அடிக்குதா?

வ.வே: எது?

பார்த்தி: அதான்டா.. மோந்து பாத்தியே.. அது..

வ.வே: (விறைப்புடன் திரும்பி பார்க்கிறான்) ஆமாய்யா நீ நெனக்கற ஆளு நான்தான்.. அதுக்கு என்ன இப்ப?

பார்த்தி: (வியப்புடன்) தோ பார்றா, கோபங்கூட வருமா உனக்கு?

வ.வே: பின்னே.. நான் என்ன ஒன்னுக்கும் பெறாத ஆளுன்னு நினைச்சியா.. வேணாம். சொல்லிட்டேன்.

பார்த்தி: ஒன்னுக்கு போவாத ஆளா? அது வேறயா? தள்ளி நில்றா!

வ.வே: (தனக்குள்) ஐயோ.. நானே வாய் குடுத்துட்டு, குடுத்துட்டு மாட்டிக்கறனே.. (கன்னத்தில் அடித்துக்கொள்கிறார்) சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா..

பார்த்தி: டேய் யார சொல்றே?

வ.வே: என்னது நானா?

பார்த்தி: இப்ப ஏதோ வாய்க்குள்ளயே சொன்னியே?

வ.வே: (வாயை மூடிக்கொள்கிறார் இல்லை என்று தலையை அசைக்கிறார்).

பார்த்தி: (வடிவேலுவின் பின்னந்தலையில் அடிக்கிறார்) வாயை தொறந்து சொல்றா?

வ.வே: (கோபத்துடன் முறைக்கிறார்) யோவ். பேசிக்கிட்டிருக்கப்பவே கையை நீட்டுற? வேணாம்.. சொல்லிட்டேன்.

பார்த்தி: என்ன வேணாம்? என்ன சொல்லிட்டே? அடிக்கடி இதே டயலாக்க சொல்றே? என்ன வேணாம்? நான் இந்தான்னு எதையோ குடுத்தா மாதிரி!

வ.வே: (கைகளை தலைக்குமேலே உயர்த்தி கும்பிட்டவாறு தரையில் விழுகிறான்) ஐயோ சாமி.. தெரியாம சொல்லிட்டேன்.. ஆள விடுய்யா..

பார்த்தி: (வலது கரத்தை உயர்த்தி சீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. நீ சாவாம நூறு வருஷம் இரு.. (தனக்குள்) அப்பத்தான அடிக்கடி எங்கிட்ட மாட்டுவே..

வ.வே: (எழுந்து முற்றிலும் அழுக்காகிப்போன தன் உடைகளைப் பார்க்கிறான்) இப்ப திருப்தியா?

பார்த்தி: (வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார்) இப்பத்தான் சரியான கக்கூஸ் பார்ட்டி மாதிரி இருக்கே.. இப்படியோ போ..

(வ.வே தலையை குனிந்தவாறே சாலையின் ஓரத்துக்கு சென்று ஓரக்கண்ணால் பார்த்திபனைப் பார்க்கிறார்)

பார்த்தி: டேய் என்ன பாக்கறே?

வ.வே: ஒன்னுமில்லயா.. இதோ போய்கிட்டேயிருக்கேன்.. (அவசர, அவசரமாக ஓடுகிறார்)

(பார்த்திபன் ஒரு விஷம புன்னகையுடன் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்புகிறார்)

முடிவு

என்னங்க எங்கயோ படிச்ச மாதிரி இருக்கா.. இது ஒரு மீள் பதிவு.. பின்ன என்னங்க தெனக்கும் புதுசு, புதுசாவா எழுத முடியும்.. நாளைக்கிருக்கு.. புதுசா.. கடைசி நாள் பாருங்க..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 4 மறுமொழிகள் »

சென்சஸ் எடுக்கப் போறாங்க.. 4

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 26, 2007

(பயில்வான் தலையிலடித்துக்கொண்டு தன் மகளைப் பார்க்கிறார். அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு தன் தந்தையைப் பார்த்து கண்ணடிக்கிறார். திரும்பி செந்திலிடம்) இருங்க.. வாரன்.. (வீட்டிற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் ஒரு பழைய உள்ளூர் பஸ் டிக்கட்டைக் கொண்டு வந்து காட்டுகிறார்) இந்தாங்க.. நீங்க கேட்ட டிக்கெட்டு..

(செந்தில் அதை வாங்கி சோதித்துவிட்டு திருப்தியுடன் கவுண்டரிடம் கொடுக்கிறார்.)

கவு: டேய்.. இது பழைய பல்லவன் பஸ் டிக்கெட்டுடா.. இங்க பார் பாரீஸ் கார்னர்னு போட்டுருக்கு..

செந்: சரி விடுங்கண்ணே.. ஒருவேளை பாரீசுக்கு பக்கத்துலதான் போயிருக்கோ என்னமோ.. ஊருக்கு போயிருக்குன்னு இவங்க சொல்றது சரியாத்தான் இருக்கும்.. என்ன மேடம்? (சற்று நெருக்கமாக செல்ல பயில்வான் தன் பெரீஈஈய கைகளால் செந்திலைப் பிடித்து பின்னுக்கு தள்ளுகிறார்)

செந்: (சமாளித்துக்கொண்டு) சரி.. டிக் பண்ணிருவோம்.. அடுத்தது மாணிக்கம். வயசு 90!

கோவை2: தாத்தா இப்ப உசிரோட இல்லை.. (கண் கலங்குகிறார். பயில்வான் மகளை பாசத்துடன் அணைத்துக்கொள்கிறார்)

செந்: ( கோவை2வை அணைத்துக்கொண்டிருக்கும் பயில்வானின் கரங்களைப் பார்த்தவாறு பெருமூச்சுடன்) நீங்க குடுத்து வச்சவர் சார்..

பயில்: (கோபத்துடன் பற்களைக் கடிக்கிறார்) டேய்.. நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி உயிரோட போறதில்லேங்கற முடிவோடத்தான் வந்துருக்கீங்க போலருக்கு.. எம் பொண்ணுக்கு எங்கப்பான்னா உயிர்டா.. அவர் உசிரோட இல்லேங்கறா.. நா குடுத்து வச்சவனா?

கவு: அதானே.. ஏண்டா சார் எவ்வளவு ஃபீலிங்கோட சொல்றார்.. நீ பாட்டுக்கு குடுத்து வச்சவர்ங்கறே..

செந்: (கவுண்டரை நெருங்கி ரகசியக் குரலில்) ஐயோ.. அண்ணே நீங்க வேற போட்டு குடுக்காதீங்க.. அவர் அந்த ஃபிகர கட்டிப்புடிச்சத பார்த்துட்டு சொல்லிட்டேண்ணே.. (முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பயில்வானிடம்) மன்னிச்சிருங்க சார்.. அப்போ தாத்தா இல்லை? பேர அடிச்சிரட்டுங்களா..பேனாவால் மாணிக்கம் என்ற பெயரை அடிப்பதற்கு பதில் மாணிக்கம்மாள் என்ற பெயரை அடித்துவிடுகிறார்.

கோவை2 (அதைப் பார்த்து பதறி..)ஐயையோ.. அது பாட்டி பேருங்க.. அத ஏன் வெட்றீங்க.. (மாணிக்கம் பெயரை சுட்டிக்காட்டி) இதான் தாத்தா பேரு.. (மீண்டும் கண்கலங்க பயில்வான் பொறுக்க முடியாமல் செந்திலை நோக்கி கையை ஓங்கியவாறு நெருங்குகிறார்)

செந்: (வீம்புடன்) யோவ்.. என்ன ரொம்பத்தான் துள்றே.. கைய வச்சிருவியா.. எங்க வைய்யா பாப்போம்.. நா ஒரு கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்.. ஞாபகம் வச்சிக்க.. ஏதோ பேர் கொளப்பம்.. ரெண்டு பேருக்கு ஒரே பேர் வச்சா கொளம்பத்தான்யா செய்யும்.. அதுக்கு பேர் வைக்கறப்பவே யோசிச்சிருக்கணும்.. என்னடா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே பேர் வைக்கறமேன்னு.. அப்போ கோட்டை விட்டுப்போட்டு.. இப்ப துள்ளுன்னா என்னய்யா அர்த்தம்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) என்னண்ணே பாத்துக்கிட்டு நிக்கறீங்க? சொல்லுங்கண்ணே.. நா கேட்டதுல தப்புருக்கா..

கவு: (தலையில் அடித்துக்கொண்டு தனக்குள்) இவன் நம்ம முதுகுல டின் கட்டாம விடமாட்டான் போலருக்கே.. (செந்திலிடம்) டேய் என்னடா சொல்றே.. ஒங்கப்பனுக்கு நீயா பேர வச்சே.. இங்க பாத்தது போறும்.. வாடா போலாம்.. (திரும்புகிறார்)

செந்: (லிஸ்ட்டைப் பார்க்கிறார்) இருங்கண்ணே.. இன்னொரு ஐட்டம் இருக்கே இந்த அட்றஸ்லே..

கவு: ஐட்டமா.. என்னடா சொல்றே (ஓரக்கண்ணால் பயில்வானைப் பார்க்கிறார்) அது ஒரு ஆளோட பேர்டா..

செந்: (அலட்சியத்துடன்) சரி ஏதோ ஒன்னு.. (கோவை2வை மீண்டும் நெருங்கி) மேடம்.. இது யாருன்னு சொல்லலையே.. (அதிலிருந்த சிங்காரம்மாள் என்ற பெயரை தவறாக சிங்காரியா ஒய்யாரியா என்று கிண்டலுடன் படிக்க பயில்வான் கோபத்துடன் வீட்டிற்குள் செல்கிறார்.. செந்தில் கோவை2வை நெருங்கி) என்ன மேடம்.. அவங்கள கூட்டிக்கிட்டு வரப் போயிருக்காரா?

(பயில்வான் கையில் நீண்ட துப்பாக்கியுடன் வருவதைப் பார்த்துவிட்டு கோவை2)ஐயோ அது எங்கம்மா பேருங்க.. அவங்க பேரப் போயி.. ஓடிருங்க.. எங்கப்ப துப்பாக்கிய எடுத்துட்டா அதுலருந்து புகை வராம வைக்கமாட்டார்..

(அதுவரை நடப்பதை கண்டுக்கொள்ளாமல் படுத்துக்கிடந்த நாயார் எழுந்து செந்திலை நோக்கி உறும செந்தில் கவுண்டரை தள்ளிக்கொண்டு படிகளில் தாவி இறங்க கீழே முகங்குப்புற விழப்போன கவுண்டர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார். துப்பாக்கியுடன் வந்த பயில்வான் சாலையில் தலை தெறிக்க ஓடும் இருவரையும் நோக்கி குறிவைக்க கோவை2 அதைப் பிடித்து இழுக்க ஒரு கூட்டமே நின்று வேடிக்கை பார்க்கிறது.)

நிறைவு..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 6 மறுமொழிகள் »

சென்சஸ் எடுக்கப் போறாங்க 3

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 23, 2007

செந்: அதா நா இருக்கேன்லேண்ணே.. நீங்க பேசாம நில்லுங்க.. நா கேக்க, கேக்க நீங்க கம்முன்னு டிக் பண்ணிக்கிட்டே வாங்க..

பயில்வான்: யார்யா நீங்க? நீங்க முழிக்கற முழியே சரியில்லையே.. பால்கனியிலிருந்து கீழே பார்க்கிறார்.. வாசலில் நாயரும் மகளும் நிற்பது தெரிகிறது..) யோவ் நாயர்.. ஒன்கிட்ட வாடகைக்கு வீட்ட குடுக்கறப்பவே சொன்னேன்லே.. கேட்ட எப்பவும் மூடி வையின்னு.. கண்ட, கண்ட பயல்லாம் வீடேறி வர்ற வரைக்கும் என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கே..

(கவுண்டர் கோபத்துடன் ஏதொ பேச வாயெடுத்துவிட்டு பிறகு மூடிக்கொள்கிறார்.)

செந்: அண்ணே வேணாம்.. வந்த வேலைய மட்டும் முடிச்சிக்கிட்டு போயிருவோம்.. ஏற்கனவே மயக்கம் போட்டு விழுந்திருக்கீங்க.. நா பேசிக்கறேன் (முன்னால் சென்று) சார்.. நாங்க கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்ஸ்.. கொஞ்சம் மரியாதையா பேசுனா நல்லாருக்கும்..

(அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பயில்வான் பின்னாலிருந்து ஒரு இளம் பெண் எட்டிப் பார்ப்பதைக் கண்டுவிடுகிறார்.. வாயெல்லாம் பல்லாகிறது..) (இவங்கள யார்னு கற்பனை பண்றது நக்மா? சீ.. அவங்க ரிட்டையர்டாயாச்சு.. சிம்ரன்.. சே.. அவங்க ரொம்ப குண்டாய்ட்டாங்க.. த்ரிஷா? வேணம்பா நா செந்திலுக்கு ஜோடியான்னு சண்டைக்கு வருவாய்ங்க.. சரி.. ஒங்களுக்கும் வேணாம் எனக்கு வேணாம்.. நம்ம கோவை சரளாவே டபுள் ஆக்ஷன் பண்ணிக்கட்டும்..)

பயில்: (செந்திலின் பார்வை செல்லும் பாதையை கவனித்துவிடுகிறார்) டேய்.. இதான் கவர்ன்மெண்ட் ஸ்டாஃபோட லட்சணமா.. நீ எதுக்கு வந்தியோ அந்த சோலியே பாக்காம அங்க என்ன லுக்கு விடறே.. ஒரு குத்து விட்டேனா சட்னியாயிருவே.. நீயும் ஒம் மூஞ்சியும்.. ஒனக்கு என்ன வேணும் இப்போ..அதச் சொல்லு..

(கவுண்டர் வாயை மூடிக்கொண்டு சிரிக்கிறார். செந்தில் அதைக் கண்டுக்கொள்ளாதவர் போல் கையிலிருந்த பட்டியலில் இருந்து படிக்கிறார்) இங்க மடசாமி யாரு சார்? நீங்களா? (முனகுகிறார்) சரியாத்தான்யா வச்சிருக்காய்ங்க..

பயில்: டேய் என்ன நக்கலா? மாடசாமிய மடசாமின்னு படிக்கே?(கோபத்துடன் முஷ்டியை குவித்து குத்த வருகிறார். அதற்குள் கோவை2 வந்து அவருடைய கையைப் பிடித்துக்கொள்கிறார்)

கோவை2: அப்பா.. அவருதான் கவர்ன்மெண்ட் ஸ்டாஃபுன்னு சொல்றாருல்லே.. அவர போயி அடிக்கப் போறீங்க.. டியூட்டியிலருக்கற கவர்ன்மெண்ட் ஸ்டாஃப் மேல கைய வச்சா வில்லங்கமாயிரும்பா.. வேணாம் (அவர் குரலிலிருந்த கொஞ்சல் செந்திலை மெய்மறக்கச் செய்கிறது. கண்களை மூடி அப்படியே கனவுலகுக்கு செல்கிறார்.. கட்.. கட்.. என்கிறார் டைரக்டர்.. யார்.. நம்ம கவுண்டர்தான். அதனால கனவுல டூயட்லாம் ஒன்னும் வேணாம்.)

பயில்: சரி ஒனக்காக விடறேன்.. என் செல்லம்லே.. (மகளைக் கொஞ்ச.. அவரோ செந்திலை ஓரக்கண்ணால் பார்த்து ஒரு வசீகர புன்னகையை விடுக்கிறார்)

செந்: சாரி.. சார்.. நா தமிள்ல கொஞ்சம் வீக்.. அதான்.. சரி.. அண்ணே மாடசாமிய டிக் பண்ணிக்குங்க.. ரைட்.. அடுத்தது ஜல்சா ராணி.. என்னது? (பயில்வான் மீண்டும் கோபத்துடன் முஷ்டியை உயர்த்துகிறார்)

கோவை2: ஊம்..(சிணுங்குகிறார்) அது ஜலஜா ராணி.. நாந்தேன்.. வயசு என்னன்னு போட்டுருக்கு?

செந்: பதினேழு..

கோவை2: (வெட்கத்துடன்) கரெக்டாதான் சொல்றீங்க (செந்தில் லிஸ்ட்டில் இருக்கும் தியதியை டிக் செய்கிறார்)

கவு: டேய்.. அது போன தேர்தலப்போ எடுத்ததுறா.. அஞ்சு வருசமாச்சில்லே..

செந்: (எரிச்சலுடன்) என்னண்ணே நீங்க.. வருசம் மாறுனா வயசுமா மாறும்.. நா பத்தாங்கிளாஸ் பாஸ்ணே..

கவு: (நொந்துபோகிறார்) டேய்.. அதையே எத்தனதரம்டா சொல்வே.. மேல படிடா..

செந்: மாணிக்கம்மாள்.. வயசு 80.. என்னது எண்பதா? எங்க காணம்? (பயில்வானுக்கு மேலே எம்பி பார்க்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை)

பயில்: யோவ்.. அவங்க இப்ப இல்லை..

கவு: மேல போய்ட்டாங்க போலருக்கு.. பேர அடிடா..

(கோவை2 கண் கலங்குகிறார். பயில்வான் கவுண்டருடைய கழுத்தில் கைவைக்கிறார்)

பயில்: டேய்.. இன்னைக்கி ஒங்க ரெண்டு பேரையும் என்ன பண்றேன் பார்..

கவு: (சிரமப்பட்டு அவருடைய கைகளை விடுவிக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. செந்தில் பார்த்துக்கொண்டு வெறுமனே நிற்கிறார்) டேய்.. டேய்.. ஏதாச்சும் பண்ணேண்டா.. செத்து கித்து போயிரப் போறேன்..

செந்: (சிரிக்கிறார்) பயப்படாதீங்கண்ணே.. நாம கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்ணே.. லேசா கைய வச்சாலே ஆறு மாசம் ஜெயில்.. இப்ப ஒங்கள கொன்னுட்டார்னு வச்சிக்குங்க.. தூக்குதான்..

(பயில்வான் செந்திலை முறைத்தவாறு கைகளை எடுக்கிறார். கவுண்டர் கழுத்தை தேய்த்தவாறு செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இருந்தாலும் ஒன் லொள்ளு தாங்கலடா.. நா செத்ததுக்கப்புறம் இவன் ஜெயிலுக்கு போனா என்ன போவாட்டி என்ன.. இப்ப நா என்னடா தப்பா சொல்லிட்டேன். கெழத்துக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எண்பது வயசு.. இதுல இவன் இப்போ இல்லேங்கறான்.. நான் என்னத்தடா நினைக்கறது..

கோவை2: (கொஞ்சலுடன்) பாட்டி ஊருக்கு போயிருக்காங்க..

செந்: (முறைப்புடன்) நாங்க எப்படி நம்பறது.. அவங்க ஊருக்கு போன டிக்கெட் இருக்கா.. இருந்தா காமிங்க.. டிக் பண்ணிக்கறோம்.. (கோவை2 பரிதாபமாக தன் தந்தையைப் பார்க்கிறார்) சொல்லுங்க டிக்கெட் இருக்கா? இல்லன்னா சொல்லிருங்க.. பேர கட் பண்ணிடறோம்.. (கவுண்டர் செந்திலைப் பார்த்து பற்களைக் கடித்தவாறு தனக்குள்) டேய்.. ஒன்னெ கூட்டிக்கிட்டு வந்தேன் பார்.. ஊருக்கு போனவங்க டிக்கெட் இவங்கக்கிட்ட எப்படிறா?

(பயில்வான் தலையிலடித்துக்கொண்டு தன் மகளைப் பார்க்கிறார். அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு தன் தந்தையைப் பார்த்து கண்ணடிக்கிறார். திரும்பி செந்திலிடம்) இருங்க.. வாரன்.. (வீட்டிற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் ஒரு பழைய உள்ளூர் பஸ் டிக்கட்டைக் கொண்டு வந்து காட்டுகிறார்) இந்தாங்க.. நீங்க கேட்ட டிக்கெட்டு..

தொடரும்..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 15 மறுமொழிகள் »

சென்சஸ் எடுக்கப் போறாங்க.. 2

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 22, 2007

கவு: டேய் தண்டோராத் தலையா, நா ஒருத்தன் இங்க மூச்சுவிட முடியாம உளுந்துக் கிடக்கேன்.. ஒனக்கு அந்த பொண்ணோட பல்லுதான் முக்கியமா போச்சா..?

செந்: (சிரிக்கிறார். பிறகு குனிந்து ரகசியக் குரலில்) இல்லண்ணே.. அந்தப் பொண்ணு இந்தாளோட மக போலருக்கு.. அதான் கொஞ்சம் ஐஸ் வச்சேன்.. இந்த பயலுக்கு காச குடுக்காம தப்பிச்சிக்கலாம் இல்லே..

கவு: (ஓரக்கண்ணால் நாயரையும் பெண்ணையும் பார்க்கிறார்) (தனக்குள்) பொண்ணு சூப்பராத்தான் இருக்கு.. பிராக்கெட் போட்டு பாக்கலாம் போலருக்கே..(துள்ளி எழுகிறார்) டேய்.. இப்ப பரவால்லை.. காலையிலருந்து சரியா ஒன்னும் திங்கலையா அதான்.. கொஞ்சம் லேசா.. (மலையாளப் பெண்ணை நெருங்கி) மேடம்.. மேடம்.. குடிக்க கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணி கிடைக்குமா (குடிப்பதுபோல் ஆக்ஷன் செய்து காட்டுகிறார்)

கோவை: (எட்டி பின்னால் குதிக்கிறார்)ஏய்.. எந்தா இது.. தண்ணியோ.. இது வீடாக்கும்.. கள்ளு ஷாப்பல்லா.

செந்: (உரக்க சிரிக்கிறார்..பிறகு கவுண்டரை ஒதுக்கிவிட்டு நெருங்கி நிற்கிறார்) மேடம்.. தண்ணின்னா தமிள்ல வாட்டர்..

கவு: டேய்.. பண்டாரத் தலையா தமிள் வார்த்தைக்கு இங்க்லீஷ்ல அர்த்தம் சொல்றியா.. தள்றா.. (பெண்ணை ரொம்பவே நெருங்கி) கொஞ்சம் குடிக்க வாட்டர்..

கோவை (கலகலவென சிரித்தவாறு வீட்டிற்குள் ஓடிச்சென்று ஒரு பாட்டிலில் குடிநீருடன் வாசலில் வந்து நின்று) வரு.. இவ்விட வரு.. (வலது கையால் சைகைக் காட்டுகிறார்)

நாயர் (முறைத்தவாறு தன் மகளை நெருங்கி) எடி பிராந்தி..

செந்: போச்சிறா.. அந்த பொண்ணு குடிக்க தண்ணி தரேங்குது.. இவன் என்னடா பிராந்திய குடுங்கறான். நல்ல குடும்பம்டா.. அண்ணே வேணாம் இன்னும் பத்துவீடாவது நாம முடிக்கணும்.. பேசாம வந்துருங்க.. டீயே குடிச்சே மயங்கி விழுந்த ஆளு நீங்க.. இதுல இந்தம்மா குடுக்கற பிராந்தியயும் குடிச்சீங்க.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்..

(கோவை மீண்டும் லகலவென சிரிக்கிறார்)அல்லா.. பிராந்தி அல்லா.. மலையாளத்துல பிராந்துன்னா மேட்னு அர்த்தம்.

செந்: என்னது மேடா.. அப்ப பள்ளத்துக்கு என்ன மேடம்?

கவு: அடேய்.. அடேய்.. மேட்னா தமிழ்ல பைத்தியம்னு அர்த்தம்டா.. மானத்த வாங்காம கொஞ்ச நேரம் சும்மாயிருடா.. (கோவையின் கையைத் தொட்டு பாட்டிலை வாங்கி ஒரே மூச்சில் குடிக்கிறார்)

செந்: (சிரிக்கிறார்) அண்ணே நான் பத்தாங் க்ளாஸ் பாஸ்ணே.. மேடுன்னா பைத்தியம்னு ஒங்களுக்கு தெரியுமான்னு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணி பார்த்தேண்ணே..

(கவுண்ட பெல் கோபத்துடன் திரும்பி ஒரு உதை விடுவதுபோல் காலைத் தூக்க செந்தில் துள்ளி குதித்து தப்புகிறார். கோவை மீண்டும் கலகலவென சிரிக்கிறார்)

கவு: அடடடடா.. இந்த சிரிப்புக்கே குடுத்துரலாம்டா..

செந்: எத? ஒங்க ஓட்ட வீட்டையா? அக்காவுக்கு மட்டும் தெரிஞ்சது.. நீங்க தொலைஞ்சீங்க.. மரியாதையா வந்த வேலைய பாப்போம்.. (கக்கத்தில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து புரட்டியவாறு வீட்டு எண்ணைப் பார்க்கிறார்) ஐ! ஒம்போது.. அண்ணே எட்டுக்கப்புறம் ஒம்போத காணம்னீங்களே இதான அது!

கவு: ஆமாடா.. எட்டுக்கப்புறம் ஒம்போதத்தான் தேடுவாங்க.. பின்னே பத்தையா தேடுவாங்க.. லிஸ்ட்லருக்கற பேர படிடா.. (ரகசியமாக) முதல்ல இந்த பொண்ணோட பேர படி.. சிரிப்பு மாதிரியே அளகா இருக்கான்னு பாப்போம்..

செந்: (லிஸ்ட்டைப் பார்த்துவிட்டு குழப்பத்துடன் கோவையையும் அவருகில் நின்ற நாயரையும் பார்க்கிறார்) என்னண்ணே இது..

கவு: என்ன நொன்னண்ணே.. பேர படிடான்னா..

செந்: அதாண்ணே.. லிஸ்ட்ல தமிளாளுங்க பேரால்லே இருக்கு? இதுங்க மலையாளமாச்சே..

கோவை: (சிரிக்கிறார்) அது நாங்க இல்லே.. ஹவுஸ் ஓனர். மேல இருக்குது..

செந்: வாங்கண்ணே (படிகட்டுகளை நோக்கி நகர்கிறார்)

கோவை: ஏய்.. பாத்து.. வாசல்ல நாய் இருப்பாங்க..

கவு: பாத்தியாடா எவ்வளவு மரியாதையா இருக்காங்க மலையாளிங்க.. நாய் இருப்பாங்களாம்..

செந்: (சலிப்புடன்) நீங்கதான் மெச்சிக்கணும்.. மனுசங்கள அது, இதுங்குது.. நாய அவங்கங்குது..

கவு: சலிச்சிக்காதட.. சரி பாத்துவா.. நாய்ங்க கடிச்சிடப் போறாங்க..

செந்: என்னாச்சிண்ணே.. ஒங்களுக்கு மலையாள வாடை அடிச்சிருச்சா.. ஒரு அளகான பொண்ணெ பாத்துரக்கூடாதே..

கவு: சரிடா பம்பரத் தலையா.. வா..

(வாசலில் கட்டிப்போட்டிருந்த நாய் ஆள் வரும் சப்தம் கேட்டு எழுந்து நின்று சோம்பல் முறிக்கிறது. பிறகு இருவரையும் முறைக்கிறது. குலைப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குள்.. கவுண்டர் சார், சார்.. சென்சஸ் சார்.. என்று குரல் கொடுக்கிறார். உள்ளிருந்து டேய்.. சும்மாயிரு.. என்ற அதிகாரக் குரல். கவுண்டர் திரும்பி செந்திலை முறைக்கிறார்)

கவு: டேய்.. இவன் யாரச் சொல்றான் என்னையா இந்த நாயையா?

செந்: சிரிக்கிறார்… ஒங்கள சொல்வாராண்ணே.. அவர் கொரல் கேட்டதும் நாய் கப்சிப்புன்னு ஆயிருச்சி பாருங்க.. போங்க..

கவு: அதானே பாத்தேன்.. இல்லன்னா மவனே அவனெ தூக்கிப் போ… (கதவு திறந்து பயில்வான் சைசில் ஒருவர் வந்து நிற்க கவுண்டர் வாயை மூடிக்கொண்டு பரிதாபமாகப் பார்க்கிறார்) ச..சார்.. சென்..சஸ்..

செந்: (ரகசியமாக) நல்ல வேளைண்ணே.. நீங்க முடிக்கறதுக்குள்ளயே வந்துட்டார்.. தப்பிச்சீங்க.. இனியாச்சும் வாய தொறக்காம கேளுங்க..

கவு: (ரகசியக் குரலில்) டேய்.. என்ன நக்கலா.. வாய தொறக்காம என்னத்தடா கேக்கறது?

தொடரும்

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 8 மறுமொழிகள் »

கவுன்டரும் செந்திலும் சென்சஸ் எடுத்தால்…

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 21, 2007

நம்ம கவுண்டரும் செந்திலும் சேர்ந்து சென்சஸ் எடுக்கப் போறாங்க. கையில அஞ்சி வருசத்துக்கு முன்னால எடுத்த வாக்காளர்கள் லிஸ்ட்.

காலையிலருந்து சென்சஸ் எடுத்த களைப்பும் அலுப்பும் கவுண்டபெல் முகத்தில்..

செந்: என்னண்ணே.. ரொம்பத்தான் சோர்ந்து போய்ட்டீங்க போலருக்கு.. என்னைய பாருங்க.. அப்படியே இன்னைக்கி பூத்த பூ மாதிரி இருக்கேன்..

க.மணி: (கடுப்புடன் பார்க்கிறார்) டேய்.. நீ? இன்னைக்கி பூத்த பூ? வேணான்டா, என் வாய கெளறாத. சொல்லிட்டேன்..

செந்: கெளற்னா என்னண்ணே.. ரெண்டு திட்டு திட்டுவீங்க.. திட்டிட்டுப் போங்க.. ஆனா அதுக்காக நான் சொன்னது இல்லேன்னு ஆயிருமாண்ணே.. நா பூ மாதிரிதாண்ணே..

க.மணி: (களைப்புடன்) சரிடா அப்படியே வச்சிக்க.. ஆளவிடு.. அடுத்த வீட்டுக்கு போறதுக்கு முன்னால ஒரு டீ அடிப்பம் வா. (சாலையோர கடையை நோக்கி நகர்கிறார். செந்தில் கையிலிருந்த புத்தகத்தை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு பின்னால் ஓடுகிறார். டீக்கடை எதிரில் கிடந்த ஒரே மர நாற்காலியில் கவுன்டர் அமர்ந்துக்கொள்ள செந்தில் வேறு வழியில்லாமல் நிற்கிறார்)

செந்: (சிரித்தவாறு) என்னண்ணே இவ்வளவு சீக்கிரம் சரண்டராயிட்டீங்க.. ரொம்பத்தான் டயர்டாய்ட்டீங்க போலருக்கு..(கடைக்காரரை பார்த்து) யோவ் டீ இருக்கா? அண்ணன் ரொம்ப களைச்சி போயிருக்கார்.

டீ: ஏய் எந்தா, கேலியோ.. இது டீக்கடையாக்கும்? ஒங்கண்ணன் மாத்திரமல்லா.. காசு கொடுத்தா ஏது பட்டி வந்தாலும் இவ்விட டீ உண்டு.. எத்தன டீ வேணும் அதச் சொல்லு.

(க.மணி கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறார்.)

செந்: (கோபத்துடன்) இந்த நாயர் சொன்னத கேட்டீங்களாண்ணே.. ஒங்கள நாய்ங்கறான்.. யோவ், என்ன கொழுப்பா? நம்ம அண்ணன் யார்னு தெரியல?

டீ: (ஏளனத்துடன் கவுன்டரைப் பார்க்கிறார்) யாரான ஈயாளு? வெல்லிய கலெக்டரோ.. எத்தன டீ வேணும்.. அதச் சொல்லு..

செந்: யோவ்.. என்ன ஓட்ட ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்கே.. ரெண்டு பேருக்கு ரெண்டு டீன்னு கூட தெரியாம.. நீயெல்லாம் ஊர் விட்டு ஊர் வந்துட்டே.. திங்கறதுக்கு எதாச்சும் இருக்கா?

டீ: ஓ இருக்கே.. நேந்திரம்பழம் புழுங்கி வச்சிருக்கி..

செந்: என்னது புளுங்கி வச்சிருக்கியா? என்னய்யா சொல்றே.. அண்ணே நீங்க எழுந்து வாங்க.. வேற எங்கயாச்சும் போவோம். இவன் என்ன சொல்றான்னே புரியமாட்டேங்குது..

க.மணி:(அலுப்புடன்) டேய் சும்மார்றா நீ வேற.. சூடா எதையாச்சும் ஊத்துனாதான் எனக்கு உயிர் வரும்போலருக்கு.. அவன்கிட்ட என்ன இருக்கோ எடுத்து வுடச் சொல்லு..

செந்: என்னது எடுத்து உடறதா? என்னாச்சிண்ணே ஒங்களுக்கு.. நீங்களும் அவன் மாதிரியே பேசறீங்க.. யோவ்.. ஒங்கிட்ட இருக்கறதயெல்லாத்துலயும் ஓன்னு எடுத்து வுடுய்யா.. சீ.. நமக்கும் அதே பாஷையே வருது.. எடுத்து ப்ளேட்ல வச்சி குடுய்யா.. அப்படியே ரெண்டு மசாலா டீ போடு.. ஏலக்காய் இருந்தா அதயும் பொடி பண்ணி போடு.. குடிச்சிட்டு அண்ணன் தெம்பா இன்னும் பத்து வீட்டுப்படி ஏறி எறங்கணும்லே..

(நாயர் தனக்குள் முனுமுனுத்தவாறே இரண்டு கண்ணாடி தம்ளர்களில் டீ கலந்து அதனுடன் ஒரு அலுமினிய தட்டில் இரண்டு வேகவைத்த நேந்திரம் பழத்தையும் கடைப் பையனிடம் கொடுத்தனுப்புகிறார்.)

(க.மணி தலையைக் குனிந்தவாறே டீயை வாங்கி மடமடவென குடித்து முடிக்க செந்தில் அவரை முறைக்கிறார்)

செந்: என்னாச்சிண்ணே உங்களுக்கு? இதெல்லாம் டீயாண்ணே.. களுவி ஊத்துன தண்ணி மாதிரி இருக்கு.. இதப்போயி மூச்சு புடிச்சி குடிக்கறீங்க.. யோவ்.. இதென்னா டீயா இல்ல பாத்திரம் களுவுன தண்ணியா.. இந்தா நீயே குடி.. (தட்டைப் பார்க்கிறார்) இதென்னா கன்னங்கரேல்னு..இதான் நீ சொன்ன புளுங்குன பளமா.. பாக்கவே அசிங்கமாருக்கு.. இது குப்பையில போடத்தான் லாயக்கு (இரண்டையும் எடுத்து சாலையோரத்திலிருந்த குப்பை தொட்டியில் வீசுகிறார்).. வாங்கண்ணே நாம போவோம்.. இதுக்கெல்லாம் இவனுங்களுக்கு பைசா குடுத்தா நாமதான் முட்டாப்பயல்க.. டீ போடறானுங்களாம் டீ..

(நாயர் பாய்ந்து வந்து குறுக்கே நிக்கிறார்)

டீ: எடோ.. ஞான் விடில்லா.. பைசா தந்துட்டு பொக்கோ..

செந்: என்னது பொக்கையா.. யோவ் யார பார்த்து பொக்கைங்கறே.. நம்ம அண்ணன் ஒரு குத்து விட்டார்னா ஒனக்குத்தான் வாய் பொக்கையாயிரும்.. எடுய்யா கைய.. உப்புச் சப்பில்லாத டீயயும் ரெண்டு அளுகிப்போன பளத்தையும் கொண்டுக்கிட்டு வந்துட்டான். இதுக்கு காசு வேறயா.. வாங்கண்ணே போலாம்..

(க.மணி எழுந்து இயந்திரக்கதியில் செந்திலை பிந்தொடர்கிறார். இருவரும் சாலையைக் கடக்க நாயர் அவர்கள் பின்னால் ஓடுகிறார்.)

செந்: (எதிர் வீட்டையடைந்து திரும்பிப் பார்க்கிறார்) அண்ணே என்னாச்சின்னே.. அதான் டீய குடிச்சிட்டீங்கல்லே.. பெறவு எதுக்குண்ணே தலைய தொங்கப் போட்டுக்கிட்டு வரீங்க?

க.மணி: டேய் அந்த டீயிலதான் என்னமோ இருக்குடா.. குடிச்சதுலருந்து தள்ளாடுது.. உழறா மாதிரி இருக்குதுடா.. (அப்படியே சரிந்து அமர்கிறார். உடம்பெல்லாம் வியர்த்துவிடுகிறது. செந்தில் பதற்றத்துடன் சற்று தள்ளி நின்ற டீக்கடை நாயருடைய சட்டையைப் பிடித்து உலுக்குகிறார். அடுத்த வீட்டினுள்ளிலிருந்து ஒரு மலையாளப் பெண் ப்ளவுஸ் முண்டுடன் ஓடிவந்து பார்க்கிறார். கோவை சரளாவை நினைத்துக்கொள்ளுங்கள்.)

கோவை: (கண் இமைகள் இரண்டு படபடக்க) எந்தா.. எந்தாயி.. (நாயரைப் பார்த்து) எந்தாச்சோ?

நாயர்: (பதற்றத்துடன் தன் மகளை நெருங்கி) எடி.. ஒன்னெ யார் இங்க வரச் சொன்னது. இவர் ரெண்டு பேரும் சாயா கழிச்சிட்டு பைசா கொடுக்காண்டு எஸ்கேப் ஆயவரா.. ஞான் நோக்கிக்கொள்ளாம்.. தான் அகத்து பொக்கோ..

செந்: (எரிச்சலுடன்) யோவ் ஒனக்கு இந்த பொக்கைங்கற வார்த்தைய தவிர வேற ஒன்னுமே வாய்ல வராதா? இவரையும் பொக்கைன்னே சரி.. ஒத்துக்கறேன்.. வயசான ஆளு.. . அந்த பொண்ணு என்ன சின்னதா அளகாருக்கு, பச்சரிசி கணக்கா பல்லும் இருக்கு. அதப் போயி பொக்கைங்கறே?

தொடரும்..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 18 மறுமொழிகள் »

அந்தக் காலத்து காதல் – நிறைவு

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 14, 2007

நம்ம தோஸ்த் கொஞ்ச நாளாவே வழக்கமா வர்ற நேரத்துல ஸ்டேஷன்னுக்கு வராம இருந்தத எங்க கேங்க்லருந்த எல்லாருமே கவனிக்க ஆரம்பிச்சோம். முக்கியமா அந்த பொண்ணோட மகாபலிபுரத்துல போய் ஒரு நா முழுக்க தங்குனார்னு கேள்விப்பட்டதுலருந்து ஆளையே காணல. ‘என்னடா அவனெ காணோம். அந்த பொண்ணும் இப்பல்லாம் வர்றதில்லே. ஏதாச்சும் கசமுசாவாயிருச்சா. இல்ல நம்ம பையன நம்மள அவாய்ட் பண்றானா?’ என்று எல்லோரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.

எங்க கேங் மெம்பர்ல ஒருத்தன் நம்ம தோஸ்த் குடியிருந்த ஏரியாவுலதான் இருந்தான். ஆனா அவனுக்கும் விபரம் ஒன்னும் தெரியலேன்னான். ஆனா அவன் தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஆக்ட் குடுக்கறானோன்னு எங்களுக்கொரு சந்தேகம். அதனால ஒரு நா காலைல எல்லாருமா சேர்ந்து அவனெ மடக்கி விசாரிச்சோம். பய ஒத்துக்கிட்டான்.

தொடர்ந்து அவன் சொன்னத கேட்டப்போ எங்க எல்லாருக்குமே பரிதாபமா இருந்தது.

அவன் சொன்னதுலருந்து எங்களுக்கு தெரிஞ்சது இதுதான்.

நம்ம தோஸ்த் அந்த பொண்ணோட பழக ஆரம்பிச்சத அவங்கப்பா விரும்பல போலருக்கு. அவர் எஞ்சின் டிரைவரா இருந்தார். ஆனா சென்னைக்குள்ள போற வண்டியில இல்ல. ஒரு குட்ஸ் வண்டி. எப்படியோ தன் பொண்ணு ஒரு தமிழ் பையனோட சுத்தறத கண்டுபிடிச்சிருக்கார். எல்லாம் லோக்கல் பசங்க வேலைதான். இந்த வகுப்பைச் சார்ந்த பசங்கள்ல நிறைய பேர் ஸ்கூல் ட்ராப் அவுட்டாத்தான் இருக்கும். ஒழுங்கா படிக்க மாட்டானுங்க. அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. அப்பல்லாம் ரயில்வேய்ல இவங்களுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. அதுவும் ஃபயர் மேன் வேலைக்கு. கரி அள்ளிப்போடற வேலை. ஒவ்வொரு குடும்பத்துலயும் அப்பா, அண்ணன்னு யாராச்சும் ஒருத்தர் ரயில்வேல இருந்தாப் போறும். எட்டாவது முடிச்சவுடனேயே பசங்கள ரெக்கமெண்ட் பண்ணி ஃபயர் மேன் வேலைக்கு சேர்த்துவிட்டுருவானுங்க. கவர்ன்மெண்ட் ஜாப் ஆச்சே. சொற்ப சம்பளம்னாலும் நிரந்தர வேலையாச்சே. அந்த வேலைதான் கிடைக்குமேங்கற நெனப்புல எட்டாவதுக்கு மேல ஒருத்தனும் படிக்கமாட்டான்.

ஆனா பொம்பளப் பசங்க எல்லாமே மெட்ரிக்குலேஷன முடிச்சிட்டு டெலிஃபோன் ஆப்பரேட்டர், ரிசெப்ஷனிஸ்ட் இல்லன்னா டைப்பிஸ்ட்டுன்னு ஏதாவது ஒரு வேலைய தேடிக்கிறுவாங்க. அப்போ சதர்ன் ரயில்வே ஆஃபீஸ்லருந்த இந்த மாதிர் பதவிகளுக்கு இவங்களதான் ப்ரிஃபர் பண்ணுவாங்க. ரெண்டு காரணம். ஒன்னு இவங்களுக்கு தாய் மொழி ஆங்கிலம்கறது. ரெண்டாவது இவங்க ‘எதுக்கும்’ தயாராருப்பாங்கங்கறது. புரியும்னு நினைக்கேன்.

அதனால பொண்ணுங்களுக்கு அவங்க வகுப்ப சேர்ந்த பசங்க மேல அவ்வளவா விருப்பமிருக்காது. குடும்பத்தோட நிர்பந்தத்துக்காக கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா அது வரைக்கும் அந்த பசங்களோட டேட்டிங்லாம் வச்சிக்க விரும்பமாட்டாங்க. அதுக்கு வேறொரு காரணமும் இருக்கு. அந்த பசங்க சம்பாத்தியம் அவனுங்க ட்ரெஸ்சுக்கும், குடிக்குமே சரியாருக்கும். அப்புறம் இந்த பொண்ணுங்களுக்கு எங்க செலவு பண்றது? இவங்கக்கிட்டருந்து கடன் வாங்காம இருந்தா சரி..

ஆனா நம்ம பசங்க அப்படியில்லேங்கறது அந்த பொண்ணுங்களுக்கு நல்லாவே தெரியும். நம்ம பசங்களுக்கு தமிழ் பொண்ணுங்க கலரா, ஷேப்பா இல்லேங்கறதுதான் பெரிய வருத்தம். அதுவுமில்லாம சோஷியலா பழகவும் மாட்டாங்களே. கிட்ட போனாலே ‘ச்சீன்னு’ ஒதுங்கிக்கிறதுங்கக்கிட்ட போயி டேட்டிங்னு சொன்னா வேற வெனையே வேணாம். கால்லருக்கறதத்தான் மொதல்ல கழட்டும்!

அதனால கல்யாணத்துக்கு முன்னால ஒரு அஃபேர் இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கற பசங்களுக்கு ஆ.இ.பெண்கள்தான் கதி. மத்தபடி காதல், கத்தரிக்காய்னுல்லாம் ஒன்னுமில்லை.

ஆனா நம்ம தோஸ்த் அவனோட காதல்ல கொஞ்சம் சீரியசாவே இருந்துட்டான் போலருக்கு. ஒருவேளை அந்த பொண்ணுக்கும் அப்படி இருந்துருக்குமோ என்னவோ?

ஆனா அதோட அப்பாவுக்கு புடிக்கலைங்கறத நம்ம தோஸ்த் தெரிஞ்சதுக்கப்புறமாவது ஒதுங்கியிருக்கலாம். செய்யல. அதுவுமில்லாம அந்த பொண்ணுக்கு சொந்தக்கார பய ஒருத்தன் இருந்துருக்கான்.

அவனும் அவனோட தோஸ்த்துங்களுமா சேர்ந்து ஒரு நா நம்ம தோஸ்த்த வழியில மடக்கி.. அப்புறம் என்ன, நம்ம தோஸ்த் ரெண்டு நாளா ஆஸ்பத்திரியில இருக்க வேண்டிய அளவுக்கு ஆயிருச்சி..

அடுத்த நாள்லருந்து ஆஃபீஸ் வரைக்கும் அந்த பையன் கூடவே போறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. லோக்கோ ஒர்க்ஸ் ஸ்டேஷனுக்கு வராம அதுக்கடுத்த பெரம்பூர் ஸ்டேஷன்லருந்து ட்ரெய்ன புடிச்சிருக்கு அந்த பொண்ணு. நாங்கதான் கவனிக்காம இருந்துருக்கோம்.

ரெண்டு மூனு வாரம் கழிச்சி மறுபடியும் நம்ம தோஸ்த்த பாத்தப்போ, ‘டேய் இது ஒனக்கு தேவையா’ன்னு துக்கம் விசாரிச்சோம். பாவம், தோல்வியை சந்தித்த வேதனையில் இருந்த அவனை மேற்கொண்டு கேள்விக கேட்டு பலனில்லைன்னு தெரிஞ்சிது. அதுக்கப்புறம் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பாக்காத (அதாவது ஓரக்கண்ணால் மட்டும் பார்க்கும்) எங்கள மாதிரியே ஆய்ட்டான்.. ஆனா ரொம்ப நாளைக்கு அந்த சோகம் அவன் முகத்துல இருந்தத பாக்க முடிஞ்சது. கொஞ்ச மாசங்களுக்கப்புறம் அவன் பாத்துக்கிட்டிருந்த வேலைய விட்டுட்டதா கேள்விப்பட்டோம்.. யாருக்கும் வீட்டுக்கு போய் விசாரிக்கணும்னு தோனலை.. ரயில் சிநேகம்தானே..

கல்யாணத்துக்கு முன்னாடி ஒரேயொருதரம் ‘அனுபவிச்சதோட’ அவன் காதல் அல்பாயுசுல முடிஞ்சிருச்சி..

இப்ப அவன் எங்கருக்கான்? யாருக்கு தெரியும்? ஒருவேளை இந்த தொடர படிச்சிட்டு சிரிக்கானோ என்னவோ..

இதாங்க அந்தக் காலத்து காதல்..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 3 மறுமொழிகள் »

அந்தக் காலத்து காதல் 4

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 13, 2007

ஆ.இ. பொண்ணுங்க பொதுவாவே நடுத்தரத்துக்கும் கொஞ்சம் கீழ இருக்கற குடும்பத்துலருந்து வர்றவங்க. குடும்பத்தலைவர்கள் பெரும்பாலும் சதர்ன் ரயில்வேல டிரைவரா இல்ல ஃபயர்மேனா இருக்கறவங்க. சம்பளம் பெருசா இருக்காதுங்கறதோட இவங்கள்ல பெரும்பாலானவங்க மடா குடியர்களா இருப்பாங்க. ஆண்கள் மட்டுமில்ல.. இல்லத்தரசிகளுந்தான்.

இவங்களுக்குன்னே பெரம்பூர்ல ஒரு ரயில்வே காலனியும் இருக்கு. வாடகை ரொம்பவும் சொற்பம். அதனால வாங்கற சம்பளம் முழுசும் உண்டு, குடிச்சி.. மீதி இருக்கறத உடுப்புக்கும், செருப்புக்கும் செலவு பண்ற வர்க்கம்.

வாரக் கடைசியானா ஒவ்வொரு சனிக்கிழமையும் காலனிக்குள்ளேயே இருக்கற டான்ஸ் ஹால்ல நடுராத்திரிவரைக்கு டான்ஸ் பார்ட்டி நடக்கும்.

இதுக்கெல்லாம் செலவழிக்க வாங்கற சம்பளம் பத்தாதுல்லே.. அதுக்காகவே இந்த இளம் மிஸ்சிக நம்ம தோஸ்த் மாதிரி இளவட்டங்கள ‘கணக்கு’ பண்ணி வச்சிக்குவாங்க.

அந்த ஏரியாவுலயே பத்து வருசத்துக்கு மேல குடியிருந்தவனாச்சே.. அத்தோட இவங்க போற சர்ச்சுக்குத்தான நானும் போய்கிட்டிருந்தேன். அதனால அவங்க பழக்கவழக்கம், நோக்கம் எல்லாம் நமக்கு அத்துப்படி.. நம்ம கிட்டருந்து காச புடுங்கறதுதான் இந்த மிஸ்சிங்க வேலைங்கறது நமக்கு நல்லாவே தெரியும். அதனால ஹை ஜோசஃப்.. ஹவ் ஆர் யூன்னு இளிச்சா.. சீரியசா மூஞ்ச வச்சிக்கிட்டு.. ஃபைன் தாங்யூன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன். நா மட்டுமில்ல என்கூட சர்ச்சுக்கு வர்ற பசங்க எல்லாருமேதான்..

ஆனா நம்ம தோஸ்த் ஒரு இந்து. அது மட்டுமில்லாம அவர் குடியிருந்த பகுதியும் பெரம்பூர் இல்ல.. ஸ்டேஷன்லருந்து பத்து பதினஞ்சு நிமிசம் பஸ்ல போற தூரம். இப்ப அதுவும் சென்னையோட ஒரு பகுதியாயிருச்சி. அதனால இவங்களப் பத்தி அவருக்கு அதிகமா தெரிய வாய்ப்பில்லை.

அதனால அவங்க ரெண்டு பேரையும் ஸ்டேஷன்ல வச்சி பார்த்ததும் அடப்பாவி இவனும் மாட்டிக்கிட்டானான்னுதான் தோனிச்சி. ஆனா கண்டுக்காம நா பாட்டுக்கு போயி நின்னுக்கிட்டிருந்த வண்டியில வழக்கமா ஏர்ற கோச்சுல ஏறி ஒக்காந்துக்கிட்டேன். வண்டி புறப்பட்டதுக்கப்புறமும் அந்த ஜோடி ஏறவே இல்லை. சரி அடுத்த நாள் பாத்துக்கலாம்னு அத்தோட அந்த விஷயத்த மறந்துட்டு கைலருந்த புஸ்தகத்துல காலையில விட்ட எடத்துலருந்து படிக்க ஆரம்பிச்சிட்டேன்..

அடுத்த நாள்..

நான் ஸ்டேஷனுக்குள்ள நுழைஞ்சதுமே கண்ணுல பட்டது அந்த ஜோடிதான். சிமெண்ட் பெஞ்சில ஒக்காந்துக்கிட்டு அக்கம்பக்கத்து ஆளுங்கள மறந்துபோயி.. கட்டிப்பிடிக்காத குறைதான்.. ஆனா இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் அந்த ஏரியாவுல சகஜங்கறதுனால அத யாரும் பெரிசா கண்டுக்கறதில்ல.

நம்ம கேங்கும் கொஞ்சம் தூரத்துல நின்னு இந்த ஜோடிய பாத்துக்கிட்டு நிக்கறத பார்த்தேன். ‘டேய்.. என்னடா பாத்துக்கிட்டு நிக்கறீங்க. இவனுக்கு லவ் பண்றதுக்கு ஆளா கெடக்கலே.. போயும் போயும் இத போய் புடிச்சிருக்கான். இவளுங்க வாரம் ஒரு டான்ஸ் பார்ட்னர மாத்தறவளுங்களாச்சேடா.’ என்றேன் கேங்கை நெருங்கியதும்.

யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. அவர்களுடைய பார்வை முழுவதும் மிஸ்சியின் ஏறி நின்ற கவுன் விளிம்பிலேயே இருந்ததை கவனித்த நான் டேய் நீங்க தேறாத கேசுங்கடா என்றவாறு ஒதுங்கி நின்றேன்..

இப்படியாக நம்ம தோஸ்த்தோட காதல் தொடர்ந்தது..

அடுத்த ரெண்டு மூனு வாரங்கள்ல அடிக்கடி நம்ம தோஸ்த்து காணாம போனான். அந்த மிஸ்சியிந்தான். ‘என்னங்கடா ரெண்டு பேரும் சேந்தாப்பல அம்போலாயிர்றாங்க.. ஏதாச்சும் சில்மிஷம் பண்றானா நம்ம ஆளு?’ என்றேன் நம் கேங்க் ஆசாமிகளுடன். ஆளுக்காள் கண்ணடிச்சிக்கிட்டான்களே தவிர ஒருத்தனும் வாய தொறந்து சொல்ல மாட்டேங்குறான்.’ அதுல ஒருத்தன் ரெண்டு பேர் மட்டும் பெருமூச்சுடன் ‘அவன் பயங்கரமான ஆள் ஜோசப். அந்த மிஸ்சிய எங்கயோ தள்ளிக்கிட்டு போறான் போலருக்கு. கேட்டா ஒன்னுமில்லடா ஜாலியா மகாபலிபுரம் வரைக்குங்கறான். என்ன நடக்குதோ தெரியல. எங்கயாவது எசக்கு பிசக்கா மாட்டிக்குவானோன்னு வேற பயமாருக்கு.’ என்றபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

இத்தகைய கேஷுவல் நட்புகள் ஆ.இ. பெண்களுக்கு சகஜம்தான் என்றாலும் சாதாரணமாக அவர்கள் வெளியாட்களுடன் இத்தனை நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏதாவது ஒரு பெண் செய்தால் அந்த வகுப்பைச் சார்ந்த ரோமியோக்கள் நம்முடைய ஆட்களின் முதுகில் ‘டின்’ கட்டிவிடுவார்கள். நம் வகுப்பைச் சார்ந்தா பெண்கள் நமக்குத்தான் சொந்தம் என்பது அவர்களுடைய எண்ணமோ என்னவோ..

அப்படித்தான் முடிந்தது நம்ம தோஸ்த்தோட அஃபேரும்!

நாளை நிறைவு பெறும்..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 4 மறுமொழிகள் »

அந்தக் காலத்து காதல் – 3

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 9, 2007

எதுக்கு?

அவருக்கு புடிச்ச மிஸ்சி எந்த கம்பார்ட்மெண்டுல ஏறுறாங்கன்னு தெரிஞ்சிக்கறதுக்குத்தான்.

சாதாரணமா ஆங்கிலோ இந்திய பெண்கள் பெண்கள் பெட்டியில் ஏறுவதில் குறியாயிருக்க மாட்டாங்க. அது நம்முடைய தமிழ் பெண்கள்தான். இவர்களுக்கு (ஆ.இ.பெண்கள்) அலுங்காமல் குலுங்காமல் போய் சேரவேண்டும். அதுதான் முக்கியம். ஆண்கள் பெட்டியில் ஆண்களுக்கு இடையில் அமர்ந்து செல்வதிலும் அவர்கள் தயங்கமாட்டாங்க.

இவங்களுக்குன்னு சீட் பிடித்துக் குடுக்கவும் சில ஜொள்ளர்கள் ஆவலுடன் இருப்பார்கள். அதுல பெரும்பாலும் நாற்பது, நாற்பத்தைந்து வயதைக் கடந்தவங்களாத்தான் இருப்பாங்க. அப்ப என்ன இப்பவும் அப்படித்தான்னு வச்சுக்குங்களேன். மிஸ்சிங்க கால் மேல கால் போட்டுக்கிட்டு ஸ்டைலா பார்பரா கார்ட்லாண்ட் புஸ்தகத்த பிரிச்சிக்கிட்டு அதுலயே லயிச்சிருவாங்க.. அதாவது ஏற்கனவே முட்டிக்கி மேல நிக்கற கவுன் இன்னும் கொஞ்சம் மேல ஏறி நிக்கறது தெரியாம. நம்ம ஜொள்ளர்களுக்கு அத பாத்து ரசிக்கறதுல ஒரு அல்ப சந்தோஷம்.

அந்த மிஸ் எந்த கம்பார்ட்மெண்டுல ஏறுனதும் பார்த்துட்டு அதுல ஓடிப்போய் ஏறிக்குவாரு நம்ம தோஸ்த். ஆனா அவர் சாதாரண ஜொள்ளர் மாதிரியில்ல.. அந்த மிஸ்சி மேல அப்படியொரு காதல்.. கண்டதும் காதல்னெல்லாம் இல்ல.. கொஞ்ச நாளாவே நோட் பண்ணிக்கிட்டே இருந்துட்டு தன்னையும் மறந்து விழுந்துட்டார்! காதல்லதாங்க.

நம்ம கேங்க் ஆசாமிகளுக்கு வண்டி ஸ்டேஷனுக்குள்ள நொழயறப்பவே ஏறி சீட் புடிக்கறது அத்துப்படி. ஒரு வருசமா ரெண்டு வருசமா? எத்தன வருச பழக்கம்? அரைமணி நேர பயணந்தானே நின்னா என்னன்னு கேக்காதீங்க. ஒக்காந்தாத்தானே சீட்டுக் க்ளப்ப ஸ்டார்ட் பண்ண முடியும்? ஒக்காந்தா போறாது.. கேங் முழுசுக்கும் ஒரே இடத்துல கிடைக்கணும். அதான் முக்கியம்… அப்படி ஒன்னு ரெண்டு மாறிப் போய்ட்டாலும் பரஸ்பரம் சீட் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்குவாங்க..

நம்ம தோஸ்த்தும் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் சீட்டு பைத்தியந்தான். அதாவது அந்த மிஸ்சி மேல கண்ணு போடற வரைக்கும்.
பசி வந்தா பத்தும் பறந்து போகுங்கறா மாதிரிதான் காதல் வந்தாலும்..

எனக்கும் சீட்டாட்டத்துக்கும் ரொம்ப தூரம். நம்ம ஹாபி கத படிக்கறதுதான். அப்பல்லாம் இந்த லெண்டிங் லைப்ரரி கான்செப்ட் அவ்வளவா பிரபலம் இல்லை. ஆனா கார்ப்பரேஷன் லைப்ரரியிலருந்து புத்தகம் கிடைக்கும். வண்டியில ஏறி ஒக்காந்து புத்தகத்த தொறந்தா அடுத்த சீட்லருக்கறவன் செத்து விழுந்தாக்கூட தெரியாது. வண்டி கடைசி ஸ்டேஷன்ல நின்னதும் நம்ம கேங் ஆசாமிங்க.. டேய் ஜோசப் செண்ட்ரல் வந்தாச்சுன்னு சொன்னா டேய் நீங்க போங்க இந்த பக்கத்த முடிச்சிட்டு வரேங்கற ரகம். அதுவும் ஜெயகாந்தன் கதைன்னா உசிரு..

அதனால நம்ம தோஸ்த் இந்த மிஸ் இருக்கற பெட்டிய பாத்து ஏறுறது கூட ரொம்ப நாளா எனக்கு தெரியாமயே இருந்திச்சி. அப்படியே கவனிச்சி நம்ம பசங்கக் கிட்ட கேட்டாலும் அவனவன் நக்கலா சிரிப்பானுங்களே தவிர சொல்லமாட்டான்க.

ஆக நம்ம தோஸ்த்தோட காதல் விஷயம் தெரியாமயே இருந்துது கொஞ்ச நாளா..

காலையில போறப்பத்தான் நம்ம கேங் மெம்பர்ஸ் ஒரே ரயில்ல போவோம். திரும்பி வர்றப்போ நா சீக்கிரமே திரும்பிருவேன். ஆஃபீஸ் அஞ்சரைக்கு முடிஞ்சிரும். ஆறு மணி வண்டிய புடிக்கறதுக்காக ஒரே ஓட்டம்தான் ஸ்டேஷனுக்கு.. அந்த வண்டியிலதான் ஈசியா சீட் கிடைக்குங்கறதும் ஒரு காரணம். ரயில்வே அலுவலர்கள தவிர வேறு யாரும் இருக்க மாட்டாங்க. நம்ம தோஸ்த்தோட ஜோடியும் இருக்கும். ஆனா நம்ம தோஸ்த்தோட கடை மூடறதுக்கே ராத்திரி ஒன்பது மணி ஆயிருமே.. நம்ம கேங்ல இருந்த நிறைய பேரும் நம்ம தோஸ்த் மாதிரிதான்.

ஆனா ஒரு நா ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்த நேரத்துல நம்ம தோஸ்த்தும் அந்த மிஸ்சியும் ஜாலியா அரட்டையடிச்சிக்கிட்டு நிக்கறத பார்த்தேன். ஆனா பெரிசா எடுத்துக்கலை.. ஏன்னா இந்த ஆ.இ. பெண்கள் சாதாரணமாவே ரொம்ப ஜாலி டைப்தான்.. எல்லார்கிட்டயும் சிரிச்சி பேசுவாங்க. அதுல சிலபேர் நா போய்கிட்டிருந்த சர்ச்சுக்குத்தான் வருவாங்கறதுனால நம்மள பாத்ததும் ஒரு ஃப்ரெண்ட்லி புன்னகைய வீசுவாங்க. நாமளும் பதிலுக்கு ஒன்னெ வீசிட்டு போய்க்கிட்டே இருந்தா பொழச்சோம்.. இல்லன்னா என்னாவும்?

நாளைக்கு சொல்றேன்..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 15 மறுமொழிகள் »

அந்தக் காலத்து காதல் 2

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 8, 2007

ரயில் நிலையத்துல ரயிலுக்காக காத்துக்கிட்டிருக்கற நேரத்துல கேங்கா நின்னு சைட் அடிக்கறதுதான் நம்மள மாதிரி ஆளுங்களோட வேலை.

இப்ப இருக்கற மாதிரி அஞ்சு, பத்து நிமிஷத்துக்கு ஒரு வண்டின்னுல்லாம் அந்த காலத்துல கிடையாது. அரைமணிக்கு ஒன்னுதான். ஒரு ரயில விட்டா இன்னும் அரைமணி நேரம் காத்துக்கிடக்கணுங்கறத மனசுல வச்சிக்கிட்டு பத்து மணி ஆஃபீசுக்கு போனா போறுங்கறவங்களும் காலை எட்டு மணிக்கெல்லாம் நிலையத்துக்கு வந்துருவாங்க.

எனக்கு 9.30 மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும்.. என் கேங் ஆளுங்கள்ல பலர் சதர்ன் ரயில்வே ஆளுங்க.. அவங்க போற நேரந்தான் ஆஃபீஸ் நேரம். மத்திய அரசு அலுவலகமாச்சே.. எமர்ஜென்சி காலம் தவிர்த்து மத்த நேரத்துல அவங்க வச்சதுதான சட்டம்!

ஆனாலும் நான் ஸ்டேஷனுக்கு போய் சேர்றதுக்கு முன்னாலேய நம்ம கேங் அங்க அசெம்பிள் ஆயிருக்கும். எதுக்கு.. எல்லாம் வந்திருக்கற கலர்கள ரசிக்கத்தான்.

இதுல என்ன விசேஷன்ம்னா பெரம்பூர் மற்றும் லோக்கோ ஒர்க்ஸ் ஸ்டேஷன் ஏரியாவுல ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்த்துவர்கள்தான் அதிகமா குடியிருந்தாங்க. சேலையிலிருக்கற ‘கவர்ச்சி’யை விட முட்டிக்கு மேல நிக்கற ‘கவுன்’ல கவர்ச்சி ஜாஸ்திதானே.

இங்க ஒரு சின்ன கிளுகிளுப்பான இடைசெருகல்.

நா மும்பை கிளைல மேனேஜரா இருந்தப்போ ஒரு கான்வென் ஸ்கூல் எங்க கஸ்டமர். ஒரு நாள் ஃபாதர பாக்கறதுக்காகப் போயிருந்தேன். அங்க ஒன்பதாம் வகுப்புல படிச்சிக்கிட்டிருக்கற மாணவர்கள்ல ரெண்டு பேர ஃபாதர் செமயா டோஸ் விட்டுக்கிட்டிருந்தத பார்த்தேன். இனி இப்படி ஏதாச்சும் அசிங்கமா செஞ்சீங்கன்னு கேள்விப்பட்டேன் ஸ்கூல விட்டே டிஸ்மிஸ் செஞ்சிருவேன்னு சொல்லி மிரட்டி அனுப்புனார்.

ஏதோ வில்லங்கம்னு தெரிஞ்சிது.. ஆனா ஃபாதராச்சே எப்படி கேக்கறதுன்னு பார்த்தேன். மெதுவா வெளியில வர்றப்போ வாசல்ல நின்னுக்கிட்டிருந்த ஸ்கூல் அட்டெண்டர கேட்டேன். அவர் சொன்னது இதுதான். ‘இந்த பசங்க ரெண்டு பேரும் க்ளாஸ் நடந்துக்கிட்டிருந்தப்போ அடிக்கடி பென்சில், பேனான்னு எதையாச்சும் போட்டுட்டு பெஞ்சுக்கு கீழ போறதும் வர்றதுமா இருந்துருக்காங்க மிஸ் ‘டேய் என்னடா பண்றீங்கன்னு கேட்டிருக்காங்க. கூட இருந்த பசங்கள்ல ஒருத்தன் போட்டுக் குடுத்துட்டான்.’ நிறுத்திவிட்டு சிரித்த அட்டெண்டர்கிட்ட ‘இதுல என்ன தப்பு இருக்கு?’ என்றேன் புரியாமல். அவர் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, ‘சார் மிஸ் முட்டிக்கி மேல கவுன் போடுவாங்க சார். இந்த பசங்க முதல் பெஞ்சில ஒக்காந்துருக்கற பசங்க.. புரியுதா?’ என்றார் கண்ணடித்தவாறு..

பிரியுதுங்களா?

ஏப்பா சங்கத்து பதிவில சென்சார் கின்சார் ஏதும் இல்லீங்களே?

அதுதான் நம்ம ஸ்டேஷன்லயும் நடக்கும். கூடியிருக்கற கேங் முழுசோட கண்ணும் இந்த கவுன் போட்ட மிசிங்க மேலதான் இருக்கும்.

நம்ம கேங்குல ஒருத்தன் நல்ல சிகப்பா ஹேண்ட்சம்மா இருப்பான். தமிழ்தான். பட்லர் இங்க்லீஷ்தான் பேசுவான். நமக்கு அப்பல்லாம் அதுகூட வராதுங்கறது வேற விஷயம்.

அவனுக்கு ஒரு பர்ட்டிக்குலர் மிசி மேல ஒரு கண். அதுவும் பாக்க அழகாத்தான் இருக்கும். சாதாரணமாவே ஆங்கிலோ இந்திய பெண்கள் நல்ல அழகுக்கு பெயர்போனவர்கள். இவர்களுள் பலர் பிற்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

எங்க கேங்குலயே கொஞ்சம் பார்வையா இருப்பார் நம்ம தோஸ்த். கொஞ்சம் வசதியானவர்தான். ஆனா படிப்புல வீக். ஸ்கூல் ட்ராப் அவுட். ஒரு துணிக்கடையிலதான் வேலை. வீட்டுக்கு சம்பளத்த குடுக்க தேவையில்லேங்கறதால வந்த கொஞ்ச சம்பளத்தையும் ட்ரெஸ்லயும், செண்ட்லயும் போடற ரகம்.

ரயில் வந்து நின்னதும் காத்திருந்த ஆளுங்கல்லாம் அடிச்சி புடிச்சி ஏறும். நாங்களுந்தான். ஆனா இவர் மட்டும் அப்படியே நிப்பார். எதுக்கு?

நாளைக்கு சொல்றேன்..

.... இங்கே பதியப்பட்டது டி.பி.ஆர்.ஜோசஃப் | 5 மறுமொழிகள் »