என் வாலிப அனுபவங்களுக்குக் கிடைத்த ஏகோபித்த அனுதாபங்களினால் உந்தப்பட்டு, அனுபவச்சிதறல்களையே தொடரலாமே என்ற முடிவுக்கு வந்தேன். (அடங்குடா மவனே என் பதிவுக்கு மட்டும்தான்).
சைட்டடிக்கத்தான் முடியவில்லையே தவிர, வட இந்தியாவில் வேறு எந்த வகையிலும் ஆண்டவன் எனக்குக் குறை வைக்கவில்லை. காமடிக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் என் கூடவே ஒரு சர்தார்ஜி நண்பனை அனுப்பி வைத்தார்.
சர்தார்ஜிகளை ஜோக்குகளில் மட்டுமே சந்தித்த வந்த எனக்கு அந்த ஜோக்குகள் முழுக்கற்பனை அல்ல என்று உணர வைத்தவன் இந்த நண்பன். இவனை ஏமாற்றுவது எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு.
சென்னையிலே பரங்கிமலையில் பிறந்து வளர்ந்தவன் இந்த சர்தார். ஏதோ காரணங்களால் சர்தார்ஜிகளோடு புழங்காமல் ஆங்கிலோ இந்தியர்கள் குடியிருப்புக்கு அருகில் வசித்ததால் சுமாராகத் தமிழும் அரைகுறை ஆங்கிலமும் வைத்து ஒப்பேற்றுவான். இவனுக்கு இந்தி வராது என்று எங்களுக்குத் தெரியாது (நாங்கள் நால்வர், சர்தாரைத் தவிர்த்த மூவரும் அக்மார்க் தமிழர்கள் – தூர்தர்ஷனில் கூட இந்தி பார்க்காதவர்கள்).
உத்தரப்பிரதேசத்தின் ஒரு அழுக்கடைந்த கோல் இந்தியா டவுன்ஷிப்பில் எங்களை இறக்கிவிட்டு பஸ் சென்றுவிட, தங்குமிடத்துக்கு ஆட்டோ வைக்க வேண்டும். இந்திப் புலவன் என்று நாங்கள் நினைத்திருந்த சர்தார் ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினான்.
“எக்ஸிகியூடிவ் ஹாஸ்டல் ஜானா ஹே!”
“வோ கஹான் ஹே?” என்றான் ஆட்டோக்காரன். நல்லவேளையாக வழி சொன்னவர் இன்னொரு அடையாளத்தையும் சொல்லியிருந்தார்.
“ஜி எம் ஆபீஸுக்கு பகல் மே” இந்த உக்குவை நாங்கள் கவனிக்கவில்லை!
“பச்சீஸ் ருப்யா?”
“மாப்ளே அம்பது ரூபா சொல்றாம்பா”
“நாப்பதுக்குக் கேளு” பேரம் பேசாம ஸ்டாம்பு கூட வாங்க மாட்டோமில்ல!
“சார்லீஸ் டீக் ஹே?”
அதிர்ந்து போன ஆட்டோக்காரன் “டீக் ஹே” என்று நாற்பதுக்குக் கொண்டு விட்டான்.
என் இந்தி அறிவு கொஞ்சம் செழுமையான பிறகுதான் தெரிந்தது ஆட்டோக்காரன் அதிர்ந்ததன் ரகசியம். அவன் முதலில் கேட்டது 25 ரூபாய்!
ஏமாறும்போது அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து நாங்களே மறந்த பின்னர் ஏமாந்ததை பறைசாற்றிக்கொள்ளுவது இவன் ஸ்டைல்!
ஒரு முறை ட்ரெயினில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு அத்துவானத்தில் சிக்னல் கிடைக்காமல் நள்ளிரவில் மூன்று மணிநேரம் நின்றது. ஆட்டத்திலேயே தூங்கிப் பழகிய நான் ஆட்டம் நின்றதால் எழுந்துவிட்டேன். சர்தார் கனவு கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு நண்பனும் எழுந்து, இயற்கைச் சூழ்நிலையில் இயற்கை உபாதை கழிக்க இறங்கினான்,
ஏறும்போது சர்தார் அரைத்தூக்கத்தில் “ஏண்டா வண்டி நிக்குது?” நண்பன் குசும்பு பிடித்தவன். “அதுவா, வழியிலே ரொம்ப முள்ளாம், ரெண்டு மூணு டயர் பஞ்சராம்” இந்த ஜோக் முடிந்துவிட்டது என நினைத்து தூங்கிவிட்டோம்.
மறுநாள் அலுவலகத்தில் பாஸ் ஏன் லேட் என்று கேட்டதற்கு சர்தார்ஜி “வர வழியிலே மூணு டயர் பஞ்சர், அதனாலதான் லேட்” என்று சீரியஸாகச் சொன்னதை இன்றும் அந்த அலுவலகம் மறக்கவில்லை, மறக்கத் தான் முடியுமா?
அரைகுறைத் தமிழில் இவன் அடித்த அட்டகாசங்களை இந்த வருட அட்லாஸ் வாலிபனானாலும் கூட முடிக்க முடியாது.
ஒரு நாள் சீரியஸாகத் தமிழ் பாட்டு ஒன்றைக் கொலை செய்து கொண்டிருந்தான்.
“உல்லுக்குல்ல ஸக்கரவத்தி ஆனா உன்மையிள மெலுகுவத்தி”
“என்ன சர்தார், தமிழ் பாட்டெல்லாம் பாடுற!”
“நல்ல மீனிங்டா இந்த பாட்டு”
“அப்படியா? என்ன மீனிங் சொல்லு பாக்கலாம்!”
“he tells, he is inside sweet matches, but really he is candle matches!”
“ஏறத்தாழ புடிச்சிட்டயே.. அது என்ன Sweet matches?”
“சக்கர ன்னா Sugar தானே? அதான் Sweetனு கண்டுபிடிச்சேன்”
“அடேங்கப்பா! அப்புறம் matches?”
“அதான் வத்தின்னு வருதே.. மாட்ச் பாக்ஸத்தானே வத்திப் பொட்டின்னு சொல்றீங்க?”
அருகிலிருந்த சுவரில் தலையை முட்டிக்கொள்ளப் போனேன்..
“உண்ச்சி வியாசர்பாடி”
“இது என்னடா”
“டென்ஷன் ஆவாதேன்னு தமிழ்லே சொன்னேன்”
‘உணர்ச்சிவசப்படாதே” என்று சொல்ல வந்தானாம்!
வேலையைப் பொறுத்தவரை அவன் புத்திசாலிதான். இருந்தாலும் ஓரிரு முறை அவனையும் மீறி அவனுக்குள் இருக்கும் சர்தார் வெளிப்பட்டுவிடுவான்.
மெஷினில் இருக்கும் ரேடியேட்டர் கேப்புகள் Brassஇனால் ஆனவை என்பதால் அடிக்கடி திருட்டுப்போகும். கேப் போவதால் வேறு சில பிரச்சினைகள் வந்து, அடிக்கடி மெஷின்கள் பழுதாவதால் இந்தத் திருட்டுகள் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. ஒரு நாள் நம் தலைவர் வேலையிலிருந்து திரும்பி வந்து “யூரேகா” என்றான் உற்சாகமாக!
“என்னடா ஆச்சு?”
“இந்த ரேடியேட்டர் கேப் பிரச்சினைக்கு ஒரு பெர்மனண்ட் சொல்யூஷன் கண்டு பிடிச்சிட்டேன். எல்லாக் கேப்பையும் எடுத்து ஸ்டோர்க்குள்ளே வச்சிட்டேன்”
“கேப் இல்லாட்டி தண்ணி சிந்திடுமேடா”
“நான் என்ன கேனையனா? எல்ல வண்டிக்கும் கேப் இருந்த இடத்திலே ஒரு பிளேட் வச்சு வெல்ட் செஞ்சுட்டேன்!”
எல்லா வெல்டிங்கையும் நீக்க ஒரு வாரமானது!
ஒரு நாள் மிகக் கோபமாக இருந்தான்.
“என்னடா? கோபமா இருக்கே?”
“என்னை அந்த ஸ்ரீவாத்ஸவ் முட்டாளுன்னு நெனைக்கிறாண்டா!”
“பரவாயில்லையே, ஸ்ரீவாத்ஸவ் புத்திசாலின்னு புரூவ் பண்ணிட்டானே? என்ன ஆச்சு?”
“நம்ம கேடர்பில்லர் ரெகமண்டேஷன் படி மெஷின் டயர்லே வெறும் காத்து அடிக்கக்கூடாது, நைட்ரஜன் தான் அடிக்கணுமுன்னு அவன்கிட்டே சொன்னேன்.”
“சரிதான். அது ரெகமண்டேஷன் இல்லடா, வெறும் சஜஷன் தான்”
“இருந்துட்டுப் போகட்டுமே, உண்மையச் சொல்லலாமில்ல, வெறும் காத்துதான் அடிக்கறோமின்னு – அவன் என் கிட்டே பொய் சொல்றாண்டா.. இந்த சைட்லே நாங்க எப்பவும் 78% பியூர் நைட்ரஜன் தான் அடிக்கறோம்னு சொல்றான். நானும் இந்த வொர்க் ஷாப் புல்லாத் தேடிப் பாத்துட்டேன், எங்கேயுமே 78% நைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷனே கிடையாது. வெறும் ஏர் கம்பிரஸர்தான் இருக்கு”
எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிக் கொண்டு, “சும்மா விடாதே அந்த ஸ்ரீவாத்ஸவ்வை! பொய்யா சொல்றான்” என்று ஏற்றிவிட்டேன்.
கொஞ்ச நாள் கழித்து அவனுக்கும் உண்மை தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு ஒரு வாரம் ஸ்ரீவாத்ஸவ்வும் நானும் அவன் கண்ணில் படாமல், வி ஆர் த எஸ்கேப்!