Alone… in a Woman’s Worldடோடத் தொடர்ச்சி…
வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி “அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு”ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க…
“இந்தப் பக்கம் என்னடா பார்வை? உன் வேலையைப் பாருடா”ன்னு ஒரு கத்து கத்திருந்தாங்கன்னாக் கூட ஒன்னும் இருந்திருக்காது.
ஆனா நான் திரும்பிப் பாத்ததை கவனிச்ச அந்த ஆண்ட்டிகள்ல ஒருத்தங்க ரொம்பப் பொறுமையாச் சிரிச்சிக்கிட்டே “நாங்க பேசறதெல்லாம் கேட்டா உங்களுக்கு ரொம்ப வித்தியாசமாவும் தமாஷாவும் இருக்குமில்ல?”ன்னு கேட்டாங்க. நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி உங்களுக்குத் தோணலாம், ஆனா ரொம்ப ஃபிரெண்ட்லியாத் தான் கேட்டாங்க. ஒரு வேளை அவங்க பிரைவேட் பேச்சைக் கலைக்கற மாதிரி திரும்பிப் பாத்திருக்கக் கூடாதோன்னு தோணுச்சு. கொஞ்சம் சங்கடமாவும் போச்சு. அதுக்கு நான்”அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க”ன்னு சொல்லி வச்சேன். ஒரு அஞ்சு நிமிஷம் அமைதிக்கப்புறம், “பாலை கேஸ்ல வச்சிருந்தது, அதை நிறுத்த நேரம் ஆனது, அதனால ஜீப்பை வெயிட்டிங்ல வெச்சிருந்தது, பசங்க ஸ்கூல் ஆனுவல் டே, வீட்டுக்காரரோட வாக்கிங் போறது” இதப் பத்தியெல்லாம் பேச்சு ஸ்டார்ட் ஆனதும் தான் என் குற்ற உணர்வுக்கு விடுதலை கிடைச்சது. இதையெல்லாம் படிச்சிட்டு லேடீஸ் பேசறதை நான் ஒட்டுக் கேக்கறேன் அது இதுன்னு யாராச்சும் பின்னூட்டம் போட்டீங்க…முப்பது பின்னூட்டம் நாப்பது பின்னூட்டம்னு கூட பாக்க மாட்டேன்…மிகக் கொடூரமான முறையில் மட்டுறுத்திப்புடுவேன்னு இப்பவே சொல்லிக்கிறேன். ஜாக்கிரதை. ஏன்னா நான் எழுதறது எல்லாம் ஒரு வழிப்போக்கனா தற்செயலா என் காதுல வாங்குனது தான். என்னாது அது…ஆங்…லோன்லி டிராவலரு…அதுவா இருக்கும் போது.
ஃபாஸ்ட் ஃபார்வர்டு பண்ணி எதிர்காலத்துல கொசுவர்த்திய சுத்துனப்ப போன பதிவுல சொன்ன எழுதாத சட்டத்தை(cardinal rule) நான் உடைச்சது நெனவுக்கு வந்தது. ஆனா கடந்த காலத்துல வான்கோழி பிரியாணி தின்ன நான் போய்க்கிட்டிருக்கற ஷேர் ஆட்டோ பயணத்துல அடக்க ஒடுக்கமா நல்ல பையனாத் தான் இருந்தேன். என்ன தான் எதேச்சையா அந்த ஆண்ட்டியும் அக்காவும் பேசறது நம்ம காதுல வந்து விழுந்தாலும் ஒரு வேளை நாமப் பண்ணறதுக்குப் பேரு தான் ‘e(a)vesdropping’ஓ அப்படின்னு ஒரு சந்தேகம் வந்துடும். “சே! சே! நாம யாரு. ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்? நாமளாவது? லேடீஸ் பேசறதைப் போய் ஒட்டுக்கேக்கறதாவது”ன்னு நியாபகப் படுத்திக்க அப்பப்போ கடல் அரிப்பைத் தடுக்க அரசாங்கத்துக்கு என்ன யோசனை குடுக்கலாம்னு ஒரு முன்னாள் சிவில் இஞ்சினியரா சிந்திக்க ஆரம்பிச்சிடுவேன், அந்த யோசனையெல்லாம் சேகரிச்சு முடிச்சதும் ரோட்டோரத்துல காயப் போட்டிருக்கற கருவாடு ஏன் இவ்வளோ நாத்தம் அடிக்குதுன்னு செந்தில் மாதிரி யோசிக்க ஆரம்பிப்பேன்.
ஆனா செந்திலா இருந்தாலும் சிவில் இஞ்சினியரா இருந்தாலும் Woman’s Worldஇல் ஒரு தனி பயணியா இருக்கற த்ரில் கிடைக்காதுப்பா. “பாப்பா! கப்பல் பாரு…கப்பல் பாரு” தூங்கிக்கிட்டிருக்க பாப்பாவை எழுப்பி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துல நின்னுட்டிருந்த கப்பலைக் காட்டறதுக்கு பாப்பாவோட கிராண்ட்மா(சும்மா ஆயான்னு சொல்லாம ஒரு சேஞ்சுக்கு கிராண்ட்மா) முயற்சி பண்ணாங்க. பாப்பாவுக்கு நல்ல தூக்கம் போல. லைட்டா கண்ணை முழிச்சிப் பாத்துட்டு, மறுபடியும் படக்குன்னு கண்ணை மூடி சடக்குன்னு என்மேல சாய்ஞ்சு தூங்க ஆரம்பிச்சிடுச்சு.
மறுபடியும் அவங்களோட கொஸ்டின் ஆன்ஸர் ஆரம்பம் ஆச்சு. அந்த 50+ ஆண்ட்டி கேள்வி கேக்கறதும், 30+ அக்கா பதில் சொல்றதுமான்னு இப்படியே போச்சு அவுங்க பேச்சு. இடையிடையில அவங்க கத்துக்கிட்ட விஷய ஞானத்தை எல்லாம் அந்த அக்காவுக்குப் போதிக்கறதுமே அவங்கக் குறிக்கோளா இருந்துச்சு. அவங்க எதோ பேசிக்கிட்டே இருக்கறதும், நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாக்கறதும், உள்ள அவங்க பேசறதைக் கேக்கறதுமா போய்க்கிட்டிருந்தது.
ஒரு வாட்டி நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாத்துட்டு திரும்பவும் உள்ள வரும் போது “நேத்து ராத்திரி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளிச்சு பருப்பு கடைசல் வச்சேன்மா. ரொம்ப நல்லாருந்தது. காலையில அதையே பழையதுக்கு போட்டுக்கிட்டு சாப்புட்டாரு” அப்படின்னாங்க ஆண்ட்டி.
“யாரு? உங்க வூட்டுக்காரரா?”ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்… கேக்கவா முடியும்? நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?
“நேத்து பூண்டு வெங்காயம் போட்டு ஒரு குழம்பு வச்சேன். பாப்பாவுக்கு மட்டும் தனியா பருப்பு வேக வச்சி சாதத்துல போட்டுப் பெசஞ்சு பன்னெண்டு மணிக்கெல்லாம் ஊட்டிட்டேன்”னு வாயால வலைக்குறிப்பு எழுத ஆரம்பிச்சிட்டாங்க அக்கா. அதுக்கப்புறமும் என்னென்னமோ பேசினாங்க…
துறைமுகத்துக்குள்ள நுழையறதுக்குத் தயாரா நின்னுட்டிருந்த பெரிய டிரெயிலர் லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஆகி ஆட்டோ ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ஊர்ந்து ஊர்ந்து நகர வேண்டியதாப் போச்சு. அந்த அஞ்சு நிமிசம் மட்டும் ஆட்டோவில் அமைதி நிலவியது.
நெரிசல் குறைஞ்சு ஷேர் ஆட்டோ வேகம் கூட்ட ஆரம்பிச்சதும் “ஏம்மா! கட்டை செவுத்துல பாப்பா ஜட்டியைக் காயப் போட்டிருந்தியே? எடுத்து உள்ள வச்சிட்டியா?”ன்னு ஆண்ட்டி அக்காவைக் கேட்க, “அதையெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எடுத்து மடிச்சி வச்சிட்டேன்”னு பதில் வந்துச்சு.
குபீர்னு பீறிக்கிட்டு வந்த சிரிப்பை அடக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஆனா சிரிப்பை வரவழைத்த அந்த விஷயத்தை மீறி ஒரு விஷயம் யோசிக்க வைத்தது. என்ன தான் பசங்க உக்காந்துருக்காங்களேன்னு ஆட்டோவில ஏற யோசிச்சிருந்தாலும், அந்த பசங்க கவனிப்பாங்க அப்படிங்கறதை மீறி அவங்க பேசன விஷயங்கள்ல ஆதார ஸ்ருதியா இருந்தது ஒன்னு தான்…அது தன்னை சார்ந்தவர்கள் மீது அவர்கள் காட்டும் ‘அன்பு’. ஒரு சில்பான்ஸ் விஷயத்துக்கு இந்தளவுக்கு நான் பிலிம் காட்டறதாக் கூடத் தோணலாம். ஆனா எனக்கென்னமோ அவங்க ரெண்டு பேரையும் பாத்து ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதிகமாப் படிச்சிருக்கக் கூட மாட்டாங்க…ஆனா அந்த அரை மணி நேர நெருக்கத்துல எத்தனை விதமான விஷயங்களைப் பத்திப் பேசியிருப்பாங்க… அதுக்கெல்லாம் எவ்வளவு வேகமா யோசிச்சிருப்பாங்கன்னும் நெனச்சி பாக்கறேன். Everything for somebody else’s sake. பிரமிப்பாத் தான் இருக்கு.
அந்நேரம் பசங்க ஞாயித்துக் கெழமை ஒழுங்கா வேலை செய்யிறாங்களா இல்லை ஓபி அடிக்கிறாங்களான்னு தெரிஞ்சிக்கறதுக்காக எங்க பாஸ் என்னோட மொபைல்ல போன் பண்ணாரு. எல்லாம் நல்லபடியா ராயபுரம் கல்மண்டபத்தை நோக்கி பிரியாணிக்காகப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியப் படுத்திட்டு ராயபுரம் கல்மண்டபத்துல எறங்க ஆயத்தமாகிட்டு இருக்கும் போது “சோத்துக் கத்தாழையும் சீமை பொன்னாங்கண்ணியையும் ராத்திரி சட்டியில ஊறப்போட்டு வச்சிடு” அப்படின்னு எதோ பேசிட்டிருந்தாங்க. அடடா! எதோ அழகு குறிப்பு போலிருக்கே…இவுங்க சொல்லற சமாச்சாரத்தைத் தான் Aloe Veraன்னு சொல்லி லேக்மியும் கவின்கேரும் குப்பியில அடைச்சி விக்கிறானுங்கன்னு நெனச்சிக்கிட்டேன்.
நான் மட்டும் இருந்திருந்தா ஒரு வேளை ஆட்டோவுலேயே பீச் ஸ்டேஷன் போயிருப்பேனோ என்னவோ? ஆனா கூட வந்தவன் என்னைக் கொன்னு களையும்ங்கிறதுனாலயும் நான் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்னு நிலைநாட்ட வேண்டி இருந்ததுனாலயும் மயிலின் ஆட்டத்தை அறியா வான்கோழியின் சுவையைத் தெரிஞ்சிக்கிறதுக்காகவும் ஆட்டோவை விட்டு இறங்குனேன். எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman’s Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது.








