அத்தை பெண்கள் என்னும் அழகிகள்
‘அத்தை பெண்கள் என்னும் அழகிகள்’ என்னும் தொடர் கவிதைகளை என் பதிவுகளில் படித்திருப்பீர்கள்.இங்கே இப்போது சங்கத்துக்காக காதல் மாதத்தின் சிறப்பு கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
இந்த கவிதைகளை என் பதிவுகளில் எழுதிய போது வந்த பின்னூட்டங்களில் பலர் ‘அவர்களின் அத்தை பெண்களின் பற்றிய நினைவுகளை ‘கிளறி விட்டதற்க்காக திட்டியும்(இதெல்லாம் ஓவரு பில்டப்பு),பலர் அத்தை பெண்கள் இல்லையென்றும் வருத்தபட்டீர்கள்(ஐயோ பாவம்).ஒருவர்(அத்தை பெண்ணால் ஏமாற்ற பட்டவர்) ஒரு படி மேலாக போய் என்னை தொலைபேசியில் அழைத்து
உன்னை என்ன செய்யுறேன் பாரு என்றார்(பெரிய சுஜாதான்னு நினைப்பு!!).
சரி அதை விடுங்க உண்மையிலேயே அத்தை பெண்கள் இல்லாதவங்க ஒரு நல்ல நண்பியை மிஸ் பண்ணுவதற்கு சமம்.அவர்கள் நம் காதலியின் முன்னோடிகள். நம்முடைய முதல் காதலிகள்.அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.அத்தை பெண்ணுடன் சிறிய வயதிலிருந்தே பழகும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது.ஒரு வயதிற்கு மேல் அவர்களுடன் நம்மை பேச விட மாட்டார்கள்,இல்லையென்றால் நம் வெட்கம்,தன்மானம் அதை தடுத்து விடும்.
எனக்கு மூன்று அத்தை பெண்கள்..அந்த மூவருடன் பழகிய அனுபவங்களில் விழைந்தது தான் இந்த கவிதைகள்.அவர்கள் மூவருடனும் சிறு வயதில் பழகியதோடு சரி ,பின்னர் அவர்கள் எல்லாரையும் வயதுக்கு வந்து பிறகு தான் சந்தித்தேன்..’இங்கே வயதுக்கு வந்த பிறகு’ என்ற வார்த்தையை உபயோகித்தற்க்கு காரணம் ,அவர்(ள்)கள் பெரியவளாகிய பின்னர் தான் அவ(ள்)ர்களுடனான அந்த இடைவெளி அதிகமாகிறது.அது கடவுளின் டிசைன் போல.
சிறு வயது நியாபங்களை, அவர்களுடன் சேர்ந்து நாம் செய்த அட்டாகாசங்களை அவர்களுடனே பகிர்ந்து கொள்ளுதல் ஒரு வித சுகம்..அதை நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது சுகமோ சுகம்(ஹி ஹி வயிறு எரியுதா???)..அதை தான் நான் இங்கே செய்கிறேன்..
நிற்க ..
இனி கவிதைகளை படிக்க ஆரம்பியுங்கள்.
1.கடன் அன்பை முறிக்குமாம்
எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
நான் கொடுத்த முத்தத்தை
2.நெடு நாளுக்கு பின்னர் என்னை
பார்த்த போது உன்னகேற் பட்ட வெட்கம்
இளம் வயதில் உன் அம்மா
என்னையும் உன்னையும்
ஆடைகளின்றி ஒன்றாய் குளிப்பாட்டிய போது
நீ வெட்கப் பட்டதை நினைவூட்டியதை
நான் எப்படி சொல்வேன் உன்னிடம்..!!
3.
எல்லாருடம் சேர்ந்து ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நானும் நீயும் மட்டும் எப்போதும்
ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
அந்த நெற்குதிரின் மறைவில்
இன்று என் அக்கா குழந்தைகள் ஒளிந்து
விளையாடும் போது நின்று ரசிக்காமல்
போக முடிய வில்லை என்னால்
4.நீ வயதுக்கு வந்த போது
உன்னை எல்லாரும் மாய்ந்து மாய்ந்து
கவனித்ததை கண்டு எரிச்சலுற்ற என்னிடம்
‘எல்லாம் உனக்காக’ தாண்டா என
உன் அம்மா சொல்லியதற்க்கு
அர்த்தம் புரிந்திருக்க வில்லை
எனக்கு அப்போது….
5.சிறு வயதில் நீ என் வீட்டிற்க்கு
விடுமுறைகளில் வந்து தங்கி விட்டு
கிளம்பும் போது வருத்தம் கொண்டு
உன்னை வழியனுப்ப வராமல்
அறைக்குள்ளே நான் முடங்கி கிடந்ததை
சொல்லி பளிப்பு காட்டுகிறாய்
பேருந்தில் ஊருக்கு போகும் வழியெல்லாம்
என்னை நினைத்து நீ தேம்பியழுது தூங்கி
போவது தெரிந்திருந்தும் பேசாமலிருக்கிறேன் நான்.