வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘கப்பி பய’ பகுப்புக்கான தொகுப்பு

கிரிக்’கெட்டுப் போச்சு’

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 26, 2007

நொந்து நூலாகி அந்து அவலாகிப் போயிருக்கும் இந்திய அணியினர் மக்களிடமிருந்தும் மீடியாவிடமிருந்தும் எப்படியோ எஸ்கேப்பாகி சென்னை வருகின்றனர். அங்கு ஏற்கனவே அவுட் ஆப் ஃபார்மில் இருக்கும் விஐபிக்கள் சிலரை சந்தித்து ஆலோசனை பெற ரகசிய மீட்டிங் ஏற்பாடு செய்கின்றனர். அல்டிமேட் ஸ்டார் அஜித், இயக்குநர் இடிதாங்கி பேரரசு, புரட்சிப்புயல் வைகோ என நம்மூர் ஆட்கள் கிரிக்கெட் அணியினரை தேற்ற வந்திருக்கின்றனர். ‘அசத்தப் போவது யாரு’, ‘அரட்டை அரங்கம்’ ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு டி.ஆரும் யாரும் கூப்பிடாமலே வந்திருக்கிறார்.

ஏதோ ஒரு சங்க மீட்டிங் என்று மண்டபத்துள் எட்டிப்பார்க்கும் சின்னக் கலைவாணர் விவேக்கை அலேக்காக பிடித்து உள்ளே இழுத்துவருகிறார்கள் நம் வீரர்கள்.

விவேக்: டேய் இங்க என்னடா நடக்குது? யாருடா நீங்கல்லாம்? உங்களையெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேடா?

டிராவிட்: விவேக் சார், நாங்க கிரிக்கெட்ல தோத்ததை எப்படி சமாளிக்கறதுன்னு ஏற்கனவே அவுட் ஆப் பார்ம்ல இருக்கவங்க கிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு வந்திருக்கோம். நீங்களும் உங்க அறிவுரையை சொல்லி எங்களைக் காப்பாத்தனும்

விவேக்(ஹை பிட்சில்): அடப்பாவிகளாஆஆ…அவுட் ஆப் ஃபார்முன்னு டிக்ளேரே பண்ணிட்டீங்களாடா…இனி நான் என்ன சொன்னாலும் கேட்கப்போறதில்ல…சரி உங்க மீட்டிங்கை நீங்க நடத்துங்க.நான் ஒரு கட்டிங் விட்டுட்டு கார்னர்ல உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கறேன்

அவர் முடிப்பதற்குள் டி.ஆர் துள்ளிக் குதித்து எழுகிறார்.

விவேக்: ஏன் சார் இந்த ஆரஞ்சு கலர் சட்டை எல்லாம் எங்கே புடிக்கறீங்க? ரொம்ப டைட்டாயிருக்கே..சிம்புவோடதா??

அதை கண்டுகொள்ளாத டி.ஆர் கோபமாக :
“கவர்ன்மெண்ட் ஸ்கூல் பேர் பால்வாடி
பைத்தியம் முத்தினா நம்மூர் ஏர்வாடி
சம்பாத்திச்சீங்களேடா பல கோடி
ஏமாத்திட்டீங்களே மோசமா விளையாடி”

என கண்களில் கண்ணீர் வழிய ஹைபிட்சில அலறுகிறார்.

வழக்கம் போல யாருமே அவரை கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

டிராவிட்: இதெல்லாம் விளையாட்டுல சகஜம். ஆனா மக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. நீங்கதான் எங்க இமேஜை வளர்க்க ஏதாவது ஐடியா கொடுக்கனும் என மற்றவர்களைக் கேட்கிறார்.

அஜித்: நான் பேஸ்மாட்டேன். ஜெயிச்சுட்டு தான் பேஸ்வேன். என்னை யாரும் அழிக்க முடியாது. நான் தண்ணி ஊத்தி வளர்த்த ஸ்டேடியம் புல் இல்ல..தானா வளர்ந்த காட்டுப் புல்.

விவேக்: பேஸ் மாட்டேன் பேஸ் மாட்டேன்னு பேஸ் வாய்ஸ்ல பேசி டார்ச்சர்ஸ் பண்றாரே

சாப்பல்: அஜித், இப்ப நான் கூட உங்க ஐடியாதான் ஃபாலோ பண்றேன். மீடியாகிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டேன்

அஜித்: அதுஉஉ

என டெசிபலை ஏற்றி அலறுகிறார்.

அப்போது அங்கே யாரோ விசும்பும் சத்தம் கேட்கிறது. வைகோ கருப்புத்துண்டை முகத்தில் பொத்தியபடி அழுதுகொண்டிருக்கிறார்.

விவேக்: பொடால போட்டாங்க அழுதீங்க. கூட்டணியைவிட்டு வெளிய வந்ததுக்கு அழுதீங்க. கட்சியை உடைச்சதுக்கு அழுதீங்க. நடைபயணத்துல கால் வலிச்சுது அழுதீங்க. இப்ப கிரிக்கெட்ல தோத்ததுக்கும் அழனுமா? வைகோ சார், கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.

வைகோ: ஐயகோ என் உடன்பிறப்பே, உலகக்கோப்பையை நீ வென்றிருந்தால் கலிங்கப்பட்டியில் பிறந்த நான் உங்கள் பேரில் கலிங்கத்துப்பரணி பாடியிருப்பேனே… இப்படி தோற்றுவிட்டீர்களே

இதைக் கண்டு செண்டிமெண்டில் ஃபீலாகும் வீரர்கள் வைகோவை தேற்றுகின்றனர்.

வைகோ: 1970களிலே இங்கிலாந்து கிரவுண்டுகளிலே சிக்ஸர் சிக்ஸராக அடித்தானே என் உடன்பிறப்பு விவ் ரிச்சர்ட்ஸ், அவன் மண்ணிலே போய் நாம் தோற்றதுதான் அவமானமாக இருக்கிறது

என்று கோபமமக ரியாக்ஷனை அப்படியே மாற்றுகிறார்.

விவேக்: அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு ரியாக்ஷன் காட்டறாரே. இவரை இப்படியே பேசவிட்டா நாம தனியா பொதுக்குழு நடத்தனும் போலிருக்கு. அஜித் நீங்க என்ன ஒரே பஞ்ச் டயலாக்ல நிறுத்திட்டீங்க. வேற ஏதாவது ஐடியா குடுங்க

அஜித்: டிராவிட்ஜி, யாராவது ஓட்டலுக்கு டிஸ்கஷன் கூப்பிட்டா போகாதீங்க. கூப்பிட்டு வச்சு குமுறி அப்புறம் டீம்ல இருந்தே தூக்கிடுவாங்க. ‘நான் கடவுளுக்கு’ உடம்பை குறைச்சு என் பாடி வெயிட்டை விட தலைமுடி வெயிட் அதிகமா ஏத்திவச்சிருந்தே. கடைசில படத்துல இருந்தே தூக்கிட்டாங்க. இனிமே நீங்க் பிரஸ்மீட் போனா ‘நான் கேப்டன்’ன்னு அடிக்கடி சொல்லுங்க. அப்ப தான் டீம்ல நிலைக்க முடியும். நீங்க இருக்கறது பஞ்சுமெத்தை. நான் சுமக்கறது முள்கிரீடம்.

டிராவிட் ‘நான் கேப்டன்ன்ன்’ என சொல்லிப்பார்க்கிறார்

டி.ஆர்: கிரிக்கெட் டீமுக்கு நீ கேப்டன்
பனிக்காலத்துல காதுக்கு வச்சுக்க காட்டன்
சினிமால எல்லாருக்கும் நான் பாட்டன்
சிம்புவுக்கு மட்டும்தான் சொல்வேன் வெல்டன்

விவேக்: இவர் வேற சம்பந்தா சம்பந்தமில்லாம பேசி கழுத்தறுக்கறாரே. இங்க வில்லங்கம் புடிச்ச ஒரு கேரக்டர் ரொம்ப நேரமா அமைதியா இருக்கே…ஆளைப் பார்த்தா அத்தனை பேரையும் க்ளீன் போல்டாக்க ஏதோ ப்ளானோட இருக்க மாதிரி இருக்கு. பேரரசு சார்.. ஏதாவது பேசுங்க

பேரரசு: என்னான்னு சொல்வேனுங்கோ, சீமானெல்லாம் சேகுவேரா டி-ஷர்ட்டை கழட்டிட்டு காக்கிச்சட்டை மாட்டி இன்ஸ்பெக்டரா நடிக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் காக்கிச்சட்டை மாட்டி ஆட்டோ டிரைவரா நடிச்சா ஒத்துக்க மாட்டேங்கறாங்க.

டிராவிட்: உங்க பிரச்சனையை விடுங்க பேரரசு. நீங்க தான் தமிழ்நாட்டுக்கே தலைவலின்னு கேள்விப்பட்டோம். எங்க பிரச்சனைக்கு உங்க கிட்ட ஏதாவது தீர்வு இருக்கா?

பேரரசு: இருக்கு சார். மொதல்ல உங்க பேரெல்லாம் மாத்துங்க. என்ன பேர் இதெல்லாம்? ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர்னு? நல்லாவா இருக்கு?? நான் சொல்ற மாதிரி பேரை மாத்துங்க..டிங்கர் டிராவிட், சலம்பல் சச்சின், கவுதாரி கங்குலி, யுனானி யுவராஜ், தோட்டா தோனின்னெல்லாம் பேரை மாத்துங்க

விவேக்: அப்படியே சனியன் சாப்பல்னு மாத்தி கெஜட்ல உட்டுடலாமா??

பேரரசு(தான் கவனிக்கப்படுவதைக் கண்டு சந்தோஷமாக): அப்படியே இனி விளையாடப்போனா கிரீமெல்லாம் தடவிட்டு போகாதீங்க. வடபழனி முருகன் கோயில் வாசல்ல சந்தனம் வாங்கிட்டு போய் மொகத்துல தடவிட்டு ஆடுங்க. இதனால அட்வாண்டேஜ் என்னன்னா மேட்ச் பார்க்கற ஜனங்களுக்கு யார் அவுட் ஆகறீங்கன்னே தெரியாது. எஸ்கேப் ஆகிடலாம்

விவேக்: அப்படியே ஒரு பஞ்சாமிர்த பாட்டில் வாங்கிக்கொடுத்துட்டா பெவிலியன்ல உட்கார்ந்து நக்கிட்டிருக்கலாமே

டி.ஆர்: தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணி நலங்கு வைக்க கரைச்சு வச்சேன் சந்தனம்…. இந்த பயலுக தோத்ததால நொந்துபோச்சே என் மனம்.. என ராகம் கட்டி பாட ஆரம்பிக்கிறார்.

இனி இந்த ஏரியாவில் இருந்தால் யாராவது கடித்துவிடுவார்களென அஜித்தை இழுத்துக்கொண்டு எஸ்ஸாகிறார் விவேக்.

அப்போது “என்ன சார் நடக்குது இங்க? ஒரு தமிழன் இருக்கற இந்திய அணி உலகக்கோப்பைல தோக்குது. இப்படியாப்பட்ட கிரிக்கெட் நமக்கு வேணுமா? தமிழனோட மானம் எங்க போச்சு? டிராவிட் உங்க பசங்கள கடலூர்க்கு லாரில கொண்டாந்துருங்க. ‘பள்ளிக்கூடம்’ படத்துல கிட்டிப்புல் விளையாடற டீம் நீங்க. இந்த படத்தை வச்சு உங்க இமேஜை நான் தூக்கி நிறுத்தறேன். என்ன சார் நடக்குது இங்க?” என பத்து இருபது பேருடன் தங்கர்பச்சான் அலட்டலாக உள்ளே நுழைகிறார்.

பேரரசுவும் டீ. ஆரும் என்ன டயலாக் பேசலாமென கொலைவெறியோடு யோசிக்க, “பெரிய கலவரமே நடக்கப்போகுது ஓடிடுங்கடா அப்ரண்டீஸ்களா” என தன் டீமை இழுத்துக்கொண்டு தப்பியோடுகிறார் டிராவிட்

.... இங்கே பதியப்பட்டது கப்பி பய | 28 மறுமொழிகள் »

மாடு மேய்ப்பது எப்படி?

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 18, 2007

டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.

நம்ம தம்பி வறட்டி தட்டுவது எப்படின்னு விலாவாரியா ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிருக்காரு. வறட்டி தட்ட சாணி வேணும். சாணி போட மாடு வேணும். மாடு சாணி போடனும்னா நாம அதுக்கு தீனி போடனும். அதனால இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு பார்ப்போம்.

மாடு மேய்க்கற விதம் நாம இருக்க இடத்தைப் பொறுத்து மாறும். மெட்ராஸ் மாதிரி பட்டனத்துல இருந்தா மாடு மேய்க்கறதை மறந்துடலாம். அந்த நேரத்துல ஜொள்ளுப்பாண்டி அண்ணன்கிட்ட டிப்ஸ் கேட்டு வாழ்க்கைல உருப்படற வழியைப் பார்க்கலாம். சிறு நகரமாகவோ கிராமமாகவோ இருந்தா மாடு மேய்க்க மேல ப்ரொசீட் பண்ணலாம்.

இப்ப மாட்டை நாம தேர்ந்தெடுக்கனும். பால் வியாபாரம் செய்யறதுன்னாலும் வறட்டி பிசினஸ் செய்யறதுனாலும் எருமை மாடு தான் பெஸ்ட். எருமை பால் தான் கொஞ்சம் கெட்டியா இருக்கும். பால்ல நிறைய தண்ணி கலக்கலாம். அதே நேரம் நிறைய சாணியும் போடும். பசு மாடுன்னா நம்மாள நிறைய தண்ணி கலக்க முடியாது. அவ்வளவுதான். வறட்டி பிசினஸ் அதே அளவுல தான் இருக்கும்.

இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு மெயின் டாபிக்குக்கு போகலாம். காலைல எழுந்ததும் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு உங்க வயித்துக்கும் கொஞ்சம் ஏதாவது காட்டிட்டு மாட்டை ஓட்டிட்டு கிளம்பனும். கிளம்பும்போது அத்தியாவசமான பொருட்கள் எல்லாம் எடுத்து வச்சுக்கனும். ஒரு செக்லிஸ்ட் வேணும்னா கூட தயார் பண்ணிக்குங்க. மாட்டைக் கட்ட கயிறு, அந்த கயித்தைக் கட்ட ஒரு குச்சி, கொறிக்கறதுக்கு எதுனா எடுத்துக்கலாம். அப்படி இல்லைனாலும் பிரச்சனை இல்ல. கடலை விதைச்சிருக்க புஞ்சை பக்கமா மேய்க்க போயிடலாம். நிலத்துக்கு சொந்தக்காரன் பார்க்காத நேரத்துல ஒரு கொத்து செடியைப் புடுங்கி மடியில கட்டிக்கிட்டா அன்னைக்கு கொறிக்க ஆச்சு. சாப்பாட்டுக்கு வீட்டுக்கு திரும்பி வரதுன்னா பிரச்சனை இல்ல. சாயங்காலம் வரைக்கும் மேய்க்கனும்னா சாப்பாடும் கொண்டுபோயிடனும்.

மாட்டை ஒரு தரிசு நிலத்துலயோ அறுவடை ஆகி முடிஞ்ச நிலத்துலயோ குச்சியை அடிச்சு கட்டி மேய விட்டுடனும். போட்டி நிறைய இருந்தா ஏரியா பிரிச்சுக்குங்க. அந்தளவு மட்டும் கயிறை விட்டு மாட்டைக் கட்டுங்க. ஏன்னா எந்த வேலை செஞ்சாலும் நாம கே.டி.குஞ்சுமோனா தான் இருக்கனும். மாட்டைக் கட்டும்போது பக்கத்துல முள்காடு எதுவும் இல்லாம பார்த்துக்கனும். இல்லனா மாடு உள்ள போய் சிக்கி நம்ம உயிரை வாங்கிடும். அதை வெளிய இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம கைகாலெல்லாம் அக்குபஞ்சர் ஆகிடும். அதே மாதிரி பக்கத்துல எவனாவது பயிர் வச்சிருந்தா அந்த பக்கம் நம்ம மாடு போகாம பார்த்துக்கனும். இல்லைனா பஞ்சாயத்து ஆகிடும். நமக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை. அதுல இது வேற எதுக்கு?

மாடு அதுபாட்டுக்கு மேய்ஞ்சுட்டு கிடக்கும். நாம அந்த கேப்புல நிறைய வேலை பார்க்கலாம். பம்ப் செட்ல படுத்து தூங்கிடலாம். அப்படி தூக்கம் வரலைனா மாட்டுக்கு வைக்க புல் புடுங்கலாம். ரெண்டு மூனு பேரா செட் சேர்ந்துட்டா மரத்தடில உட்கார்ந்துட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடலாம். ஓடிப்போன முருகேசன் சம்சாரத்தைப் பத்தி பேசலாம். கேப்டன் கட்சியைப் பத்தி பேசலாம். பஞ்சாயத்து தலைவர் ரோடு காண்டிராக்ட்ல பணம் அடிக்கறதைப் பத்தி பேசலாம். அமெரிக்க போன கோடிவீட்டு குப்புசாமியோட ரெண்டாவது புள்ளையைப் பத்தி பேசலாம். அடுத்த மாசம் மெட்ராஸ் போறதுக்கு இப்பவே ப்ளான் போடலாம். துரைசாமி கல்யாணத்துக்கு மொய் எவ்வளவு வைக்கலாம்னு கூடிப்பேசி முடிவு பண்ணலாம். இப்படி ஏதாவது பேசியோ தூங்கியோதான் பொழுதைக் கழிக்கனும்.

பொழுது சாய்ஞ்சதும் மாட்டை ஓட்டிக்கிட்டு வீட்டைப் பார்த்து நடக்கனும். வறட்டி பிசினஸ்ல நீங்க ரொம்ப சீரியசா இருந்தா ஒரு கூடைல நம்ம மாடு நிலத்துல போட்ட சாணியெல்லாம் அள்ளிட்டு வரலாம். மாட்டைக் கொட்டாயில கட்டிட்டு ஒரு குளியலைப் போட்டுட்டு மாட்டுக்கு தண்ணி காட்டனும். தவிடு புண்ணாக்கெல்லாம் போட்டா பால் நல்லா கறக்கும். மாட்டுக்கு தண்ணி காட்டினதும் அதுக்கு வைக்கோலோ புல்லோ போட்டுட்டு நம்ம கட்டையை சாய்க்க வேண்டியதுதான்.

இதே நீங்க ஒரு நகரத்துல இருந்தா கொஞ்சம் பிரச்சனை. மாடு மேய்க்க இடம் அவ்வளவு சுலபமா கிடைக்காது. ஊருக்கு வெளியே ஏதாவது ஏரிக்கரை பக்கம் போகனும். அங்கயும் பட்டா இல்லாத நிலத்துல பக்காவா பங்களா கட்டி வச்சிருப்பானுங்க. அவங்க தொல்லை தாங்காது. நம்ம மாட்டுக்கு அரிப்பெடுத்து அவங்க வீட்டு சுவத்துல உரசினா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுங்க. அதனால மாட்டை அந்த மாதிரி ஆளுங்க வீடு பக்கம் போகாம பார்த்துக்கனும்.

டவுண்ல இன்னொரு பிரச்சனை, நம்ம மாடு போஸ்டர், பேப்பர் எல்லாத்தையும் விரும்பி சாப்பிடும். ஆனா நாம விடக்கூடாது. பால் அளவு குறைஞ்சுடும். சாணியும் கம்மியா போயிடும். வறட்டி பிசினஸ் டவுன் ஆயிடும். அப்படியே போஸ்டரை சாப்பிட விட்டாலும் அரசியல் கட்சி போஸ்டரை சாப்பிட விடாதீங்க. ஜீரணம் ஆகாது.

டவுண்ல இன்னொரு பிரச்ச்னை டிராபிக். ரோட்டுல மாடு போகவே இடம் இருக்காது. பின்னாடி லாரி பஸ்காரன்லாம் வந்து ஹாரன் அடிச்சுட்டிருப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்காம நாம மாடு போற வேகத்துல போகட்டும்னு விட்டுடனும். உணர்ச்சிவசப்படக் கூடாது. பட்டாலும் பெரிய எஃபெக்ட் இருக்காது.

மாடு மேய்க்க அடிப்படையா இவ்வளவு தெரிஞ்சா போதும். மத்த விஷயமெல்லாம் போகப்போக அனுபவ அறிவுல கத்துக்கனும். நல்ல முறையில மாடு வளர்த்து பால் கறந்து கோ-ஆப்பரேடிவ் சொசைட்டில அதை வித்து, வறட்டி தட்டி பிசினஸை டெவலப் பண்ணி எல்லோரும் அண்ணாமலை படத்துல தலைவர் ரேஞ்சுக்கு வளர வாழ்த்துக்கள் :)

.... இங்கே பதியப்பட்டது கப்பி பய | 25 மறுமொழிகள் »

சினிமா! சினிமா!!

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 15, 2007

சிறுவயதில் சினிமாவிற்கு செல்வது என்பது எப்போதாவது நிறைவேற்றப்படும் ஆசை. தலைவர் படத்திற்கு மட்டும் அழுது அடம்பிடித்து செல்ல வேண்டும். இல்லையெனில் ஊரிலிருந்து வரும் அத்தை மாமாக்களுக்காகக் காத்திருக்க வேண்டும். காலப்போக்கில் வீட்டில் நம்மை கைகழுவி விட்டதும் திரையரங்கு இன்னொரு மைதானமாகிவிட்டது.

வடபழனியில் தங்கியிருந்தபோது சுற்றுவட்டாரத்தில் நிறைய திரையரங்குகள். கமலா, பங்கஜம், உதயம், காசி, அன்னை கருமாரி காம்ப்ளெக்ஸ், விஜயா, நேஷனல் என ஏதாவது ஒரு தியேட்டரில் நாங்கள் பார்க்காத படம் ஓடிக்கொண்டிருக்கும். வாரத்திற்கு ஏழு நாட்களும் நைட் ஷோ பார்த்த நாட்களுமுண்டு. சில சமயங்களில் ஒரு புது திரைப்படத்தைத் தியேட்டரில் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக இல்லாமல் கடமையாக மாறிவிடுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது அனைத்து படங்களும் விடுதி மைதானத்திற்கே வந்துவிடும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மைதானத்தில் திரை கட்டி சிடியில் திரைப்படங்கள் திரையிடுவோம். அது மட்டுமில்லாமல் எந்த குப்பை படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்ப்போம். ‘இந்த படம் ரொம்ப கேவலமா இருக்குப்பா. திரும்ப போயிடுங்க’ என கவுண்ட்டரில் டிக்கெட் விற்பவரே சொல்வதும் நடந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பாக இரண்டு படங்கள் மறக்கமுடியாதவை [விடுதியிலிருந்து 40-50 பேர் மொத்தமாக சென்று ஆப்பு வாங்கிய சிட்டிசனை விட்டுவிடுவோம் ;) ]. ஒன்று சாமி. மற்றொன்று சார்லீஸ் ஏஞ்சல்ஸ்.

ஒரு படத்தைப் பார்த்தோ பார்க்காமலோ கருத்து சொல்வதைப் போலவே நமக்குள் ஊறிய இன்னொரு விஷயம் யாராவது வழி கேட்டால் தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக கைகாட்டிவிடுவது. ‘சாமி’ திரைப்படம் மதுரை ‘சிந்தாமணி’ தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் ஆறு பேர் கிளம்பிச் சென்றோம். தியேட்டருக்கு குத்துமதிப்பாகத்தான் வழி தெரியும். சிம்மக்கல்லில் இறங்கியதும் நானும் இன்னொரு நண்பனும் வலப்பக்கம் திரும்பாமல் நேராக நடக்க ஆரம்பித்துவிட்டோம். பின்னால் வந்த ஒருவன் எங்களுக்கு வழி தெரியுமா எனக் கேட்டதற்கும் “நாங்கள்ல்லாம் மதுரயை கரைச்சு குடிச்சவய்ங்க. பேசாம வா மாப்ள”ன்னு லந்துவிட்டுக்கிட்டு நடக்க ஆரம்பித்தோம்.

என்ன மேட்டர்னா மதுரையில் மாசி வீதி, பங்குனி வீதின்னு எல்லாம் சுத்தி சுத்தி இருக்கும். நாங்க இன்னர் ரிங்ல நடக்கறதுக்கு பதில் அவுட்டர் ரிங்க்ல நடந்துட்டு இருக்கோம். இந்த மேட்டரே அரை ரவுண்ட் அடிச்சப்புறம் தான் தெரியுது. அப்படியும் முன்னாடி போயிட்டிருந்த நாங்க ரெண்டு பேரும் அசரல. கொஞ்சம் வேகமா நடந்து பசங்க கண்ணுல இருந்து மறைஞ்சு அவங்க பார்க்கறதுக்கு முன்ன வேற யார்கிட்டயாவது வழி கேட்டுடலாம்னு வேகமா நடந்தோம். ஒரு ஜிகர்தண்டா தள்ளுவண்டி கடைக்காரர்கிட்ட கேட்டா “சிந்தாமணி தியேட்டர் ஒரு கிலோமீட்டர் முன்னாடியே இருக்கே”ங்கறாரு.

இதை பசங்க கிட்ட சொல்ல முடியுமா? லெப்ட் ரைட்டுன்னு எடுத்து எப்படியாவது தியேட்டருக்கு போயிடலாம்னு நடந்தா மீனாட்சி அம்மன் கோயிலே வந்துடுச்சு. அங்கயிருந்து எப்படியோ தியேட்டரை கண்டுபுடிச்சு போனா டிக்கெட் வித்துமுடிச்சுட்டாங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து படம் பார்க்காம போறதான்னு ப்ளாக்ல வித்துட்டிருந்த ஒரு அண்ணாச்சிகிட்ட ஆறு டிக்கெட்டை வாங்கி உள்ள போனா வச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு. டிக்கெட் கிழிச்சு குடுக்கறவரு அப்படியே ஆறு பேரையும் வெளிய தள்ளிவிட்டார். கேட்டா அது போன ஷோவோட டிக்கெட்டாம். அலைஞ்சு திரிஞ்சு அல்லாடி வந்தா ப்ளாக்ல வாங்கின டிக்கெட்லயும் ஆப்பு.

மத்த பசங்க எல்லாம் என்னவோ எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம்னு எங்க ரெண்டு பேரையும் முறைக்கறாங்க. இதுக்காக ஃபீல் பண்ணா முடியுமா? ஒரு ரெண்டு மணி நேரம் அப்படியே மாசிவீதியில சுத்திட்டு ஒரு கடையில ரவுண்ட் கட்டி சாப்பிட்டு நைட் ஷோ அதே படத்தை அதே தியேட்டர்ல பார்த்துட்டு தான் வந்தோம். முன் வச்ச காலை பின் வைக்கலாமா? அப்புறம் தல டிரெயினிங்குக்கு என்ன மரியாதை?

இதே மாதிரி இன்னொரு முறை ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ படத்துக்கு ஒரு பத்து பேர் கிளம்பினோம். மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்ல. தியேட்டருக்குப் போய் பார்த்தா நாலு பசங்க பாக்கெட்ல பத்து பைசா இல்லாம வந்திருக்காங்க. கைல இருந்த காசையெல்லாம் போட்டு டிக்கெட்டை வாங்கி படத்தை நல்லா ஜாலியா பார்த்தோம். காமரூன் டியாஸ், ட்ரூ பேரிமூர், சப்பை மூக்கு லூசி லியூன்னு நல்லா கில்பான்ஸா இருந்துச்சு.

படம் முடிஞ்சு வெளிய வந்து திரும்பி போக பஸ்ஸுக்கு காசு இருக்கான்னு பார்த்தா ஆறு ரூபாய் குறையுது. இதுக்காக டிக்கெட் வாங்காமலா போக முடியும்? நோ. நெவர்.

ஆபத்பாந்த்தவனா ஒரு பையன் செமஸ்டர் முழுக்க தோய்க்காம இருந்த துணிகளை தோய்க்க நாலு பாக்கெட் சர்ஃப் பவுடர் வாங்கி வச்சிருந்தான். அதை கடைல குடுத்து காசு வாங்கிக்கலாம்னு பக்கத்துல இருந்த ஒரு கடைல “அண்ணே, நாங்க திருப்பரங்குன்றம் தியாகராஜா காலேஜ்ல படிக்கறோம். என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க. பஸ்ஸுக்கு டிக்கெட் காசு கொஞ்சம் குறையுது. இந்த சர்ஃப் பாக்கெட்டை வச்சுக்கிட்டு அதுக்கான காசை குடுக்க முடியுமா?”ன்னு பம்மிட்டே கேட்டோம்.

அந்த நல்ல மனுசனும் நாலு சர்ஃப் பாக்கெட்டை வாங்கிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். மீதி குடுக்க “ரெண்டு ரூபாய் சேஞ்ச் இல்லையே”ன்னு கெத்தா சொன்னான் நம்ம கூட இருந்தவன். அவர் கேவலமா ஒரு லுக் விட்டுட்டு “பரவாயில்ல தம்பி. இருக்கட்டும்”ன்னு ரெண்டு ரூபாய் போட்டுக் குடுத்தார். அந்த காசை வச்சு அடிச்சுபுடிச்சு ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.

இதுமாதிரி தியேட்டர் அனுபவங்கள் நிறைய இருக்கு. ஒரு நண்பனை மூனு மணி நேரம் தியேட்டர் வாசல்ல காத்திருக்க வச்சுட்டு நான் ஆபிஸ்ல ஆப்பு வாங்கிட்டிருந்த கதையெல்லாம் இருக்கு.

இதை எழுதிட்டு இருக்கும்போது என் நண்பன் “ஏன்டா, ஓசில இடம் குடுக்கறாங்கன்னு இட்லிக்கு சட்னி வைக்காததைக் கூட எழுதிட்டு இருப்பியா?”ன்னு கேட்கறான். ” என்னங்க பண்றது. பொது வாழ்க்கையில இறங்கிட்டப்புறம் எல்லா வித மொக்கையும் போட்டுத்தானே ஆகனும்? :) ))

.... இங்கே பதியப்பட்டது கப்பி பய | 17 மறுமொழிகள் »

சங்கம் டெக்குனாலஜீஸ்

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 9, 2007

சங்கம் டெக்னாலஜீஸ் திண்ணையில் உட்கார்ந்து ஆணி அடிக்கும் சுத்தியில் ஈ அடித்துக்கொண்டிருக்கிறார் தல. மற்ற சங்கத்து சிங்கங்கள் தல செலவில் ஆளுக்கு ஐந்து அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது போர்வாள் தேவ் “தல..டெண்டர் வாங்கிட்டோம்” என கத்தியபடியே வரப்பில் ஓடி வருகிறார். மற்ற சங்கத்து சிங்கங்கள் தூக்கம் கலைந்து எழுந்துவருகிறார்கள்.

“தல, வெள்ளைக்காரன் ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நமக்கு கொடுத்துட்டான். நாம உடனே வேலையை ஆரம்பிக்கனும்” என மூச்சு வாங்கியபடியே ஹை டெசிபலில் அலறுகிறார்.

“என் வயித்துல பாலை வார்த்த ராசா! அப்ரண்டீஸ்களா இம்புட்டு நாள் ரெஸ்ட் எடுத்தது போதும். வேலையை ஆரம்பிங்கப்பு” என சவுண்ட் விட்டு எல்லோரையும் உள்ளே அனுப்புகிறார் கைப்பு.

சாப்ட்வேரைப் பற்றி ஒன்றும் தெரியாத தல போர்வாளை தனியே கூப்பிட்டு “ராசா, எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எல்லாப் பயலுகளுக்கும் தெரியும். ஆனாலும் இன்னும் மெயின்டெயின் பண்ணிட்டிருக்கேன். நீ தான் இந்த ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நல்ல படியா முடிச்சுக்குடுக்கனும்” என கெஞ்சியபடி பின்னால் செல்கிறார்.

“தல நம்ம அப்பரண்டீசுங்க எல்லாம் ஒன்னா ஒழுங்கா வேலை பார்க்கனும்னா அவங்களுக்குள்ள ஒரு டீப் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும். அதனால எல்லாரையும் கிரிக்கெட் வெளாட கூட்டிட்டுப் போறேன். அங்க போய் பேசி எல்லாம் ஒன்னா மண்ணா ஆனதும் வேலையைப் பார்க்கலாம்.”

இதைக் கேட்டதும் சிங்கங்கள் சந்தோஷமாக மீண்டும் சங்க திண்ணைக்கே வருகிறார்கள்.

“அடப்பாவி மக்கா! வேலையை ஆரம்பிங்கடான்னா வெளாடப் போறோம்னு கெளம்பிட்டீங்களா? அதெல்லாம் இன்னைக்கு கிடையாது. எல்லாப்பயலுகளும் உள்ளே போங்க” என மீண்டும் உள்ளே அனுப்புகிறார். சிங்கங்கள் பொட்டி தட்டுவது போல் நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு பொட்டியில் இளாவும் தளபதி சிபியும் விண்டோஸ் பெயிண்ட்டை திறந்து வைத்துக்கொண்டு அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளை வரைந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் பி.பி எகிற அவர்களிடம் வரும் கைப்பு ‘ஒரு மாசத்துல எல்லா வேலையும் முடிக்கிறோம்னு தேவு தம்பி வாக்கு குடுத்துட்டு வந்திருக்கு. ஆக்ரோஷமா வேலை பார்க்க வேண்டிய நீங்க ரெண்டு பேரும் விளையாடிட்டிருக்கீங்க. என்ன இது?” என கண்கள் சிவக்கிறார்.

உடனே தளபதி ‘தல! இது கலாய்த்தல் திணை. அதுல இப்படி தான் கோடு அடிக்கனும். கீழே பாரு. சின்ன ஃபாண்ட்ல இது சும்மா லுல்லலாய்க்குன்னு எழுதியிருக்கேன்’ என விவரிக்கிறார்.

“சாமி, உங்க கலாய்த்தலை நிப்பாட்டிக்குங்க. நேரத்துல ஆணி புடுங்கலைன்னா மொத்த ஆப்பும் எனக்குத்தான். வேலையைப் பாருங்கய்யா” என்றபடி திரும்புகிறார். அப்போதுதான் இராயல் உள்ளே வருகிறார்.

தன் மொத்த கோபத்தையும் தன் கண்களில் காட்டி “எங்கே போயிட்டு வர்ற?” என தலை கேட்க,

“இண்டர்வெல் போனேன் தல” என அப்பாவியாய் சொல்கிறார் இராம்.

“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள இண்டர்வெல்லா? சரி அதை விடு. இன்னைக்கு என்ன வேலை பார்க்க போற?”

“மைக்ரோசாப்ட் ஆபிஸ்ல வேலை பார்க்க போறேன் தல”

“ராஸ்கோல், என் ஆபிஸ்ல வேலை பார்க்க சோறுபோட்டு சம்பளம் குடுத்து உட்கார வச்சா அது எவன்டா மைக்ரோசாப்ட் அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கற? அவன் யாரு? கட்டதுரை ஆளா?”

“ஐயோ தல, ஆபிஸ்ன்றது ஒரு சாஃப்ட்வேர் பேரு. உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எங்களுக்குத் தெரியும். ஒரு மூலைல போய் உட்காரு. இல்ல நடக்கறதே வேற” என கத்திவிட்டு சீட்டுக்கு சென்று சீட்டாட ஆரம்பிக்கிறார்.

“இங்கிபிங்கி பாங்கி தல ஆஸ் தி டாங்கி” என பின்கட்டிலிருந்து சவுண்ட் வருகிறது.

அங்கே இளையதளபதி வெட்டி சீரியசாக ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

“அங்கே என்னடான்னா ஒருத்தன் கிரிக்கெட் விளையாடனும்னுட்டு இருக்கான். இங்க நீ இங்கிபிங்கி பாங்கி போடற. என்னங்கடா நடக்குது இங்க?”

“தல, டிஸ்டர்ப் பண்ணாத. நான் இந்த சாப்ட்வேரை டெஸ்ட் பண்றேன். இங்கிபிங்கி போட்டு அந்த டெஸ்ட் பாசாயிடுச்சா இல்ல பெயிலான்னு முடிவு பண்ணுவேன்” என எக்ஸ்ப்ளெயின் செய்கிறார் வெட்டி.

“அடப்பாவிகளா, இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவீங்களா? நான் கூட ஏதோ பெரிய டெக்குனிக்கு இருக்குன்னு நினைச்சனேடா..இதான் உங்க டெக்குனிக்கா?”

பக்கத்து சீட்டில் ஜொள்ஸ் செல்போனில் ஹஸ்கி வாய்ஸில் காலை பஸ்ஸில் கரெக்ட் பண்ன பிகரைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்.

“வேலை நேரத்துல என்னய்யா போனு?”

“வெள்ளைக்காரன் கூட தான் தல பேசிட்டிருக்கேன். அவனுக்கு எந்த மாதிரி ஆணியெல்லாம் புடுங்கனும்னு கேட்டுட்டிருக்கேன்” என பொய்மூட்டையய அவிழ்க்கிறார் பாண்டி.

“என்னமோ சொல்ற. நானும் நம்பறேன். சரி சூடான்ல ஒரு அப்பரண்டீசு உட்கார்ந்திருக்கானே. என்ன செய்யறான்? அவனுக்கு ஒரு போனைப் போடு” என்றதும் புலிக்கு டயல் செய்கிறார் பாண்டி. அது தவறுதலாக ஒரு அஜால்குஜால் நம்பருக்கு செல்கிறது. “ஹேய் ஸ்வீட்டி, எப்படி இருக்க?” என கொஞ்சல் குரலில் மறுமுனையில் ஒரு பெண். “ச்சே ராங்க் டைம்ல கரெக்ட் நம்பர்” என புலம்பியபடி தல பார்ப்பதுக்கு முன் கட் செய்கிறார் பாண்டி. அதற்குள் தலயின் செங்கல்போன் காட்டுக்கத்து கத்த அதை அலம்பலாக எடுக்கிறார் தல. மறுமுனையில் சிவா.

“தல இங்கன நிலமை ரொம்ப மோசமாயிருக்கு. விலைவாசி ஏறிடுச்சு. எனக்கு சம்பளத்தைக் கூட்டிக்கொடு” என்று சண்டை போடுகிறார் புலி.

“அடப்பாவி இன்னும் வேலையே பார்க்க ஆரம்பிக்கல. அதுக்குள்ள சம்பள உயர்வா? ராஸ்கோல். அடுத்த வாரம் பொதுக்குழு கூட்டும்போது முடிவு பண்ணிக்கலாம். போனை வை” என்று அணைக்கிறார் கைப்ஸ்.

அருகிலுள்ள பொட்டியில் மற்ற வலையுலகத்து சங்க மக்கள் அனைவரும் ரவியின் தேடுஜாப்ஸ் வலைப்பக்கத்தை மேய்ந்துகொண்டிருக்கின்றனர். “அட அநியாய அப்ரண்டீசுகளா, சங்கத்து ஆபிஸ்லயே வந்து அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போடறீங்களா” என நொந்து நூடுல்ஸ் ஆகிறார் தல.

அப்போது “ஐயோ என்னை விட்ருங்க! என்னால இதுக்கு மேல ஆணி புடுங்க முடியாது. இந்த ஆப்பே இன்னும் ஆறு மாசத்துக்கு காணும். சங்கத்து பணியை ஆத்தனும். இல்லன்னா தல என்னைக் கடிக்கும். என்னை விட்ருங்க. விட்ருங்க” என யாரையோ பார்த்து கத்தியபடியே சங்கத்தை நோக்கி ஓடி வருகிறான் கப்பி.

ஒரு பொறியில் இருந்து எஸ்கேப்பாகி இன்னொரு பொறியில் சிக்குவது போல் ஆப்பை தயாராக வைத்திருக்கும் சங்க மக்கள்ஸைப் பார்த்ததும் மயங்கிவிழுகிறான் கப்பி. அவனைப் பிடிக்க சிங்கங்கள் ஓடி வர “இன்று விடுமுறை” என சங்கம் டெக்னாலஜிஸ் வாசலில் போர்ட் மாட்டுகிறார் ராயல்.

.... இங்கே பதியப்பட்டது கப்பி பய | 25 மறுமொழிகள் »

BE CAREFUL!!!

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 1, 2007

வானுச வையோரே வயசுல பெரியோரே வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும். மக்கள்ஸ் எல்லாரும் நலமா. இந்த அப்பாவி அப்ரண்டீஸை அட்லாஸ் ஆக்கிப் பாத்துப்புடனும்னு சங்கத்து சிங்கங்கள் முடிவெடுத்துட்டாங்க. எப்ப, யார் சிக்குவாங்கன்னு ரெடியா ஆப்பை கைல வச்சுகிட்டு ஸ்பேர் ஆப்பை பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டு திரியறவங்க இப்ப வகையா ஒருத்தன் சிக்கினா விடுவாய்ங்களா. வகைதொகை இல்லாம வரிஞ்சு கட்டப்போறாய்ங்க. இதுக்கெல்லாம் அசரவய்ங்களா நாம? ‘நான் ஒரு முறை ஆப்பு வாங்கிட்டா அடுத்த ஆப்பை நானே மதிக்க மாட்டேன்’ன்னு வலியை வெளியக் காட்டாம ரியாக்ஷனை கண்ட்ரோல் பண்ணி சிரிச்சுட்டே இருக்கறதுதான் தலகிட்ட நாம எடுத்த ட்ரெயினிங்குக்கு மதிப்பு. அதே மாதிரி ‘நான் ஒரு முறை மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணிட்டா என் மொக்கையை நானே தாங்க மாட்டேன்’. அதனால Be Careful :) )

நம்ம தல கிட்ட எடுத்த ட்ரெயினிங்ல முக்கியமான எபிசோட் ஓசி காஜி அடிக்கறது. ஓசில ஆப்பே வந்தாலும் அதுல சீரியல் செட் அலங்காரம் போட்டு அல்டாப்பா உக்கார சொல்லிக்கொடுத்திருக்காரு தல. காலைல பல் துலக்கறதுல இருந்து ராத்திரி இழுத்துப்போத்திக்க பெட்சீட்டு வரைக்கும் இப்படி ஓசியிலயே ஓட்டறவய்ங்க பல பேர் இருக்காங்க.

இந்த மாதிரி ஆளுங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே அவங்க கேட்கற விதம்தான், பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கற மாதிரி. நம்ம ப்ரெண்டு ஒருத்தர் இருக்காரு. எதையுமே அவருக்கு வேணும்னு கேட்கமாட்டாரு. “பாஸு, அந்த கடைல தேங்கா போளி நல்லாயிருக்கும் சாப்பிட்டிருக்கீங்களா”ன்னு தான் ஆரம்பிப்பார். இதுக்கப்புறம் நாம என்ன சொன்னாலும் எடுபடாது. நம்மள கையப்புடிச்சு கடைக்குக் கூட்டிட்டு போய் ஒரு போளியை வாங்கி அவர் சாப்பிட்டுட்டு கூட்டிட்டு வந்த கடனுக்கு நம்ம வாயில ஒரு போளியைத் திணிச்சு நம்ம பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து அவரே செட்டில் பண்ணிடுவாரு. நாம ஒன்னுமே செய்ய வேணாம். செய்யவும் முடியாது. அவர் அம்புட்டு திறமைசாலி.

அவரே காலேஜ் படிக்கற காலத்துல இன்னொரு காமெடி பண்ணியிருக்காரு. அப்பல்லாம் கைல அஞ்சு பத்து தான் இருக்கும். மாச மொத வாரத்துல வீட்டுக்கு போன் பண்ணாத்தான் பணம் வரும். அதுக்கப்புறம் ஒரு வாரத்துல போன் பண்ணவும் காசு இருக்காது. கடன் வாங்கி போன் பண்ணாலும் பணம் வராது. அப்படியான நேரத்துல நைட் ஸ்டடி போடறோம்னு நான், நம்ம ஓசி காஜி, அப்புறம் என்னை மாதிரியே இன்னொரு அப்பிராணி மூனு பேரும் ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்துகிட்டு பட்டறையைப் போட்டுட்டிருந்தோம். பட்டறைனா தெரியும்ல…அதாம்பா டாப்பு.

திடீர்னு நம்ம பாசுக்கு டீ குடிக்கற ஆசை வந்துடுச்சு. அவர் என்னைக்கு பாக்கெட்ல பணம் வச்சிருக்காரு? “பாசு, தூக்கம் வர மாதிரி இருக்கு. அக்கா கடைக்கு போய் டீ குடிச்சுட்டு வரலாமா?”ன்னு பேஸ்மெண்ட் போட ஆரம்பிச்சார். சரி ஒரு டீ அடிச்சுட்டு வரலாம்னு கெளம்பியாச்சு. மூனு டீ ஆறு ரூபாய்ன்னு கணக்கு பண்ணி என்கிட்ட இருந்த நாலு ரூபாய்கூட பக்கத்து ரூம் பையன்ட்ட ரெண்டு ரூபா கடன் வாங்கிட்டு போனோம்.

கடைக்குப் போனதும் நம்ம பாசு “பாஸு, நான் டீ குடிக்க மாட்டேன். பால் தான் குடிப்பேன்”ன்னாரு. “இல்ல பாசு, ஆறு ரூபா தான் இருக்கு.மூனு டீ தான் வரும். பால் மூனு ரூபா. பத்தாது”ன்னோம்.

உடனே பாஸு கடைக்காரர் பக்கம் திரும்பி ஆர்டர் கொடுத்தாரு பாருங்க. “ஒரு பால். ஒரு டீ ஒன் பை டூ”. அவருக்கு பாலாம். காசு குடுக்கற எங்களுக்கு ஒன் பை டூ டீயாம். டேய் பாவி ஓசில குடிக்கற எகத்தாளத்தைப் பாருன்னு அவனை மொறச்சா ரியாக்ஷனே காட்டாம இருக்கான். அதுமட்டுமில்ல மிச்சமிருக்கற ஒரு ரூபாய்க்கு மசால் வடை வாங்கி பாதியை அவன் எடுத்துகிட்டு மீதி பாதியை எங்க ரெண்டு பேருக்கும் தூக்கிப்போட்டான். என்னத்த சொல்றது. நாங்களும் அரை டம்ளர் டீயாவது குடிக்கவிட்டானேன்னு வந்துட்டோம்.

இதுமாதிரி அடுத்தவங்க மிளகா அரைக்கறதுக்காகவே அண்டா சைஸுக்கு மண்டை வச்சிருக்கவய்ங்க நாங்க. பார்த்து சூதானமா அளவோடு ஆப்படிச்சு வளமோடு வாழுங்கப்பு.

தில்லுமுல்லு படம் பார்த்திருக்கீகளா? அதுல தேங்காய் சீனிவாசன் அப்பரண்டீசுகளுக்கு இண்டர்வ்யூ வச்சு நொங்கெடுப்பாரு. அப்ப சுப்பிரமணிய பாரதின்னு ஒரு அப்பரண்டீசு வருவாரு. அந்த டயலாக் ஞாபகம் இருக்கா?

“ல-னாவும் வராது!! ள-னாவும் வராது! ழ-னாவும் வராது!! பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. நீர் நாட்டுக்கும் அவருக்கும் பெரும் துரோகம் செய்யறீர்ய்யா”ம்பார் தேங்காய்.

அதுக்கு அசராத அப்பரண்டீசு “ஸார்ட் நேம் சுப்பி சார்”ன்னு இளிக்கும்.

“சுப்பியாவது கப்பியாவது கெட்டவுட்”ன்னு சீறுவார் தேங்காய்.

இதுமாதிரி எதுவும் வராம கப்பித்தனமா காமெடி பண்ணிட்டிருந்தவனை அலங்காரம் பண்ணி அட்லாஸ் ஆக்கிவிட்டிருக்கீங்க. உங்க வாழ்த்துக்களோட ஆட்டத்தை ஆரம்பிக்கறேன். தொடர்ந்து ஆதரவு தாங்க :)

BE CAREFUL! (நான் எனக்கு சொன்னேன்)

.... இங்கே பதியப்பட்டது கப்பி பய | 29 மறுமொழிகள் »