வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘அருட்பெருங்கோ’ பகுப்புக்கான தொகுப்பு

மாமாவின் காதல் – நிறைவுப் பகுதி

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 28, 2007

மாமாவின் காதல் – முதல் பகுதி


அன்று கேண்டீனில் கூட்டம் அதிகமில்லை. ப்ரியாவும், இளாவும் டீக்குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக ஓடி வந்த சுரேஷ் “ப்ரியா, மாமா பைக்ல போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு… தலைல நல்ல அடியாம் KMCHல அட்மிட் பண்ணிட்டாங்களாம், கிளம்பு போலாம்”. அவர்களோடு இளாவும் கிளம்பினாள்.

மருத்துவமனையை நெருங்க நெருங்க இளாவுக்கு அழுகை ஆரம்பித்திருந்தது. ICU வுக்குள் இருந்ததால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து மாமா சுயநினைவுக்கு வர இரண்டு நாட்களானது. நினைவு திரும்பிய பிறகு அவன் அப்பாகூடவே அவனைப் பார்க்க போன அந்த நான்கு பேரோடு இளாவும் உள்ளேப் போனாள். அவன் அப்பா அவனிடம் அதிகம் எதுவும் பேசாமல் மருத்தவரைப் பார்க்கப் போய்விட்டார். அவர்கள் நால்வரும் அவனோடுக் கொஞ்சமாய்ப் பேசிவிட்டு திரும்பும் வரையிலும் ஓரமாய் அமைதியாய் நின்று கொண்டிருந்தாள் இளா. அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. அவளும் அவனைப் பார்த்து விட்டு வந்ததோடு சரி.

அதன் பிறகு இரண்டு மாதம் அவன் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டி ஊருக்கேப் போய்விட்டான். அந்த இரண்டு மாதமும் இளாவிடம் எதாவது மாற்றம் தெரிகிறதா என்று கவனிப்பதே ப்ரியாவுக்கும், உமாவுக்கும் வேலையாக இருந்தது. ஆனால் அவளிடம் எந்த வருத்தமும் இருந்த மாதிரி தெரியவில்லை. உண்மையா, நடிப்பா என்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. இளாவிடம் கடைசியாக ஒருமுறை கொஞ்சம் சீரியசாக கேட்டு விடுவது என்று ப்ரியாவும், உமாவும் முடிவு செய்து அவளிடம் பேச அவளை கேண்டீனுக்கு வர சொல்லியிருந்தார்கள்.

“என்னங்க்கா ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க? வழக்கம்போல மாமாயணமா?”

“கொஞ்சம் சீரியசாப் பேசலாமா?” – ப்ரியா.

“நான் எப்பவுமே சீரியசா தான் பேசிட்டு இருக்கேன்! நீங்க தான் புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க”

“உண்மையிலேயே உனக்கு மாமாவப் பிடிக்கலையா?”

“பிடிச்சிருக்கவங்க எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்க்கா… ஆரம்பத்துல அவர் மேலக் கோபம் இருந்தது உண்மை…ஆனா இப்போ அவர் மேலக் கோபம் இல்ல.. பரிதாபமாதான் இருக்கு”

“அவர் எழுதினக் கவிதைகள் எதையும் நீ ரசிக்கவேயில்ல?”

“கவிதைகள் எல்லாமே வாசிக்கிறதுக்கும், ரசிக்கிறதுக்கும் தாங்க்கா எழுதறாங்க. அப்புறம் நல்லா கவிதை எழுதறாங்க அப்படிங்கறதுக்கெல்லாம் காதலிச்சுட முடியாது”

“ஏ…அதெல்லாமே உன்ன நெனச்சுதான் எழுதறார்னு உனக்குத் தெரியாதா?” – உமா

“ம்ம்ம்… நான் தெளிவா சொன்ன பின்னாடியும் அவர் இப்படி பண்ணிட்டு இருக்கிறது அவருக்கேத் தப்புனு தோணனும்!”

“ரொம்பப் பேசாத இளா… நீ எதிர்பார்க்கிற என்ன இல்ல அவர்ட்ட? உண்மையிலேயே சொல்றோம் அவர் உனக்கு perfect match. A friend for ever”

“அது நான் முடிவு பண்ணனும்ங்க்கா!”

“உனக்கென்ன மாமாவக் காதலிக்கிறது பிரச்சினையா? இல்ல காதலிக்கிறதே பிரச்சினையா?”

“…”

“காதலிக்கிறது தான் பிரச்சினை அப்படின்னா கவலையவிடு. உனக்காக உங்க அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கறதெல்லாம் மாமாவேப் பாத்துக்குவார்.”

“க்கா நீங்களா ஏதேதோப் பேசாதீங்க… என் மனச மாத்தலாம்னு முயற்சி பண்ணாதீங்க என்னோட முடிவுல எந்த மாற்றமுமில்ல நான் தெளிவாதான் இருக்கேன்”

“ம்ஹும் இவளுங்களத் திருந்த முடியாதுடி…பாக்க மாதவன் மாதிரி இருக்கான்னு எவனாவது ஒரு சைக்கோ கேஸ்கிட்ட இவளுங்களே போய் மாட்டிக்குவாளுங்க…ஆனா கொஞ்சம் நல்லாவனா இருக்கவன் தானா வந்து ப்ரபோஸ் பண்ணிட்டா மட்டும் போதும் ஓவரா தான் அலம்பல் பண்ணுவாளுங்க… இதுக்கெல்லாம் அனுபவிப்பா” – உமா கொஞ்சம் கோபமாகவே சொன்னாள்.

அவர்கள் பேசியது அவள் காதிலும் விழுந்தது.

இரண்டு மாதம் கழித்து மாமா மீண்டும் வந்த பிறகு, இளவரசி மனதை இனியும் மாற்ற முடியாது என்று நடந்ததெல்லாம் சொன்னார்கள் சுரேஷும், விஜயும். ஏற்கனவே விபத்தில் மாட்டிக் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தவனுக்கு இது மேலும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக அவள் தன்னைக் காதலிப்பாள், காதலிக்கிறாள் என நம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவளிடம் எப்போது, எப்படி ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளே வந்து பேசியது ஆச்சரியமாயிருந்தது.

“எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேசனும்”

“நெறையக்கூட பேசலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்”

“தயவு செஞ்சு இனிமேலும் நான் உங்களக் காதலிப்பேன்னு வீணா நம்பிட்டு இருக்க வேணாம்…நெக்ஸ்ட் இயர் உங்களுக்கு ப்லேஸ்மெண்ட் ஆரம்பிக்கப் போகுது அதுல கான்செண்ட்ரேட் பண்ணப் பாருங்க…”

“நீ இனிமேதான் என்னக் காதலிக்கனும்னு ஒன்னும் கிடையாதே… நீ தான் ஏற்கனவே என்னக் காதலிக்க ஆரம்பிச்சுட்டியே”

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“எத வச்சு சொல்றீங்க நான் உங்கள காதலிக்கிறேன்னு”

“நீ என்னக் காதலிக்கிறேன்னு தோணுது அவ்வளவுதான், ஏன் , எப்படினு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது”

“ஆரம்பத்துல இருந்தே நீங்க காரணமில்லாமலே தான் எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்கீங்க…அதான் பிரச்சினையே”

“காரணத்த வச்சு வந்தா அதுக்குப் பேர் காதலா?”

“பார்த்தவுடனே வந்தா அதுக்குப் பேர் காதலா?”

“பார்த்தவுடனே வந்தது காதல் இல்ல, காதலிக்கலாமா அப்படிங்கற ஆசை”

“சும்மா மழுப்பாதீங்க… காதல்ங்கறது ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் வரணும்… கண்டதும் காதல் எல்லாம் சினிமாவுக்கு வேணும்னா நல்லாருக்கும் ஆனா வாழ்க்கைக்கு உதவாது!”

“உனக்கே நல்லாத் தெரியும் நீயும் நானும் பல விசயங்கள்ல ஒரே மாதிரிதான் சிந்திக்கிறோம்…நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பறேன்”

“நான் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கனும்னு தான் சொன்னேனேத் தவிர ஒரே மாதிரி சிந்திக்கனும்னு சொல்லல… என்ன மாதிரியே இருக்கிற xerox கூட வாழ்றதுல என்ன சுவாரசியம் இருந்துடப் போகுது?”

“தன்னோட பார்ட்னர் 100% தன்ன மாதிரியே இருக்கனும்னு எதிர்பார்க்கிறது முட்டாள்தனம்தான்… ஆனா தான் அதிகம் நேசிக்கிற ஒருத்தருக்கும் தனக்கு இருக்கிற மாதிரி ரசனைகள் தான் இருக்குன்றது உண்மையிலேயே சந்தோசப் படவேண்டியது…அவங்களே லைஃப் பார்டனரா வர்றது இன்னும் சந்தோசமான விசயம் … நான் அததான் உங்கிட்ட எதிர்பார்க்கிறேன்”

இப்படியே இருவருமே மற்றவரை கன்வின்ஸ் செய்கிற மாதிரி பேசிக்கொண்டே போக நேரம் தான் ஆனதே தவிர இருவருமே ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. கடைசியாக அவனே சொன்னான்

“நீ ஏற்கனவே முடிவு பண்ணதுக்கு இப்போ வந்து காரணம் தேடிட்டு இருக்காத… உண்மையிலேயே உனக்கு மனசுல என்ன இருக்குன்னு நல்லா யோசிச்சுப் பாரு… நாளைக்கு இதே டைம் இங்கேயே மீட் பண்ணலாம்… ஒரு நல்ல பதிலா சொல்லு”

எதுவும் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டாள்.

அன்று இரவு நெடுநேரம் அவன் சொன்னதையே யோசித்துக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்கும் அவன் சொல்வதும் சரியாகதான் இருக்கிறது என்கிற எண்ணம் இருந்தாலும், உண்மையிலேயே அவனையும் அவளுக்குப் பிடித்திருந்தாலும் அவள் மனதில் ஆழப் பதிந்திருந்தது என்னவோ அவளைப் பார்த்தவுடனே அவளைக் காதலிப்பதாக அவன் முடிவு செய்தான் என்பது தான். அதுதான் அவளால் நியாயப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. அவனிடம் அடுத்தநாள் என்ன சொல்லவேண்டும் என்று தீர்மானித்துவிட்டுத் தூங்கிப் போனாள்.

அவள் சொல்லப் போவதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது என் யோசித்துக் கொண்டே அவன் இரவும் கழிந்தது.

அடுத்த நாள். அதே நேரம். அதே இடம்.

“என்ன முடிவு பண்ணிட்டியா”

“இங்கப் பாருங்க அருள்… எனக்கும் உங்களப் பிடிக்கும்தான்…கண்டிப்பா உங்களக் கல்யாணம் பண்ணிக்கிப் போற பொண்ணு அதிர்ஸ்டசாலிதான்… ஆனா என்னால அந்த அதிர்ஸ்டசாலியா இருக்க முடியாது… தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடுங்க!”

அவனுடையப் பெயரை அவள் உச்சரித்ததே அவனுக்கு முதல் ஆச்சர்யம். அடுத்து அவள் அவனைப் பிடிக்கும் என்று ஒத்துக் கொண்டதும் இன்னும் ஆச்சர்யம்.

“அதான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டியே… அப்புறமும் என்னத் தயக்கம்? உங்கம்மாவுக்கு பயப்பட்றியா? அதெல்லாம் நான் பாத்துக்கறேன்… நீ கவலைப் படவேண்டாம்”

“எங்கம்மாகிட்ட சம்மதம் வாங்கறதெல்லாம் ரெண்டாவது விசயம்… நான் உங்கள காதலிக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்… அதப் புரிஞ்சுக்கோங்க…எனக்கு உங்களப் பிடிச்சதுக்கு காரணம் உங்களோட கேரக்டர்… ஆனா உங்களுக்கு என்னைப் பிடிச்சதுக்கு என்ன காரணம்? பார்த்தவுடனே என்ன பிடிச்சிருக்குன்னு முடிவு பண்றதுக்கு காரணமா இருந்தது, உங்கப் பார்வைல நான் அழகாத் தெரிஞ்சது மட்டும் தான?”

“இங்க பார்… நாம ஆசப்பட்டு எடுத்த ஒரு ட்ரெஸ்ச மத்தவங்க எல்லாரும் நல்லா இல்லைனு சொன்னாலும் நமக்கு எப்பவும் அது ஸ்பெஷல் தான்…ஏன்னா அது நாம செலக்ட் பண்ணது அப்படிங்கற எண்ணம் தான்… அது மாதிரிதான் நீயும் நான் செலக்ட் பொண்ணு… எனக்கு நீ எப்பவும் ஸ்பெஷல் தான்”

“ஆனா ட்ரெஸ் செலக்ட் பண்ற மாதிரி பார்த்தவுடனே லைஃப் பார்ட்னர செலக்ட் பண்ணிட முடியாது… இன்னைக்கு பார்த்தவுடனே என்னப் பிடிச்ச மாதிரி நாளைக்கே இன்னொரு பொண்ண பிடிக்காதுனு என்ன நிச்சயம்? இல்ல ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகிட்டாலோ இன்னைக்கு இருக்கிற மாதிரியே உங்களால இருக்க முடியுமா?”

அதைக் கேட்டதும் அவனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

“உன்னத் தவிர எனக்கு வேற யாரையும் பிடிக்காது” அவன் குரலில் மாற்றம் தெரிந்தது.

“அதான் ஏன்னு கேட்கறேன்?”

“அதெல்லாம் சொல்ல முடியாது”

“அப்போ நானும் ஒரே வரியில பதில் சொல்றேன்.. மூஞ்சப் பாத்து காதலிக்கிறவன எல்லாம் என்னாலக் காதலிக்க முடியாது”

கிளம்பப் போனவளை நிறுத்தினான்.

“மூஞ்சப் பாத்துதான் உன்ன எனக்குப் பிடிச்சது. ஆனா அதுக்குக் காரணம் நீ அழகாத் தெரிஞ்சேன்றது கிடையாது…” பாக்கெட்டில் இருந்த பர்சை திறந்து காண்பித்தான்.

அதில் அவளைப் போன்ற முக சாயலோடு ஒரு பெண்ணின் போட்டோ. கிட்டத்தட்ட 22, 23 வயதில்.

அவனைப் பார்த்தாள்.

“இது எங்கம்மா! எனக்கு 2 வயசா இருக்கும்போது இறந்துட்டாங்க… “

கொஞ்ச நேரம் கழித்து அவனேத் தொடர்ந்தான்.

“எல்லாப் பையனுக்கும் மனசுக்குள்ள தனக்கு வரப் போற மனைவி எப்படி இருக்கனும்னு ஒரு ஆசை இருக்குமே அது பெரும்பாலும் அவனவனோட அம்மா குணம் மாதிரி இருக்கனும்னுதான் நெனைப்பாங்களாம். எனக்கு எங்க அம்மாவப் பத்தி தெரிஞ்சதெல்லாம் இந்த போட்டோதான். அதான் அதே மாதிரி நீ இருக்கவும் உடனே உம்மேல ஒரு பாசம் வந்துடுச்சு! இத மத்தவங்ககிட்ட சொன்னா… ஏன் உங்கிட்ட சொன்னாலே சிரிப்பீங்கன்னுத் தெரியும்… இது சரியா தப்பான்னு எனக்குத் தெரியல… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் அம்மா இல்லாத ஒரு பையனோட ஃபிலிங்ஸ் மத்தவங்களாலப் புரிஞ்சிக்க முடியாது” கொஞ்சம் சீரியசாகிவிட்டான்.

“ஹே.. ஐ யாம் ரியலி வெரி சாரி… நாந்தான் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்…நீ பார்த்த்வுடனே லவ் பண்றன்னு உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லவும் நான் வேறென்ன முடிவு பண்ண முடியும்”

“சரி இப்போ என்னதான் சொல்ற” நிமிராமலே கேட்டான்.

“பையன்ங்களுக்கு மட்டுமில்ல… எல்லாப் பொண்ணுக்கும் அதே மாதிரி ஆச இருக்கும். அப்பா மாதிரி பாசமா பாத்துக்குற ஹஸ்பெண்ட் கிடைக்கனும்னு. எங்கப்பா பாசத்த 15 வயசு வரைக்கும் அனுபவிச்சிருக்கேன். எங்கப்பா மாதிரி பாசமா நீயும் பாத்துக்குவேன்ற நம்பிக்கை இருக்கு”

நிமிர்ந்து பார்த்தான். புன்னகைத்து விட்டு குனிந்து கொண்டாள்.

ஒரு அப்பா அம்மா விளையாட்டு ஆரம்பமானது.

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

.... இங்கே பதியப்பட்டது அருட்பெருங்கோ | 7 மறுமொழிகள் »

மாமாவின் காதல் – 3

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 19, 2007

மாமாவின் காதல் முதல் பகுதி

“என்னது உன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொன்னாளா? அப்புறம் என்ன சொன்னா?” ஒரு விதக் குழப்பத்தோடு கேட்டான் சுரேஷ்.

“அத மட்டும் சொல்லிட்டு ஓடிப்போயிட்டாடா…நில்லுனு சொன்னதுக்கு மீதிய நாளைக்கு சொல்றேன்னுட்டுப் போயிட்டா”

“மச்சான் அவ ஏதோ வெளையாடறான்னு நெனைக்கிறேன், காலையிலேயே வந்து என் கிட்டையும் இதே மாதிரி ‘ஐ லவ் யூ’னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடிப்போயிட்டா… நானும் சீரியஸாதான் சொல்றா ன்னு நெனச்சுட்டு மாமா வந்ததும் ட்ரீட் கொடுக்கலாம்னு இருந்தேனேடா”

“இன்னைக்கு சாயங்காலமே அவகிட்ட கேட்டுட்லாம் விடு” காற்று போன பலூன் மாதிரி ஆகியிருந்தார்கள் இருவரும்.

அன்றுமாலை கல்லூரியில் இருந்து திரும்பி வரும்போது இளவரசியோடு அவள் தோழிகளும் இருக்கும்வரை பொறுமையாக பின் தொடர்ந்துவந்தவர்கள், அவள் தோழிகள் பிரிந்து அவள் தனியானவுடன் நெருங்கிப் போய் கேட்டார்கள்.

“ஏ நில்லு…எதுக்கு ரெண்டு பேர்கிட்டையும் ‘ஐ லவ் யூ’ சொன்ன? எங்களப் பார்த்தா என்ன கேணையனுங்க மாதிரி இருக்கா?”

அவள் திரு திருவென விழித்தாள்.

“என்ன ஒன்னும் தெரியாத மாதிரி முழிக்கிற? ஒழுங்கா யார லவ் பண்றனு சொல்லு… உன்ன விட்டுட்றோம்” – அப்போதும் கூட அவர்களின் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்.

அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“அண்ணா! நான் சத்தியமா யாரையும் லவ் பண்லண்ணா… செகண்ட் இயர் அக்காங்க தான் உங்க மூனு பேர்கிட்டையும் ‘ஐ லவ் யூ’ சொல்ல சொல்லி ராகிங் பண்ணாங்க… நான் மாட்டேன்னுதான் சொன்னேன் நாளைக்கு வந்து சாரி சொல்லிக்க இன்னைக்கு சொல்லிட்டு வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க அதனாலதான்…”

அவள் அண்ணா என்றது மட்டும்தான் அவர்கள் காதில் முழுவதுமாக விழுந்தது. மீதியெல்லாம் அரைகுறையாகதான் கேட்டது.

“ஏய் இப்ப எதுக்கு அண்ணாங்கற? ஒழுங்கா சீனியர மரியாதையா சார்னு கூப்பிடனும்னு தெரியாதா?”

“சாரி சார் தெரியாம சொல்லிட்டேன்…நான் இன்னைக்கு உங்ககிட்ட இத சொல்லிட்டேன்னு அந்த அக்காகிட்ட சொல்லிடாதீங்க ” பயத்தோடு பார்த்தாள்.

“யார் உங்கிட்ட ராகிங் பண்ணது?”

அவள் சொல்லலாமாக் கூடாதா என்று யோசித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

“சரி விடு நாங்களேப் பாத்துக்கறோம்”

“சார் நானே சொல்லிட்றேன் ஆனா நாளைக்கு சாயங்கலம்தான் நான் உங்க கிட்ட சாரி கேட்டேன்னு சொல்லுங்க… காலையிலேயே சொல்லாதீங்க ப்ளீஸ்… ப்ரியாக்காவும், உமாக்காவும்தான் சொன்னாங்க”

“ஓ அவளுங்கதானா? சரி சரி நாங்க பாத்துக்கறோம்”

வண்டியை ஸ்டார்ட் செய்யப் போகும்போது அவள் கேட்டாள் “ அந்த அக்காங்க ,உங்க மூனு பேர்கிட்டவும் “ஐ லவ் யூ” சொல்ல சொன்னாங்க… மாமா சார் எப்ப வருவாங்க?”

அவள் மாமா சார் என்றதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “நைட்டு வந்துடுவான், நாளளக்கு மறக்காம சொல்லிடு” என்று கூறிவிட்டுக் கிளம்பி விட்டார்கள். போகும்போது சுரேஷ் சொன்னான் “மாமா பாவம்டா… வீடெல்லாம் கண்டுபுடிச்சு ரொம்பதான் அலஞ்சான்… அநியாயமா பல்பாகப் போகுது”

அன்று இரவு 10 மணிக்கு மாமா ஊரிலிருந்து வந்தான். அம்மா நினைப்பு இன்னும் இருக்கும்போல இருந்தது ஒரு மாதிரி மூடவுட்டாக இருந்தவன் “டேய் வாங்கடா தண்ணியடிக்கப் போலாம்… எனக்கு தண்ணியடிக்கனும் போல இருக்கு”

ஏற்கனவே நொந்து போயிருந்த இருவரும் உடனேக் கிளம்பினார்கள். வழக்கம்போல இல்லாமல் அன்று அமைதியாகவே இரண்டு ரவுண்ட் போயிருந்தது. கொஞ்சம் போதையேறியவுடனே சுரேஷ் சொன்னான் “மாமா நாம சீக்கிரமே அடுத்த வீடு தேடனும் போல இருக்கு” என்று ஆரம்பித்து மொத்தத்தையும் உளறி முடித்தவன் கடைசியாக சொன்னான் – “மாமா சார் நாளைக்கு உங்களுக்கும் பல்பு வெயிட்டிங் சார்”

அடுத்த நாள் காலை இண்டெர்வெலில் இளவரசி க்ளாசுக்குப் போன மாமா அவளை வெளியேக் கூப்பிட்டு கேண்டினுக்கு வந்தான். அவள் பயந்து கொண்டே வந்தவள் முதலில் சாரி சொன்னாள். அவன் எதுவும் சொல்லாமல் இரண்டு டீ வாங்கிக் கொண்டு வந்தான். மாமா கேண்டினில் டீ குடிக்க வந்திருப்பதையும் அதுவும் ஒரு பெண்ணோடு வந்திருப்பதையும் அவனுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவள் என்ன செய்வது என்று தெரியாமல் டீயை மட்டும் குடித்துக் கொண்டிருந்தாள். அவள் டீயைக்குடித்து முடித்ததும் சொன்னான் “நான் உன்னக் காதலிக்கிறேன்… உன்னதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன்… நான் காலேஜ் முடிக்கிறதுக்குள்ள பதில் சொல்லு… இன்னும் ரெண்டு வருசம் டைம் இருக்கு… பை” சொன்னதும் எழுந்து வந்து விட்டான். அவளுக்கு குடித்த டீயெல்லாம் வெளியே வந்து விடும் போல இருந்தது.

இது நடந்து ஒரு செமஸ்டர் முடிந்திருந்தது. விஜயும், சுரேஷும் அந்த இரண்டாமாண்டு மாணவிகளை மிரட்டப் போய்க் கடைசியில் அது கடலையில் முடிந்தது. இப்போதெல்லாம் விஜய், சுரேஷ், ப்ரியா, உமா நால்வரும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் இப்போது தம்மடிப்பதுமில்லை. கேட்டால் ப்ரியாவிடமும், உமாவிடமும் சத்தியம் செய்துவிட்டார்களாம். தங்களுக்கும் கேர்ள்ப்ரெண்ட் கிடைத்துவிட்ட சந்தோசம் அவர்களுக்கு. மாமா இளாவிடம் எதுவுமேப் பேசுவதில்லை. பார்ப்பதோடு சரி. ப்ரியாவிடம் ஒரு நாள் கடலைக்கு எந்த மேட்டரும் இல்லாததால், மூன்று பேரும் முதலில் பள்ளிக்கூடத்தில் இளாவைப் பார்த்தது, அப்புறம் அவள் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு வாடகைக்கு வீடு பிடித்தது என்ற எல்லாக்கதையையும், சொல்லிவிட்டான் விஜய். அதையெல்லாம் ஒருநாள் ப்ரியாவும் இளாவிடமே சொல்லிவிட்டாள். இளா சொன்னது இதுதான் :

“க்கா…இந்த மாதிரி பார்த்தவுடனே வர்ற லவ்வெல்லாம் சினிமாவுல மட்டும்தான் நடக்கும். என்னப் பொருத்த வரைக்கும் அது லவ்வும் கிடையாது. இன்னைக்கு பார்த்தவுடனே என்னப் பிடிச்சிருக்குன்னு சொன்னா இன்னும் கொஞ்ச நாள்ல வேற யாரையாவது பிடிக்கலாம். மொதல்ல அவர எல்லார்கிட்டையும் சகஜமாப் பழக சொல்லுங்க… அப்பவாவது எல்லாத்தையும் சரியாப் புரிஞ்சுக்குவார்னு நெனைக்கிறேன்”

“இல்லப்பா அவர் உன்ன சீரியசாவே லவ் பண்றார், நிஜமா!”

சிரித்துவிட்டு இளா சொன்னாள், “இது லவ் கிடையாதுங்க்கா. வேணும்னா இன்னும் ரெண்டே மாசத்துல அவராவே என்ன லவ் பண்ணலன்னு சொல்ல வைக்கவா?”

இளாவைப் பொருத்தவரை மாமாவுக்குத் தன் மேல் இருப்பது காதல் இல்லை வெறும் இனக்கவர்ச்சி மட்டும்தான் என்று நம்பினாள். எப்படியாவது அதை அந்த நான்கு பேருக்கும் புரிய வைத்து விட வேண்டுமென்றும் தானும் இந்தத் தொல்லையிலிருந்து விடுபடவேண்டுமென்றும் முடிவு செய்தவள் எப்படி செய்வதென யோசித்தாள். முதலில் வேறொரு பெண்ணுடையப் பெயரில் ஒரு ஈ மெயில் ஐ டி உருவாக்கினாள். ( ஒரு டிஸ்கி : ஒருவரே வெவ்வேறு பெயரில் இரண்டு ஐ டி களா? என்று சமீபத்தில் நடந்த வலைப்பதிவு கூத்தெல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது அதற்கு முன்பே எழுதப்பட்டு சேமிக்கப் பட்டது.) அந்த ஐ டி யில் இருந்து மாமாவுக்கு மெயில் அனுப்பினாள். தான் ஒரு கல்லூரி விழாவின் போது அவன் கவிதைகளை வாசிக்க நேர்ந்ததாகவும், அவன் கவிதைகள் அருமையாக இருப்பதாகவும் பாராட்டி ஒரு பெரிய மெயில் அனுப்பியிருந்தாள். அந்த ஐ டி மூலமாகவே அவனுக்கு அடிக்கடி மெயில் அனுப்ப ஆரம்பித்தாள். எல்லா மெயிலுக்கும் மாமாவும் கண்டிப்பாக ஒரு ரிப்லையாவது அனுப்பிவிடுவான். அது பிறகு சாட்டிங்காகப் போய்க்கொண்டிருந்தது. தனக்கு எது பிடிக்கும், தன்னுடைய ரசனையெல்லாம் என்ன என்பது போல இவள் பேச தனக்கும் பெரும்பாலும் அதே மாதிரியான ரசனைகள் தான் என அவன் ஆச்சர்யப்பட, இனிமையாகப் போய்க்கொடிருந்தது அந்த சாட்டிங். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இப்படி சாட்டிங்கில் மட்டும் பேசிக்கொண்டிருந்த இளா ஒருநாள் அதை முடிவுக்கு கொண்டு வர நினைத்து ப்ரியாவையும், உமாவையும் கூப்பிட்டு எல்லாவற்றையும் சொன்னாள்.

“இப்படி எங்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசறாரே, இப்ப இந்த ஐ டி ல இருந்து நான் ஐ லவ் யூ னு சொன்னா அடுத்த நொடியே “மி ட்டூ” னு தான் ரிப்லை வரும். அவருக்கு இருக்கிறது பொண்ணுங்ககிட்ட பேச முடியலையேங்கற ஏக்கம். பக்கத்து வீட்டுல இருந்து பேசிப்பழகினா லவ் வந்துடும்னு முட்டாள்தனமா யோசிச்சிருக்கார். அவரப் போய் சீரியசா லவ் பண்றார்னு சொல்றீங்களேக்கா?”

அமைதியாக இருந்தார்கள் இருவரும். ” சரி நீ ச்சும்மா ஐ லவ் யூ னு அனுப்பிப் பாரு என்ன சொல்றாருன்னுப் பார்க்கலாம்” – உமா.

மாமா ஆன்லைனில் வந்ததும் அவனுக்கு இளா ஒரு மெயிலே அனுப்பினாள். தன்னுடைய ரசனைகளும் அவனுடைய ரசனைகளும் ஒத்திருப்பதாகவும் இருவரும் இணைந்து வாழ சரியான ஜோடியாக இருப்பதாக அவள் உணர்வதாகவும் இன்னும் என்னென்னவோ எழுதி கடைசியாக அவன் சம்மதம் சொன்னால் அவனை சந்திப்பதாகவும் இல்லையென்றால் மெயில் தொடர்பையும் நிறுத்திக் கொள்வதாகவும் எழுதி அனுப்பினாள்.

மறுநிமிடமே பதில் வந்தது.

“மன்னிக்கனும்.உங்களப் பத்தி நீங்களா சொன்ன விசயங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும், நீங்க யார்னுகூட எனக்குத் தெரியாது. இந்த மாதிரி ஒரு மெயில் உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல. இன்னொரு விசயம், நான் ஏற்கனவே ஒரு பொண்ணக் காதலிச்சுட்டு இருக்கேன். அந்தப் பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இதுவரைக்கும் உங்க கிட்ட மெயில்ல பேசினதுல எதாவது தப்பா பேசியிருந்தா மறுபடியும் என்ன மன்னிச்சுடுங்க”

அதைப் படித்ததும் இளாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ப்ரியா பேசினாள், “இங்கப் பாரு இளா… அன்னைக்கு நீ சொன்ன மாதிரி பார்த்தவுடனே வர்றது எல்லாம் காதல் கிடையாதுதான் ஆனா இந்த ஐ டி பொய்யா இருந்தாலும் இந்த ஐ டி மூலமா மாமா கிட்ட நீ சொல்லியிருக்கிற கேரக்டர்ஸ் எல்லாமே உன்னோடதுதான்! உனக்கும் மாமாவுக்கும் ஒரே மாதிரி வேவ் லெந்த் தான் இருக்குன்றது இப்ப உனக்கேப் புரிஞ்சிருக்கும்”

“பொதுவா வெளிய பார்த்தா சாஃப்டா இருக்கிற எல்லாருமே நல்லவங்களும் இல்ல… முரட்டுத் தனமா இருக்கிற எல்லாருமே மோசமானவங்களும் இல்ல… மாமாவப் பத்தி சுரேஷும், விஜயும் சொன்னத வச்சு சொல்றேன் கண்டிப்பா மாமா ஒரு நல்ல பார்டனரா இருப்பார்… இதுக்கு மேல உன்னோட முடிவு” – உமா

“க்கா நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருந்தாக்கூட எங்க வீட்டு நிலமைல லவ் பண்றதெல்லாம் நெனச்சுக் கூட பாக்க முடியாதுங்க்கா.. ஏதோ எங்கப்பா பென்ஷன்ல தான் போயிக்கிட்டிருக்கு… எனக்கு மெரிட்ல சீட் கிடைச்சதாலதான் காலேஜ்க்கே வர்றேன் இல்லனா நானும் எதாவது டெய்லரிங், டெக்ஸ்க்குனுதான் வேலைக்குப் போயிருப்பேன்… நல்லக் குடும்பத்துலையே லவ் பண்ணா எவ்வளவு பிரச்சினையாகுது? நான் லவ் பண்ணா, அப்பா இல்லாதப் பொண்ண வளர்க்க தெரியலன்னு எங்கம்மாவதான் எங்க சொந்தக்காரங்க எல்லாம் திட்டுவாங்க… எனக்காக எதுக்கு மத்தவங்க கஷ்டப்படணும்… தயவு செஞ்சு அவங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி சொல்ல சொல்லுங்க” – தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று அவள் செய்தது மேலும் பிரச்சினையில் முடிந்ததால், கலங்கியக் கண்களோடு போய் விட்டாள்.

அதற்குப் பிறகு இளாவுக்கும், மாமாவுக்கும் ஒரு தகவல் தொடர்பு வழியாக விஜய், சுரேஷ், ப்ரியா, உமா இருந்தார்கள். அவள் இதெல்லாம் வேண்டாமென்பதில் பிடிவாதமாக இருக்க அவனோ அவளைத் தான் காதலிப்பதில் பிடிவாதமாக இருந்தான். ஒரு ஜாலிக்காக ஆரம்பித்துக் கடைசியில் மாமா இவ்வளவுப் பிடிவாதமாக இருப்பது சுரேஷுக்கும், விஜய்க்குமே ஆச்சரியமாக இருந்தது.

“மாமா… அந்தப் பொண்ணு அழுவுதாண்டா… விட்றுவோமே எதுக்கு இப்படி அழவச்சுப் பாக்கனும்?”

“டேய் நான் இளாவ எதுவும் டிஸ்டர்ப் பண்ணலையே… நான் ரெண்டு வருசம் கழிச்சு சொல்லுப் போதும்னுதான் சொல்லியிருக்கேன்… அவ இப்ப சொல்றத ரெண்டு வருசம் கழிச்சு சொல்லட்டும் பார்க்கலாம்”

அதற்குப் பிறகு இளாவைப் பற்றி மாமாவிடம் யாரும் பேசுவதில்லை, மாமாவின் மனதைத் தவிர. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓடியிருந்தன.

எப்போதாவது கேன்ட்டினில் உமாவும், ப்ரியாவும் இளாவிடம் சாதாரணமாகப் பேசுவதோடு சரி. அன்றும் அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது இளா கேட்டாள் “ க்கா உங்க க்ளாஸ் சுந்தரண்ணா கூட ரொம்ப நல்லாக் கவிதையெழுதுவாரா? ஹாஸ்டல் புக்ல அவர் கவிதைதான் நெறைய வந்திருக்கு”

“அதுக்கு தமிழ்ல அதோட பேரே தப்பில்லாம எழுதத் தெரியாது.. அது கவிதையெழுதுதா? அதுவும் காதல் கவிதை” உமா, ப்ரியா இருவரும் சிரித்தார்கள்.

“இல்லங்க்கா அவர் பேர்ல தான் வந்திருக்கு”

“சரி அது யார் எழுதினதுன்னு சொல்றோம்… அதுக்கு முன்னாடி நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு… காதலிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப காதல் கவிதையெல்லாம் படிக்கிற?”

“ஏங்க்கா காதலிக்காதவங்க எல்லாம் கவிதை கூடப் படிக்கக் கூடாதா? லைஃப்ல தான் சான்ஸ் இல்ல கத, கவிதையிலயாவது படிச்சுக்கலாமேன்னுதான்… சரி அது யார் எழுதனது? நீங்களா?”

“அது எல்லாமே மாமா எழுதினதுதான்… அவர் இப்போ ஹாஸ்டல் கிடையாதுல்ல அதான் இவன் பேர்ல எழுதிப் போட்டிருக்கார்… இவன்தான் இப்போ மாமாகூட தம்முக்குக் கம்பெனிக் கொடுக்கறான்ல அந்தப்பாசம்”

அன்று மாலை லைப்ரரி போனவள் சுந்தர் பெயரில் வந்திருந்த எல்லாக் கவிதைகளையும் மீண்டுமொருமுறை வாசித்தாள்.

அந்த வருடம் கல்லூரியில் நடந்த தமிழ்மன்றக் கவிதைப் போட்டியில் மாமாவின் காதல் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசு வழங்கும் நாளில் மேடையில் அவனேக் கவிதையை வாசிக்கும் வாய்ப்பு. அவள் வரவேண்டுமே என்று அவனுக்கு துடித்துக் கொண்டிருந்தது. அவளும் வந்திருந்தாள். பார்த்துப் படிப்பதற்கு கையில் கவிதை பிரிண்டவுட்டாக இருந்தாலும் மேடையில் நின்று அவளை மட்டுமேப் பார்த்துக் கவிதையை பிழையில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னை மட்டுமே அவன் பார்த்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது, நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்,

நீ கடிக்க கடிக்க வளர்ந்து கொண்டே இருக்கிறதே

உன் நாவின் சுவையை ருசித்து விட்டதோ

உன் நகம்.

பிரிண்டவுட்டில் இல்லாததும் கவிதையாக வந்தது அவனுக்கு. வாயிலிருந்து நகத்தை வேகமாக எடுத்தவள், கீழே குனிந்து கொண்டாள். அவன் கவிதையை முடிக்கும்போது இப்படி முடித்தான்

உன் காதல் எனக்கு

உயிர் போல…

அளிப்பாயா?அழிப்பாயா?

எல்லாரும் கைதட்டினார்கள் அவளைத் தவிர.

மாமாவின் கவிதைகளில் இப்போதெல்லாம் காதல் அதிகம் கலந்திருப்பதற்கு யார் காரணமெனக் கல்லூரியில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. இளவரசிக்கு மாமி என்ற பெயரும் முளைத்தது. இரண்டு பேருக்கிடையே எதுவுமே இல்லையென்றாலும் அவர்களைப் பற்றி பேசி பேசியே எதையாவது உண்டாக்கிவிடும் கல்லூரி நண்பர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அதுவும் மாமா ஒரு தலையாக் காதலிக்கிறான் என்பது தெரிந்ததும் இளாவிடம் அவள் தோழிகளின் அட்டகாசம் அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருந்தது. இளாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் மாமாவைப் பற்றிய ஆர்வம் அதிகமாகியிருந்தது.

அப்போதுதான் அவர்கள் வீட்டருகில் புதிதாக ஒரு கிளை நூலகம் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. இளா சனி ஞாயிறெல்லாம் அங்கே போய் எதாவது படித்துக் கொண்டிருப்பாள். மாமாவும் போவான். ஆனால், அவள் இருப்பது தெரிந்தால் தானும் அங்கிருப்பது அவளுக்கு சங்க்டமாக இருக்குமோ என்று சீக்கிரமேத் திரும்பி விடுவான். ஒருநாள் அவள், சுட்டி விகடனை எடுத்துக் கொண்டு ரெஜிஸ்டரில் எழுதும்போது லைப்ரரியன் கேட்டார் “என்னம்மா கொழந்தைங்க புக்கெல்லாம் நீ படிக்கிற?”. அடிக்கடி லைப்ரரி போவதால் அவருக்கும் அவளைத் தெரியும்.

“ஏன் சார்? கொழந்தைங்க புக்கெல்லாம் கொழந்தைங்க மட்டும்தான் படிக்கனுமா? பின்னாடி என்னோட கொழந்தைக்கு சொல்றதுக்கு ஒரு கதையாவது தெரிஞ்சுக்கனுமில்ல?” சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“இன்னைக்கு எல்லாருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல… அங்கொரு பையன் பொண்ணுங்க புக்க எடுத்துப் படிச்சுட்டு இருக்கான்… கேட்டா, பொண்ணுங்க பிரச்சினையெல்லாம் தெரிஞ்சிகிட்டாதான சார் நாளைக்கு ஒரு நல்ல ஹஸ்பெண்டா இருக்க முடியும்னு என்னையவே கேட்கறான்.. ம்ஹும்”

கையெழுத்து போடும்போது பார்த்தாள் அவள் விகடனுக்கு நேராக மாமாவின் கையெழுத்து இருந்தது. அவசரமாக சுற்றிலும் பார்த்தாள். ஒரு மூலை சேரில் அவள் வந்ததையும் கவனிக்காமல் மாமா சீரியசாக ‘அவள் விகடன்’ படித்துக் கொண்டிருந்தான்.

அன்று கேண்டீனில் கூட்டம் அதிகமில்லை. ப்ரியாவும், இளாவும் டீக்குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக ஓடி வந்த சுரேஷ் “ப்ரியா, மாமா பைக்ல போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு… தலைல நல்ல அடியாம் KMCHல அட்மிட் பண்ணிட்டாங்களாம், கிளம்பு போலாம்”. அவர்களோடு இளாவும் அவசரமாகக் கிளம்பினாள்.

நிறைவுப் பகுதி

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

.... இங்கே பதியப்பட்டது அருட்பெருங்கோ | 12 மறுமொழிகள் »

மாமாவின் காதல் – 2

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 9, 2007

மாமாவின் காதல் – 1


அடுத்த நாள் கல்லூரி முடியுமுன்பே வந்தவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு முன் வந்து நின்றார்கள். அவர்களைப் போலவே இன்னும் சில கல்லூரிக்காளைகள் வெளியேக் காத்திருக்க,
விஜய் கேட்டான்,

“என்ன மாமா டாஸ்மாக்ல நாமப் பேசிக்கிட்டுருந்தத இவனுங்களும் ஒட்டுக் கேட்டுட்டானுங்களா?”

“டேய் அல்ப்ப… அவனுங்களாம் நம்மள மாதிரி ஒத்த பைக்ல மூனு பேராவா வந்திருக்காங்க? எல்லாம் தனித்தனியா வந்திருக்காங்க பாரு… நமக்கு சீனியருங்க… ஆல்ரெடி பொண்ணப் பிக்கப் பண்ணவங்க.. பார்ட்டிக்காக வெயிட்டிங்!”

“சரி சரி ஸ்கூல் விட்டாச்சுப் போல இருக்கு…சீக்கிரம் பொண்ண செலக்ட் பண்ணுங்க… நானும் பாக்கறேன்”

வெளியே வரும் பள்ளிக்கூடப் பெண்களையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“மாமா… ந்தா அந்தப் பொண்ணு செவப்பு கலர் பேக் வச்சிருக்குப் பாரு” – சுரேஷ்

“எது அதுவா அந்த சப்ப மூக்கா? போடா நீயும் உன் டேஸ்டும்… அங்கப் பாரு மூனுப் பொண்ணுங்க சேர்ந்து வர்றாங்கப் பாரு அதுல நடுவுல வர்றது ஓக்கேவா?” – விஜய்.

“டேய் டேய் அங்கப் பொடவைல ஒரு பொண்ணு வருதே அது நல்லாருக்கா? இன்னைக்கு பொறந்தநாளா இருக்குமோ? கருப்பா இருந்தாலும் கலையா இருக்குடா இப்பவே போய்ப் பேசிட்டு வரட்டுமா?” – மாமா.

“மாமா கண்ட்ரோல் கண்ட்ரோல் அது டீச்சர் மாதிரி இருக்கு”

அந்த வாரம் முழுக்க மூன்று பேருக்கும் பிடித்த மாதிரியான ஒரு பொண்ணைத் தேடிக் கொண்டேயிருந்தார்கள்.

அடுத்து வந்த இரண்டு சனிக்கிழமையும் தேடல் படலத்தில் நடந்ததை அசைபோட்ட படியே டாஸ்மாக்கில் கழிந்தது.

ஒரு திங்கட்கிழமை கல்லூரி முடிந்ததும் டீக்கடைக்கு வந்தார்கள் மூன்று பேரும்.

“சீக்கிரம் டீயக் குடிச்சு முடிங்கடா ஸ்கூல் விட்ற நேரமாச்சு”

“மாமா இந்த வாரத்தோட நிறுத்திக்குவோம்… அடுத்த வாரம் ஸ்டடி ஹாலிடேஸ் விடப் போறாங்க… அப்புறம் செம் வந்துடும்…”

“ஓக்கே ஓக்கே இந்த வாரம் தான் ஃபைனல்… கொஞ்சம் சீரியசாகத் தேடுவோம்”

டீயை முடித்து விட்டு பள்ளிக்கூட வாசலுக்கு வந்தார்கள்.

அவர்கள் வருவதற்கு முன்பே பல்ளிக்கூடம் விட்டு எல்லாப் பெண்களும் போயிருக்க வாசல் வெறிச்சோடி இருந்தது.

“இன்னைக்கு லேட்டா வந்துட்டமோ? எல்லாக் கிளியும் பறந்துடுச்சு” – மாமா.

“இல்ல மாமா ஒன்னோட டீச்சர் கிளி வருது பாரு , அநேகமா ஒனக்கு மட்டும் அந்த டீச்சர் செட்டாயிடும் போல இருக்கு…” – சுரேஷ்

“டேய் டேய் டீச்சர் பின்னாடி ஒரு சின்னக் கிளி வருது பாரு அத ஃபோகஸ் பண்ணுடா” – விஜய்.

விஜய் சொன்ன அந்தப் பெண்னை மாமா நன்றாக ஒருமுறை உற்றுப் பார்த்தான்.

“மாமா, பொண்ணு நல்லாதான் இருக்கு எனக்கு ஓக்கே”

“இப்பவே ஃபாலோ பண்ணுவோம்டா ஹோம்லி ஃபிகரா இருக்கு”

சுரேஷும் விஜயும் பேசுவதையெல்லாம் கவனிக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மாமா.

“மாமா பொண்ணப் பார்த்தது போதும்! பொண்ண ஃபாலோப் பண்ணாதான் வீட்டக் கண்டுபிடிக்க முடியும்… டக்குனு பைக்க ஸ்டார்ட் பண்ணு”

பைக்கில் அவள் சைக்கிளை மிக மிக மெதுவாகத் தொடர்ந்துபோய் அவள் வீட்டை நெருங்கினார்கள்.

அது கிட்டத்தட்ட அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான வீடுதான். கீழே ஒரு பெரிய வீடும், ஒரு சிறிய வீடும் இருந்த ஒரு காம்பவுண்ட். மேலே ஒரே ஒரு ரூம் மட்டும் இருந்தது. பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்குப் போன மாமா, அங்கே வீடெதுவும் வாடகைக்கு கிடைக்குமா என்று விசாரித்தான். வீடெதுவும் காலி இல்லையென்றாலும் அங்கேக் கிடைத்த தகவலின்படி அந்த மொட்டை மாடி ரூமில் இப்போது நான்கு பேச்சிலர்கள் தான் வசிக்கிறார்கள் என்று தெரிந்தது. எதற்கும் முயற்சி செய்வோம் என்று அந்த வீட்டுக்குள்ளே நுழைந்தான்.

எதிரே வந்த அம்மாவிடம், பவ்யமாகக் கேட்டான் “ஏங்க இங்க ரூம் எதுவும் வாடகைக்கு கிடைக்குமா?”

“நீ என்னப் பண்றப்பா? வேலைக்குப் போறியா? படிக்கிறியா?”

அந்த அம்மாவிடம் எல்லாத் தகவலையும், சொல்லி/கேட்டு விட்டு மேலே இருந்த தனி ரூமுக்கும் போய்விட்டு வெளியே வருவதற்கு 15 நிமிடம் ஆகியிருந்தது.

“மாமா என்ன ஆச்சு?”

“வாங்கடா டீக்கடைக்குப் போய்ப் பேசுவோம்” வண்டியை ஸ்டார்ட் செய்து வழக்கமான டீக்கடைக்கு கிளம்பினார்கள்.

டீக்கடையில் தம்மைப் பற்ற வைத்து விட்டு சிரித்துக் கொண்டே சொன்னான், “வீடு செட் ஆயிடுச்சு, இனிமே பொண்ணு செட் ஆகறது அவனவன் தெறமையப் பொருத்து இருக்கு”

“என்ன மாமா சொல்ற? வீடு காலி இல்லைனு சொன்னாங்கன்ன…”

“அந்த மொட்ட மாடி ரூம்ல இப்பவே நாலு காலேஜ் பசங்க தான் இருக்கானுங்க… இப்ப ஃபைனல் இயர் முடிச்சுட்டுப் போறாங்களாம்…அதனால அடுத்த மாசம் நாம அங்கப் போயிடலாம்… அப்புறம் அங்க தம் , தண்ணியடிக்கிறப் பசங்களுக்கு எல்லாம் ரூம் தர மாட்டங்களாம்… நான் நாமலாம் உத்தமனுங்க மாதிரி ஆக்ட் கொடுத்து வச்சிருக்கேன்… வீட்ட காலி பண்ற மாதிரி அங்க வச்சி எதாவது பண்ணா அப்புறம் பொண்ண மிஸ் பண்ணிடுவோம் இப்பவே சொல்லிட்டேன்”

“சரி சரி அங்க இருக்கும்போது மட்டும் கமுக்கமா இருந்துப்போம்… அப்பதான் பொண்ணும் நம்மளப் பார்க்கும்… மாமாப் பொண்ணப் பத்தி எதாவது தகவல்?”

“அதாண்டா… அந்தப் பொண்ணு வீடும் வாடகைக்குதான் குடியிருக்காங்க…அவங்கப்பா இல்ல போல… அம்மா மட்டும்தான்… ஒரு தம்பி இருக்கான்… நைன்த் முடிச்சு டென்த் போறான்…”

“ மாமா பத்து நிமிஷத்துல இவ்வளவு மேட்டர் கறந்துட்டு வந்திருக்க? அப்பா இல்லாத பொண்ணா? எனக்கென்னமோ மடங்கற மாதிரி தெரியல …ம்ஹும்… ஆனா பொண்ணத் தவிர மத்த டீட்டெயில் தான் தர்ற” சலித்துக் கொண்டான் சுரேஷ்.

“சரி இந்தவாரம் டாஸ்மாக்கு நீ செலவு பண்றியா? பொண்ணு பேர் சொல்றேன்…”

“சரி சொல்லு” மெதுவாக சொன்னான்.

“பொண்ணு பேரு இளவரசியாம். +1 முடிச்சுட்டு +2 போகுது”

“அப்ப இந்த வருசம் ஃபுல்லா படிச்சுக்கிட்டே இல்ல இருப்பா? எப்படி பிக்கப் பண்றதாம்?”

“அதெல்லாம் அடுத்த வருசம் வந்து பாத்துக்கலாம்… ரூமுக்கு அட்வான்ஸ் 5000 வாடகை 1800 ரூபாயாம்… உங்கப் பங்க சீக்கிரம் கொடுத்துடுங்க… அட்வான்ஸ கொடுத்து புக் பண்ணிடுவோம்”

பொண்ணும் வீடும் கிடைத்த(?) திருப்தியில் அந்த சனிக்கிழமை இரவு அவர்களுக்கு சந்தோசமாய்க் கழிந்தது.

செமஸ்டர் தேர்வுக்குமுன் கல்லூரி ஒரு வாரம் விடுமுறை விட்டார்கள். படிப்பதற்காக விட்ட விடுமுறையெல்லாம் பள்ளியின் வாசலிலேயே தீர்ந்து போனது. எப்பொழுதுதான் செமஸ்டர் முடியுமோ என்று காத்திருந்தார்கள். செமஸ்டர் முடிந்து எல்லோரும் ஊருக்குப் போய் விட, விடுதியிலேயே இருந்தது இவர்கள் மட்டும் தான். அந்த மாடி ரூமில் இருக்கும் நால்வரும் காலி செய்ததும் அங்கே போய் செட்டிலானபின் தான் ஊருக்குப் போவது என்ற முடிவில் இருந்தார்கள். கடைசியில் ஒருவழியாக அங்கு புது வீட்டில் குடியேறிவிட்டுதான் மூவரும் ஊருக்குக் கிளம்பிப் போனார்கள்.

அடுத்த வருடம் ஆரம்பமானது.

ஊரிலிருந்து நேராக புது வீட்டுக்கு வந்தவர்கள் முகத்தில் முதல்வருடம் தேர்வு ரிசல்ட் பற்றிய சந்தோசம் பல்லெல்லாம் வாயாகக் காணப்பட்டது.

“மாமா நல்லவேளை மூனு பேருக்கும் கப் எதுவும் விழல… நான் உனக்கு ரெண்டுலையாவது கப் வரும்னு நெனச்சேன்”. ( கப் = அரியர் )

“வாயக் கழுவுடா நாயே… நான் +2 ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் தெரியுமில்ல?”

“அடப்பாவிகளா… ஆல் பாஸ் ஆனதுல நம்ம மூனு பேரோட மார்க் தாண்டா பாட்டம் 3 ல இருக்கு! இதுல பெரும வேற”

“சரி இந்த செம்ல படிக்கிறோம்! டாப் 3 ல வர்றோம்!”

“ஏண்டா இப்போ காமெடி பண்ணிக்கிட்டு இருக்க? கப் வாங்காம “ஆல்பாஸ்” ஆகறதையே மெயிண்டெயின் பண்ணுவோம் அதுவேப் பெரிய விசயம்”

“சரி சரி நான் நம்ம இளா எப்படி இருக்கானு பாத்துட்டு வர்றேன்” கிழே எட்டிப் பார்க்கப் போனான் விஜய்.

“டேய் இன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துடலாம்… அவளக் கொஞ்சறதெல்லாம் மனசுக்குள்ளயே வச்சுக்குங்க… நாளைக்கு எவனோ ஒருத்தனுக்குதான் அவ கிடைக்கப் போறா… அப்புறம் இப்பப் பேசறத எல்லாம் நெனச்சுப் பார்த்தா அந்த ஒருத்தன் ரொம்ப ஃபீல் பண்ணுவான்” மாமா ஏனோக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான்.

“சரி சரி ஓக்கே ஒக்கே பிக்கப் ஆயிடுச்சுன்னா ஒடனே சொல்லிடனும்… அதுதான் நல்லது… எவனுக்கு பிக்கப் ஆகுதோ அவன் தான் காலேஜ் முடியற வரைக்கும் தம்மு செலவப் பாத்துக்கணும்… பிக்கப் ஆகறதுக்கு முன்னாடியே பிக்கப் ஆயிடுச்சுன்னு பிலிம் காட்டினாலோ… பிக்கப் பன்ணிட்டு கமுக்கமா இருந்தாலோ மகனே கொலதான்” – சுரேஷ்.

இளாவைத் திரும்பிப் பார்க்க வைக்க, அவளிடம் பேச, அவளைக் கவர இருமுனை முயற்சிகள் ஆரம்பமாயின.விஜய் கொஞ்சமாய் நூல் விட்டுக் கொண்டிருந்தான்.சுரேஷ் மீட்டர் மீட்டராய் கயிறே விட்டுக் கொண்டிருந்தான். அவள் எதற்கும் மசியவில்லை.

மாமா எப்படி ஆரம்பிப்பது என்று ஆறு மாதங்களாய் அமைதியாய் யோசித்துக் கொண்டேயிருந்தான். இது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, கல்லூரியில் இவர்கள் இப்போது சீனியர் ஆகிவிட்டதால் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் போட இவர்களின் பெருமை எல்லா துறையிலும் தெரிய ஆரம்பித்தது. அந்த செமஸ்டரில் வாரத்துக்கு ஒருநாள் முழுவதும் கல்லூரிக்குள்ளேயே இருக்கும் தொழிற்சாலைக்குள் தொழிற்பயிற்சி இருக்கும். காலையில் போனால் மதியம் தான் வெளியே விடுவார்கள். 10:30 மணிக்கு ஒரு தம் அடிக்காமல் மாமாவால் இருக்க முடியாது என்பதால் அந்த பயிற்சிவகுப்புக்கு போகும்போது தொழிற்சாலைக்குள்ளேயே சிகரெட் எடுத்துக் கொண்டு போய் உள்ளேயே மறைவில் தம்மடிக்க ஆரம்பித்திருந்தான். அவன் பாக்கெட்டில் சிகரெட் இருந்ததை ஒருமுறை செக்யூரிட்டி ஆட்கள் பார்த்துவிட்டு HOD யிடம் சொல்லிவிட முதல்முறை 3 நாட்கள் சஸ்பெண்ட் ஆனான். ஒரு பிரச்சினையில் சுரேஷும், விஜயும் இன்னொரு துறை மாணவனை அடித்த விசயம் தெரியவந்து அவர்களும் ஒரு வாரம் சஸ்பெண்ட் ஆனார்கள். பயிற்சி நாட்களில் தம்மடிக்க முடியாமல் போனதால் உள்ளே இருக்கும் லேபர்களிடம் சிகரெட் கடன் வாங்கி அவர்களோடு பாத்ரூமில் புகைக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் அடிவாங்கிய மாணவர்கள் அதையும் போட்டுக்கொடுக்க மறுபடியும் சஸ்பெண்ட். இப்படியே ஒரு செமஸ்டர் முழுவதும் காதல்(?) வாழ்க்கை சஸ்பென்சாகவும் கல்லூரி வாழ்க்கை சஸ்பெண்டாகவும் போய்க் கொண்டிருந்தது.

நோட்டிஸ் போர்டில் இவர்கள் பெயர் மாதத்துக்கு இரண்டு முறையாவது வராமல் இருக்காது. நோட்டிஸ் போர்டில் பெயர் வந்தால் ட்ரீட், ஃபைன் கட்டினால் அதே அளவுக்கு ட்ரீட் என்று எல்லாவற்றையுமே டாஸ்மாக்கில் ட்ரீட் வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். மொத்தத்தில் கல்லூரியில் உருப்படாதது, தேறாதது, விளங்காதது என்று முத்திரை குத்தப்பட்டு பயங்கர பிரபலமாகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் மாமாவின் பெயர்தான் முதலில் இருக்கும். இத்தனைக்குப் பிறகும் மாமாவைக் கல்லூரியை விட்டு நீக்காமல் இருப்பதற்கு ஒரேக் காரணம் எங்கு கல்ச்சுரல்ஸ் போட்டிகள் நடந்தாலும் இவர்கள் கல்லூரிக்கு நாடகப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி களில் கண்டிப்பாக ஒரு பரிசு நிச்சயம். அதற்கு காரணம் மாமாதான். அவன் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான். இப்படி எல்லாத் திறமைகள் இருந்தும் கடலை போடத் தெரியாமல், பெண்களோடு கடலை போடுபவர்களை எல்லாம் கலாய்த்துக் கொண்டு இருந்தான். அதனாலேயே அவனிடம் பேசுவதற்கே பயந்து எந்தப் பெண்ணும் அவனை நெருங்குவதில்லை. அவனோடு சேர்ந்ததால் விஜய்க்கும், சுரேஷுக்கும் கூட அதே நிலைதான்.

கல்லூரியில் இப்படியெல்லாம் உதார் விட்டுக் கொண்டிருந்தாலும் வீட்டுக்கு வந்தால் மட்டும் அவர்களிடம் ஒரு மாற்றம் இருக்கும். விஜயிடம் நன்றாகவே மாற்றம் தெரிந்தது. புதிதாக ஷர்ட்டை இன் பண்ண ஆரம்பித்திருந்தான். தினமும் ஷேவ் செய்கிறான்.அவன் ஆள் பார்ப்பதற்கும் கொஞ்சம் கலராக இருப்பான். சுரேஷ் இப்போதெல்லாம் சத்தம்போட்டுதான் ப(ந)டிப்பது வழக்கம். வீட்டிலேயே அவ்வப்போது சமைப்பார்கள். அரைப்பதற்கு மிக்ஸி வாங்க கீழே ஓனர் வீட்டுக்கு சுரேஷ் தான் போவான். எல்லாம் இளாவைப் பார்ப்பதற்குதான். வீட்டிலும் அதிக மாற்றமில்லாமல் இருந்தவன் மாமா மட்டும்தான்.இளா விசயத்தில் மட்டும் மற்ற இருவருமேப் பதுங்கிக் கொண்டிருந்தார்கள் ஆனால் எப்போது பாய்வது என இருவருக்குமேத் தெரியவில்லை. மாமா அமைதியாக இருப்பது வேறு அவர்களுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. அவள் +2 முடிப்பது வரை பொறுமையாக இருப்பது என்ற முடிவில் இருந்தான் மாமா.

இடையில் வந்து போன சனிக்கிழமை இரவுகள் எல்லாம் “அவ என்னப் பாத்தாடா”, “அவ சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்காத் தெரியுமா”, “அவங்க அம்மாவே நான் நல்லப் பையன்னு ஓனரம்மாகிட்ட சொல்லியிருக்காங்க”, “அவளும் என்ன மாதிரியே சனிக்கிழமதான் தலைக்குக் குளிக்கிறாத் தெரியுமா” என்ற விஜய் + சுரேஷுடைய புலம்பல்களிலேயேப் போய்க் கொண்டிருந்தது. எவனும் முழுதாய் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. பேசாமலேயே அந்த ஆண்டும் கழிந்தது.

அடுத்த ஆண்டு தான் அதிர்ஷ்டம்/துரதிர்ஷ்டம் இரண்டுமே அவர்களுக்கு காங்கிரீட்டைப் பிளந்து கொண்டு கொட்டியது.பின்னே அவளும் அவர்கள் கல்லூரியிலேயே அதுவும் அவர்கள் துறையிலேயே முதலாமாண்டு சேரப்போகிறாள் என்பது அவர்களுக்கு சாதாரண செய்தியா?இனி எப்போதும் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறோம் என்று சந்தோசப்படுவதா? இல்லை கல்லூரியில் தங்களுக்கு இருக்கும் நல்ல(?) பெயர் அவளுக்கும் தெரியப்போகிறதே என்று துக்கப்படுவதா என்று அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் சரி நடப்பது நடக்கட்டும் முயற்சியைத் தொடருவோமென்று விஜயும் சுரேஷும் களத்தில் இறங்கி விட்டார்கள்.முதலாமாண்டு மாணவர்களுக்குக் கொடுத்த வெல்கம் பார்ட்டியில் பக்கத்து வீடு என்கிற உரிமை(?)யோடு அவளிடம் வலி(ழி)யப் போய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். அவர்களின் வேகத்தைப் பார்த்தால் மாமாவுக்கே ஆச்சர்யமாயிருந்தது. அன்றும் கூட அவனால் அவளிடம் எதுவும் பேசமுடியவில்லை.

அப்போது அவர்கள் மூன்றாமாண்டிலும் அவள் முதலாமாண்டிலும் இருந்தார்கள். வகுப்பும் பக்கம் பக்கம் தான். வீட்டில் இருந்து கல்லூரி வரை அவளையே ஃபோலோ பண்ணுவதும், மறுபடி மாலையில் அவளைக் கல்லூரியில் இருந்து வீடு வரை பின்தொடர்வதென விஜயும் சுரேஷும் அதிகளம் பண்ணிக்கொண்டிருக்க மாமா அடிக்கடி லுக் விடுவதோடு சரி. அதுவும் அவள் ஒரு முறை நிமிர்ந்துபார்த்துவிட்டால் போதும் நான்குநாட்களுக்கு அவளைப் பார்க்கமாட்டான். மாமா அவனுடைய அம்மாவுக்குத் திதி என்பதால் ஊருக்குப் போயிருந்த ஒரு திங்கட்கிழமை மதியம் இண்டெர்வெலில் தம்மடிக்கும்போது சுரேஷிடம், விஜய் சொன்னான், “டேய் நான் ஒரு விஷயம் சொன்னா ஷாக்காக மாட்டியே? ஆக்ச்சுவலா மாமா வந்ததும்தான் சொல்லனும்னு இருந்தேன். ஆனா கண்ட்ரோல் பண்ண முடியலடா… லஞ்ச் ப்ரேக்ல இளா என் கிட்ட வந்து ‘ஐ லவ் யூ’ சொன்னா.”

( அடுத்தப் பகுதி )

அழியாத அன்புடன்
அருட்பெருங்கோ.

.... இங்கே பதியப்பட்டது அருட்பெருங்கோ | 14 மறுமொழிகள் »

மாமாவின் காதல் – 1

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 6, 2007

[ தலைப்பைப் பார்த்ததும் இது ஏடாகூடமானக் கதை என்று நினைத்துவிட வேண்டாம். இதுவும் ஒரு மாதிரியான காதல் கதைதான்! ]


“பாஸ்… ஒரு டூ பை த்ரீ” – டீ மாஸ்டரிடம் ஆர்டர் சொல்லி விட்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான் விஜய்.
“டேய் விஜய்… இவன் என்னமோ சொல்றான். என்னன்னு கேளு” ,அருள் என்ன சொன்னான் என்பதைச் சொல்லாமல் பொதுவாக மட்டும் சொன்னான் சுரேஷ்.
“ என்ன மாமா… என்ன மேட்டரு” – விஜய். ( அருள் என்று அவனுக்குப் பெயர் இருந்தாலும் நண்பர்கள், சீனியர்கள், டீக்கடை மாஸ்டர், டாஸ்மாக் சர்வர் வரை அனைவருக்குமே அவன் பெயர் “மாமா” தான் )

“மொதல்ல தம்மக் கொடுத்துட்டுப் பேசுடா… வென்று” விஜயிடம் சிகரெட்டை வாங்கியவன்… “ஆங்… இப்படி ‘பட்’ ட சப்பியெடுத்துட்டா அடுத்தவன் எப்பட்றா அடிக்கிறது நாயே… உனக்கு இனிமே ப்ளாஸ்டிக்ல தான் பட் செய்யனும்”

“நீ மொதல்ல மேட்டர சொல்லு மாமே” – வாங்கிய டீயை உறிஞ்சிக் கொண்டே கேட்டான் விஜய்.

“அடுத்த வருஷம் ஹாஸ்டல காலி பண்ணிட்டு வெளிய ரூம் எடுக்கலாம்னு பாக்கறேன் என்ன சொல்றீங்க”

“மாமா… எனக்கென்னமோ இந்த வருசமே வெளங்குமோ என்னமோத் தெரியல… ஹாஸ்டல விட்டு வெளிய வந்து தங்கினா உருப்படுவமா?”

“ஆமா…மாம்ஸ் நானும் அதத்தான் சொல்றேன்… வெளியப் போனா சுத்தமா வெளங்காமப் போயிடுவோம்”

“என்னடா என்னமோ நீங்க ரெண்டு பேரும் உள்ள இருந்து மட்டும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க்கும் செகண்ட் மார்க்கும் வாங்குற மாதிரி பேசறீங்க? இதுக்கு மேல என்னத்த உருப்படாமப் போயிடுவோம்? உள்ள இருந்தா ஒரு செகண்ட் ஷோ படத்துக்குப் போக முடியுதா? மெஸ்ல சோறாடாப் போட்றானுங்க? இதெல்லாத்துக்கும் மேல முக்கியமா இன்னொருக் காரணம் இருக்கு”

“என்ன?” ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்!

“காலேஜ்ல தான் ஒரு புள்ளைகளும் நம்மக்கூடப் பேச மாட்டேங்குது. நம்மளப் பாத்தாலே தெறிச்சு ஓடுதுங்க…வெளிய வீடெடுத்து எதாவது பிக்கப் ஆகுதான்னுப் பார்ப்போம்”

சுரேஷ் சிரித்ததில் அவனுக்கு டீ புரையேறியது.

“என்ன மாமா நீ தான் பேசறியா? கடலப் போட்றவன்லாம் நீ ஓட்றதுக்கு பயந்தே ஓடறான்… நீதானா கடலப் போட முடியலன்னு ஃபீல் பண்ற… என்னால நம்ப முடியல… அதுக்கெல்லாம் மூஞ்சியில கொஞ்சம் நல்லப்பயன் கலை வேணும் மாம்ஸ், அடிக்கடி காலேஜ் பக்கம் போகனும்.. நம்மள மாதிரி மாப்புள பெஞ்சுக் காரங்களுக்கெல்லாம் அது வராது மாம்ஸ்… இண்டர்னலுக்கு ஒரு தடவ க்ளாஸ்க்குப் போனா புதுசா ஒரு பையன் ஜாய்ன் பண்ணியிருக்கான்னு தான் நெனச்சுப்பாளுங்க… சும்மா காமெடி பண்ணாத ஆமா”

“டேய்… நாம என்ன கடலப் போடப் புடிக்காமயாக் கடலப் போடாம இருக்கோம்? கடலப் போடத் தெரியாமதான இப்படி அடுத்தவன ஓட்டிக்கிட்டுத் திரியறோம்…நம்ம மூஞ்சியில மட்டும் எப்பட்றா ஒரு பொறுக்கி கலை இருக்கு?”

“என்ன மாமா எங்களையும் கூட சேத்துட்ட?”

“நக்கலு? நாயே இந்தவாரம் டாஸ்மாக்கு நீயில்லடி”

“என்ன மாமா நீ வேற நான் வேறயா நீ பொறுக்கின்னா நான் பொறுக்கிக்கி”

“சரி போதும் நிறுத்து… எப்ப வீடு பாக்கப் போலாம்?”

“மாமா, நமக்கு இந்த மாசம் செம் ஆரம்பிக்குது… செம் முடிஞ்சு பாத்துக்கலாம்”

“டேய் செம் முடிஞ்சிட்டா அப்புறம் நெறையப் பேர் வெளியில வீடு தேடுவானுங்கடா… அப்புறம் வீடு கிடைக்காது, அதுவும் நான் பாக்குற மாதிரி வீடு கிடைக்காது”

“நீ பாக்குற மாதிரியா?” அதுவரை இருவரும் பேசுவதை ஒரு நக்கல் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த விஜய் கேட்டான்.

“ஆமா ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல நமக்கு வீடோ இல்ல ரூமோ இருக்கனும்… கிரவுண்ட் ஃப்ளோர்ல ஓனர் வீடு… ஓனருக்கு ஒரு பொண்ணு” – மாமா.

“மாமா நீ தமிழ் சினிமா பாத்து நெறைய கெட்டுப் போயிட்ட போல இருக்கு… காலேஜ்ல தனியா இருக்கிற பொண்ணுங்ககிட்டயே நம்மால பேச முடியல… அப்பா, அம்மா வோட வீட்ல இருக்கிறப் பொண்ணப் பிக்கப் பண்றதெல்லாம் நடக்கிற காரியமா?”

“டேய் காலேஜ் பொண்ணுங்கள விட்டுத் தள்ளு, அது ரிஸ்க்கு… ஒரே வயசுல காதலிச்சாப் பொண்ணுக்கு ஒரு 23, 24 வயசுலையே கல்யாணம் பண்ணப் பாப்பாங்க…நமக்கு 27, 28 லதான் யோசிப்பாங்க… அதனால நம்மள விட சின்னப் பொண்ணா ஒரு பத்தாவது படிக்கிறப் பொண்ணா பாத்து இப்ப இருந்தே டெவலப் பண்ணினா கல்யாணத்துக்குக் கரெக்டா இருக்கும்ல? என்ன நான் சொல்றது?”

“மாமா.. கொழந்தப் புள்ளைங்க மனசக் கெடுக்கப் பாக்கற, உள்ளத் தள்ளிடப் போறாங்க”

“ஆமாடா இப்பவே ஒரு பொண்ணு அவனுக்கு செட் ஆயிட்ட மாதிரி நீயும் ஏத்தி விடு… இதெல்லாம் இந்த வாரம் டாஸ்மாக்குல டிஸ்கஸ் பண்ணிக்கலாம்… அடுத்தது அந்த எச்சோடி (HOD) வாட்டர்ஸ்ப்ரே வாயன் க்ளாசு… க்ளாசுக்குக் கெளம்புவோம்டா” – இது சுரேஷ்.

அந்த வாரம் சனிக்கிழமை இரவு மூன்று பேரும் டாஸ்மாக் கிளம்பினார்கள். வழியிலேப் பார்த்த சீனியர் ஒருவன் “என்ன மாமா சனிக்கிழமை ராத்திரி எங்க கிளம்பிட்ட… சரக்கா?”

“ஆமா பாஸ்… சனி நீராடுன்னு அவ்வையாரே சொல்லியிருக்காங்கல்ல” சிரித்துக் கொண்டே சொன்னான் மாமா.

“ஃபர்ஸ்ட் இயர்லையே இப்படியா? வெளங்க மாட்டீங்கடா” – சீனியர்.

“நாதாறி… இதென்னமோ வெளங்கிட்ட மாதிரி… மேத்ஸ்-1 ல விழுந்த அரியருக்கு நம்மகிட்ட நோட்ஸ் கேட்டான்… நம்மள சொல்ல வந்துட்டான்” சீனியர் போய்விட்டான் என்று தெரிந்ததும் அவனைப் பற்றி சிலாகித்தான் மாமா.

“விடு விடு கோபத்த இப்பவே எறக்கிட்டு அப்புறம் சரக்குக்கு வேலையில்லாமப் பண்ணிடாத”

டாஸ்மாக் உள்ளே நுழைந்ததும் தெரிந்த முகத்துக்கெல்லாம் ஒரு ஹாய் சொல்லிவிட்டு ஒரு மூலை டேபிளில் போய் அமர்ந்தார்கள்.
ஆர்டர் செய்ததெல்லாம் வர வர வந்த வேகத்தில் காலியாகிக் கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மூன்று பேரும் அரை போதைக்குப் போக ஆரம்பித்தார்கள்.

“மாமா இப்ப சொல்லு ஒன்னோட பிளான… எங்க வீடு பாக்கறோம்? எப்ப பாக்கறோம்” ஆரம்பித்தான் சுரேஷ்.

“நான் என்ன வீடா கட்டப் போறேன் பிளானக் கேட்டுட்டு இருக்க? நாளைக்கே வீட்டப் பாக்கறோம் அட்வான்ஸ் கொடுக்கறோம்… இந்த செம் முடிஞ்சதும் திங்ஸ் எல்லாம் கொண்டு போய் வச்சிட்டுதான் ஊருக்குப் போறோம்”

“சரி மாமா… பாக்கறதுதான் பாக்கறோம் 3 பொண்ணுங்க இருக்கிற வீடாப் பார்ப்போம்” – தன்னுடைய கவலை விஜய்க்கு.

“ஏண்டா அலையற… மொதல்ல ஒரு பொண்ணு இருக்கிற வீடே கிடைக்குதான்னுப் பார்ப்போம்… எத்தனப் பொண்ணு இருந்தாலும் எல்லாருமே ட்ரை பண்றோம்… ஒருத்தனுக்கு செட் ஆயிடுச்சுன்னா மத்தவங்க கழண்டுக்குவோம் ஓக்கே வா? மகனே இதுல எவனாவது பாலிடிக்ஸ் பண்ணீங்க அவ்ளோதான்”

“அதுக்குதான் மூனு பொண்ணு இருக்கிற மாதிரி பாக்கலாம்னேன்”

“அப்புறம் மூனுல எனக்கு அதுதான் வேணும் இதுதான் வேணும்னு அடம்பிடிச்சீங்கன்னா”

சத்தம்போட்டு சிரித்தான் சுரேஷ் “ஏண்டா இன்னும் வீடேப் பாக்கல… அதுக்குள்ள இல்லாதப் பொண்ணுக்கு சண்ட போட ஆரம்பிச்சாச்சா?”

“டேய் இதுக்காகவே நாளைக்கே வீட்ட பாக்கறோம்… அடுத்து ரூட்ட பாக்கறோம்”

அவர்கள் வாழப் போகிற வீட்டைப் பற்றியும், வரப்போகிற ஓனர் பெண்ணைப் பற்றியும் டிஸ்கசன் முடிக்கும்போது போதை குறைந்த மாதிரி இருந்தார்கள்.அடுத்து ஒரு குவார்ட்டர் சொல்லி இன்னொரு ரவுண்ட் போதையை ஏற்றிக்கொண்டு ஹாஸ்டல் வந்து தூங்கியபோது மூன்று பேர் கனவிலும் மொட்டை மாடி வீடும், பத்தாம் கிளாஸ் பெண்ணும் தப்பு தப்பு தேவதையும் தான்!

அடுத்த நாளே வீடு தேடும் படலம் தொடங்கியது. புரோக்கரைப் பிடித்து வீதி வீதியாக சுற்றினாலும் ஒரு வீடும் இவர்கள் எதிர்பார்த்த மாதிரியில்லை.
ஒன்று சுற்றிலும் பேச்சிலர்கள் மட்டும் வாழும் ரூம்களாயிருந்தன. அல்லது மகன், மகள் எல்லாம் US இல் செட்டில் ஆகிவிட தனியாக இருக்கும் ரிட்டையர்டு தம்பதிகள் வீடாக இருந்தது. ஒரு நாள் முழுக்கத் தேடியும் ஒரு வீடும் கிடைத்தபாடில்லை.

“விஜய் டீ சொல்லு” , விஜயை அனுப்பிவிட்டு ஒரு தம்மை எடுத்துப் பற்ற வைத்தான் மாமா.ஒரு பெரிய இழுப்பு இழுத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் புகையை வெளியே விட்டுக் கொண்டிருந்தான்.

டீயைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு கேட்டான் விஜய், “என்ன மாமா ரொம்ப திங்க் பண்ற மாதிரி ஆக்ட் கொடுக்கற, என்னா மேட்டரு”

“நாமப் போற ரூட் சரியில்லயோன்னு நெனைக்கிறேன்… ”

“என்னா சொல்ற”

“ஆமாடா, வீட்டப் பாத்துட்டுப் பொண்ணப் பிக்கப் பண்றத விட, மொதல்ல பொண்ணப் பார்ப்போம் அப்புறம் அவ வீட்டப் பார்ப்போம்”

“இது மேட்ரு”

( அடுத்தப் பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

.... இங்கே பதியப்பட்டது அருட்பெருங்கோ | 17 மறுமொழிகள் »