‘மரணம்’ என்ற தலைப்பில் நான் எழுதாத காவியத்திற்கு தேன்கூடு வாக்கெடுப்பில் மூன்றே முக்கால் ஓட்டுக்கள் விழுந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எழுதப்படாத என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த ஒண்ணே முக்கால் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். (பின்ன, மீதி ரெண்டு ஓட்டும் நானே இல்ல போட்டுக்கிட்டேன்!). இதே தருணத்தில் இப்போட்டியை நடத்தும் தேன்கூடு குழுவினருக்கும், தமிழோவியக் குழுவினருக்கும், இப்படைப்பை எழுதாமலிருக்கத் தூண்டுகோலாக இருந்த வ.வா.சங்க நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போட்டியில் கலந்து கொல்லாதது எனக்கு மிக நல்லதொரு அனுபவமாய் இருந்தது. இன்னும் அதிக வாக்குள் வாங்க எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது என்ற உண்மையை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது, மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டும் என்ற விழிப்பு எனக்கு கிடைத்தது.
எழுதப்படாத எத்தனையோ படைப்புகள் இருக்க, எனக்கு ஓட்டிட்டு (அட ஓட்டு போட்டுன்னு சொல்ல வந்தேன். ஓட்டறது பத்தி இல்லை) சிறப்பித்த இந்த நண்பர்களின் அபரிதமான ஊக்குவிப்பால் அடுத்த முறை ஒரே ஒரு படைப்புடன் நிறுத்தாமல் கதை, கவிதை, கட்டுரை என பலவற்றையும் எழுதாமல் இருப்பேன் என கூறிக் கொள்கிறேன். இந்த நண்பர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்களேயானால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல ஏதுவாக இருக்கும்.
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கு பெற்ற மற்றவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
டிஸ்கிக்கள்
1) இப்படி ஒரு நன்றி பதிவு போட்ட எஸ்.கேயும், போட்டிக்கு போகமலே ஆறுதல் பரிசு அடிக்கப் பார்க்கும் இட்லிவடையும் ஆளுக்கு 70 -80 பின்னூட்டம் வாங்குவதைப் பார்த்த புகைச்சலில் இந்த பதிவு எழுதப்படவில்லை.
2) எனது பதிவு எண்ணிக்கை ஏற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை.
3) இந்த பதிவில் வாழ்த்துக்கள், நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி என்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வந்தால் அதற்கு நான் காரணம் இல்லை. போலீஸ்கார் எல்லாம் இதற்கு முன்மாதிரியாக இருக்கும் அந்தப் பதிவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4) வாத்தியார் ‘மரணம்’ன்னு தலைப்பு குடுத்தாலும் குடுத்தார் 80 பேரு கதையும் கவிதையுமா எழுதித் தள்ளிட்டாங்க. போதாததுக்கு ஆளுக்கு ஒரு நன்றி பதிவு வேற. தமிழ்மண முகப்பு பூர இந்த நன்றி அறிவிப்பா இருக்கா, மாதாமாதம் இப்படி ஒரு படலம் நடக்கப் போகுதேன்னு ஒரு பயம். அதனால சும்மா ஒரு கலாய்த்தல். அவ்வளவுதான். அதுவும் இதுக்கு நேயர் விருப்பம் வேற.
5) இந்த பதிவோட நம்ம அட்லாஸ் பொறுப்பு முடிஞ்சு போச்சு. அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றிப் பதிவு. சங்கத்திற்கு, வந்து படிச்சவங்களுக்கு, செய்ய வேண்டியதை சரியா செஞ்சவங்களுக்கு, எல்லாருக்கும் நம்ம நன்றி.








